second review completed

திருவாய்மொழி நூற்றந்தாதி

From Tamil Wiki

திருவாய்மொழி நூற்றந்தாதி (பொ.யு. 15-ம் நூற்றாண்டு) மணவாள மாமுனிகள் திருவாய்மொழியைப் போற்றி எழுதிய அந்தாதி நூல்.

ஆசிரியர்

திருவாய்மொழி நூற்றந்தாதியை இயற்றியவர் மணவாள மாமுனிகள்.

நூல் அமைப்பு

நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியில் 100 பதிகங்கள் உள்ளன. திருவாய்மொழியில் அமைந்த ஒவ்வொரு பதிகத்துக்கும் ஒரு வெண்பா என 100 வெண்பாக்களைக் கொண்டது திருவாய்மொழி நூற்றந்தாதி. திருவாய்மொழியின் ஒவ்வொரு பதிகத்திலுமுள்ள தொடக்கச் சொல்லை அப்பதிக வெண்பாவின் முதற்சொல்லாகவும், பதிகத்தின் இறுதிப் பாடலிலுள்ள இறுதிச் சொல்லை வெண்பாவின் ஈற்றுச் சொல்லாகவும் அமைத்து வெண்பா வரும்படி அமைத்து நூற்றந்தாதி நூல் நம்மாழ்வாரின் புகழைப் பாடுகிறது. இதனால் நூற்றந்தாதி வெண்பாக்களும் திருவாய்மொழி நூலைப் போலவே அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன.

ஒவ்வொரு திருவாய்மொழி பதிகத்திற்கும் அதன் சாரமான பொருளை உள்பொதிந்து, நம்மாழ்வாரின் பெருமையையும் கூறும் வெண்பாக்கள் இயற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு வெண்பாவின் முதற்சொல்லும் அது குறிக்கும் திருவாய்மொழிப் பதிகத்தின் முதற்சொல்லாகவும், வெண்பாவின் இறுதிச்சொல் அப்பதிகத்தின் இறுதிச்சொல்லாகவும் அமைந்துள்ளன. நூலின் முதல் சொல் 'உயர்வு' எனத் தொடங்கி இறுதிச்சொல் 'உயர்வு' என மண்டலித்து முடிகிறது.

திருவாய்மொழி நூற்றந்தாதிக்கு பிள்ளைலோகம் ஜீயர் எழுதிய உரை சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

இந்த அந்தாதி வெண்பாக்கள் திருவாய்மொழி நூலின் ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் அச்சிடப்பட்டுள்ளன.

திருவாய்மொழி நூற்றந்தாதிக்கு நாதமுனிகள் வடமொழியிலும், ஈஸ்வர முனிவரும் சொட்டை நம்பியும் தமிழிலும் தனியன்கள் (பாயிரம்) இயற்றியுள்ளனர்.

சிறப்புகள்

அனத்யயன காலத்தில் வைணவ ஆலயங்களில் கோயில் திருவாய்மொழி மற்றும் இராமானுச நூற்றந்தாதிக்கு பதில் திருவாய்மொழி நூற்றந்தாதி சேவிக்கப்படுகிறது.

"ஒவ்வொரு வெண்பாவிலும் மாறன் பெயர் வரவேண்டும். மையக்கருத்து இடம் பெற வேண்டும். அந்தத் திருவாய்மொழிக்கான முக்கியமான விளக்கக் குறிப்பும் உள்ளே பெய்திருக்க வேண்டும். ஈடு போன்ற பெரும் விளக்க உரைகளோடு உயிரான கருத்தில் நன்கு பொருந்துவதாய் அமைந்திருக்க வேண்டும். இத்தனை அம்சங்களும் பூர்ணமாய் நிறைய திருவாய்மொழி நூற்றந்தாதியை இயற்றியுள்ளார் ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகள். இதைச் சுருக்கமாக வெண்பாவில் ஈடு என்று சொல்லிவிடலாம். அவ்வண்ணம் நன்கு சிறப்புற அமைந்த துணை நூல் இதுவாகும். இந்தத் திருவாய்மொழி நூற்றந்தாதிக்கு பிள்ளைலோகம் ஜீயர் என்பவருடைய அருமையான வியாக்கியானம் இருக்கிறது. வெண்பாக்களும், வியாக்கியானமும் சேர்ந்து பெருங்கடலுக்குள் சிறு கடல் என்னும் ஆழமும் விரிவும் கொண்டு இலகுபவை" என்று ஶ்ரீரங்கம் மோகனரங்கன் திருவாய்மொழி நூற்றந்தாதியைப் பற்றி குறிப்பிடுகிறார்.

பாடல் நடை

உயர்வே பரன் படியை உள்ளதெல்லாம் தான் கண்டு
உயர் வேதம் நேர் கொண்டுரைத்து மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு ( 1)


வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் – நீடு புகழ்
வண்குருகூர் மாறன் இந்த மாநிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி அருள் பத்து (2)

உசாத்துணை



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.