நற்றமனார்
From Tamil Wiki
நற்றமனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
நற்றமனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.
இலக்கிய வாழ்க்கை
நற்றமனார் பாடிய பாடல் நற்றிணையில் 133-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. திருமணம் செய்து கொள்வதற்கு தேவையான பொருளை நாடி பிரிந்து சென்ற தலைவனால் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை தலைவி, தன்னை ஆற்றுப்படுத்தும் தோழிக்கு உரைப்பதாக குறிஞ்சித் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- ஆண் மகன் பிரிந்து சென்ற மகளிருக்கு துயரத்தால் தோள்கள் மெலிந்து கைவளையல்கள் நெகிழ்ந்தன. கண்கள் தனது இயல்பான வாள் போன்ற கூர்மையை இழந்தன. நெற்றியில் பசலை திட்டுகள் படர்ந்துள்ளன. இடைப்பகுதி மெலிந்து அரைஞாண் மணிகள் அழுத்தி புள்ளித்திட்டுகள் ஏற்பட்டுள்ளன. ஊர்பெண்கள் அலர் சொல்லி தூற்றுகின்றனர்.
- உவமை: தலைவர் விரைவில் வருவார் என்ற தோழியின் ஆறுதல் சொல், கொல்லன் உலையில் வைத்து அடித்த இரும்பில் நீர் தெளிக்கும்போது கிளம்பும் சூடான ஆவியின் வெப்பத்தை போல தாங்க முடியாத துன்பத்தை தருகிறது.
பாடல் நடை
நற்றிணை - 133
- திணை: குறிஞ்சி துறை: வரைவிடைவைத்துப் பிரிவாற்றாளாய தலைவி வற்புறுத்துந் தோழிக்குச் சொல்லியது.
தோளே தொடிகொட்பு ஆனா கண்ணே
வாளீர் வடியின் வடிவிழந் தனவே
நுதலும் பசலை பாயின்று திதலைச்
சில்பொறி அணிந்த பல்காழ் அல்குல்
மணியேர் ஐம்பால் மாயோட் கென்று
வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்ற
நாமுறு துயரஞ் செய்யலர் என்னும்
காமுறு தோழி காதலம் கிளவி
இரும்புசெய் கொல்லன் வெவ்வுலைத் தெளித்த
தோய்மடற் சின்னீர் போல
நோய்மலி நெஞ்சிற்கு ஏமமாஞ் சிறிதே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க. கோவிந்தன்
- நற்றிணை - 133:Tamilvu
✅Finalised Page