being created

தமிழ்ப் புத்தகாலயம்

From Tamil Wiki
Revision as of 10:43, 16 July 2022 by ASN (talk | contribs) (Para Corrected, Image Added)
கண. முத்தையா

எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், பதிப்பாளருமான கண. முத்தையா, 1946-ல், சென்னையில் நிறுவிய பதிப்பகம் தமிழ்ப் புத்தகாலயம். பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, பி.ஜி.கருத்திருமன், பேராசிரியர் கா.சிவத்தம்பி, கா.அப்பாதுரை, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, அகிலன், தொ.மு.சி.ரகுநாதன், சாமி.சிதம்பரனார், ராஜம் கிருஷ்ணன் சாலை இளந்திரையன் எனப் பலரது படைப்புகளை தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. எழுத்தாளர்கள் பலருக்குப் பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுத் தந்துள்ள பதிப்பகம் தமிழ்ப் புத்தகாலயம்.

எழுத்து, வெளியீடு

கண. முத்தையா பர்மாவில் நேதாஜியின் இந்திய தேசியப் படையில் பணியாற்றிய காரணத்தால், கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். போர்க் கைதியாக ஒரு வருடம் இருந்தார். சிறையில் அவர் ராகுல் சாங்கிருத்தியாயனின் ‘சாம்ய வாத்ஹி ஹயும்’ , ‘வோல்கா ஸே கங்கே’ என்ற இரண்டு நூல்களைப் படித்தார். அவற்றைத் தமிழில் மொழி பெயர்த்துக் கையெழுத்துப் பிரதியாக வைத்திருந்தார்.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும் கல்கத்தா வந்தார். பின் அங்கிருந்து சென்னைக்குப் புறப்பட்டு வந்தார். வெ. சாமிநாத சர்மாவை ஆசிரியராகக் கொண்டு பர்மாவில் இருந்து வெளிவந்த தமிழ் இதழ்களான ‘தனவணிகன்’ மற்றும் ‘ஜோதி’ இதழில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டும், அங்கு சில நூல்களை அச்சிட்ட அனுபவம் மூலமும், 1946-ல், ’தமிழ்ப் புத்தகாலயம்’ பதிப்பகத்தை கண. முத்தையா ஆரம்பித்தார். இவரைப் பதிப்பகம் ஆரம்பிக்குமாறு ஆலோசனை கூறியவர்கள் ‘சக்தி’ வை.கோவிந்தன், ஏ.கே.செட்டியார் மற்றும் முல்லை முத்தையா.

முதலில் சிறு வெளியீடாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ எழுதிய ‘புரட்சி’ நூலைக் கொண்டு வந்தார். அதன் பின் ராகுல் சாங்கிருத்தியாயனுக்குக் கடிதம் எழுதி அவரது அனுமதி பெற்று ‘சாம்ய வாத்ஹி ஹயும்’ , ‘வோல்கா ஸே கங்கே’ நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘பொதுவுடைமைதான் என்ன?’ , ’வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற இரண்டு நூல்களையும் கொண்டு வந்தார். ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ மிக அதிகம் விற்பனையானதுடன் அரசியல் கட்சியினர், அரசியல் தலைவர்கள் எனப் பலரது பாராட்டுதல்களையும் பெற்றது. தொடர்ந்து மாசேதுங்கின் ‘கலையும் இலக்கியமும்’ , ஜூலிஸ் பூசிக், மாவோ, லெனின், ஸ்டாலின் போன்றோரது நூல்கள், கார்க்கியின் கட்டுரைகள் எனப் பல நூல்களை வெளியிடத் தொடங்கினார் கண. முத்தையா.

புதுமைப்பித்தனுடன் ஏற்பட்ட நட்பால் அவரது சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். தொடர்ந்து பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, பி.ஜி.கருத்திருமன், பேராசிரியர் கா.சிவத்தம்பி, துரை அரங்கனார், கா.அப்பாதுரை, கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, அகிலன், தொ.மு.சி.ரகுநாதன், சாமி.சிதம்பரனார், ராஜம் கிருஷ்ணன் சாலை இளந்திரையன் எனப் பலரது படைப்புகளைத் தனது தமிழ்ப் புத்தகாலயம் மூலம் வெளியிட்டார். ஹெப்சிபா ஏசுதாசன் , இந்திரா பார்த்தசாரதி , மகரிஷி, கு.அழகிரிசாமி , தொ.மு.சி. ரகுநாதன் , க.நா .சுப்ரமண்யம், போன்றோரின் முதல் படைப்புக்களை முதலில் வெளியிட்டது தமிழ்ப் புத்தகாலயம் தான்.




தமிழ்ப் புத்தகாலயம் பதிப்பித்த நூல்கள் பட்டியல்

விருதுகள்

தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்ட பல நூல்களுக்கு பாரதீய ஞானபீடப்பரிசு, சாகித்ய அகாடமிப் பரிசு, தமிழ்நாடு அரசு பரிசு, ராஜாசர் அண்ணாமலைச் செட்டியார் பரிசு, இலக்கியச் சிந்தனைப்பரிசு, பாரதீய பாஷா பரிஷத் பரிசு, ரங்கம்மாள் நினைவுப் பரிசு, அனந்தாச்சாரி அறக்கட்டளை பரிசு எனப் பல்வேறு பரிசுகள் கிடைத்துள்ளன.

உசாத்துணை

கண. முத்தையாவின் பதிப்புப் பணி பற்றி அகிலன கண்ணன்

தமிழ்ப் புத்தகாலயம் வெளியீடுகள்பற்றிய குறிப்பு




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.