முதலியார் ஓலைகள்
முதலியார் ஓலைகள் (முதலியார் ஆவணங்கள்) பழைய திருவிதாங்கூர் சமஸ்தானம், இன்றைய கன்யாகுமரி மாவட்டம் பகுதியில் அகஸ்தீஸ்வரம், தோவாளை நிலவருவாய் வட்டத்தில் நிதிநிர்வாகத்தை நடத்திவந்த அழகியபாண்டியபுரம் முதலியார்கள் என்னும் குடும்பத்தினர் திருவிதாங்கூர் அரசுடன் நடத்திவந்த கடிதப்போக்குவரத்து ஓலைகள். இவை கவிமணி தேசிக வினாயகம் பிள்ளையால் கண்டெடுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டன. தொடர்ந்து பதிப்பிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் பதிப்பிக்கப்படாத ஓலைகள் உள்ளன. இவை எழுநூறாண்டு காலம் முன்பிருந்த கேரள நிலப்பகுதியின் நிர்வாகம், வருவாய் மற்றும் பண்பாட்டை ஆராய்வதற்கான தரவுகளை அளிக்கும் மூல ஆவணங்களாகக் கருதப்படுகின்றன. சோழர்கால நிர்வாகமுறை பற்றிய தகவல்களையும் அளிக்கின்றன.
நிகழ்வுக்குறிப்புகள்
முதலியார் ஓலைகள் தமிழக வரலாற்றின் தொன்மையான நிகழ்வுக்குறிப்பு. ( Chronicle ) தமிழகம் சார்ந்த பிற குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுக்குறிப்புகள் மோடி ஆவணங்கள், கோவில் ஒழுகு மற்றும் ஆனந்தரங்கம் பிள்ளை எழுதிய தினப்படி சேதிக்குறிப்பு (ஆனந்தரங்கம்பிள்ளை)
அழகியபாண்டியபுரம்
பழைய திருவிதாங்கூர் அரசில் நாஞ்சில்நாடு பன்னிரண்டு பிடாகைகள் என்னும் ஊர்த்தொகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. அவற்றில் ஒன்று அழகியபாண்டிபுரம் பிடாகை. இது நாகர்கோயிலுக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ஊரில் தேச ஆச்சாரியார் ஆலயம், வீரவநங்கை ஆலயம், வெங்கடாசலபதி ஆலயம் என்னும் மூன்று தொன்மையான ஆலயங்கள் உள்ளன. பொ.யு. 11-ம் நூற்றண்டு முதல் 19-ம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகள் இங்கே உள்ளன.
முதலியார்கள்
அழகியபாண்டியபுரம் முதலியார்கள் சைவ வேளாளர்கள். நாஞ்சில்நாட்டு வேளாளர்களைப் போலன்றி மக்கள் வழி சொத்துரிமை கொண்டவர்கள். முதலியார்கள் என்பது இவர்களுக்கு சோழர்காலத்தில் அரசர்கள் அளித்தபட்டம். வணிகராமன், சேரர்கோன், போன்ற பட்டங்களும் இவர்களுக்கு உண்டு. இவர்கள் காவேரிப்பூம்பட்டினத்தில் இருந்து வந்தவர்கள் என குடிவரலாறு கொண்டிருக்கிறார்கள். ஆகவே நகரத்தார் என்றும் அழைக்கப்படுகிறார்கள். களக்காட்டில் பாண்டியமன்னனிடம் கணக்காளர்களாக பணியாற்றினர் அங்கிருந்து கருங்குளம் வழியாக அழகியபாண்டிபுரம் வந்தனர். முதலியார் ஓலைகளில் மிகப்பழையது எனக்கருதப்படும் ஓலை பொ.யு. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதில் இவர்களின் பெயர் குணவன் வடுகனான இராஜேந்திரசோழன் வைராவணன் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்போதே இவர்கள் குடி மற்றும் சிறப்புப் பட்டத்துடன் இருந்தமையால் இவர்களின் வரலாறு 13-ம் நூற்றாண்டுக்கு முந்தையது என ஊகிக்கலாம்.
தொன்மங்களின் படி நாஞ்சில்நாட்டில் குடியேறிய முதலியார்கள் நாஞ்சில்நாட்டை ஆட்சிசெய்துவந்த நாஞ்சில்குறவர்கள் என்னும் ஆட்சியாளர்களை வஞ்சத்தால் கொலைசெய்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினர். தொடக்கத்தில் கோட்டாறு அருகே வடிவீஸ்வரம் பகுதியில் குடியிருந்தனர். இவர்களின் குடும்பக் கிளைகள் ஆளூர் என்னும் ஊரிலும் உள்ளன. இவர்களுக்கு வெண்கலமுரசு, கொம்பு, பல்லக்கு ஆகிய அரசமரியாதைகள் இருந்தன.பிடாகைக்காரர்களின் கூட்டங்களைத் தலைமைதாங்கி நடத்துவது ,வரிவசூல் செய்து அரசுக்கு அனுப்புவது ஆகியவை இவர்களின் கடமைகள். அழகியபாண்டியபுரம் முதலியார்களின் வரிவசூல் பொறுப்பு 1818-ல் கர்னல் மன்றோ திருவிதாங்கூர் ரெசிடெண்ட் ஆக இருந்தபோது ஓர் அரசாணைப்படி நிறுத்தப்பட்டது.
கண்டெடுப்பு பதிப்பு
கவிமணி 1905-ல் அழகியபாண்டியபுரம் சென்று அவர்களின் சேமிப்பில் இருந்த ஓலைகளைப் பார்த்தார். அவருக்கு முன்னரே மனோன்மணியம் பெ. சுந்தரம் பிள்ளை பண்டித கணேசபிள்ளை என்பவரை இந்த ஓலைகளை ஆராயும்பொருட்டு அனுப்பியிருக்கிறார். கணேசபிள்ளை முதலியார் ஓலைகளில் இருந்த 'சுசீந்தைப்பத்து' என்னும் நூலை பிரதிசெய்துகொண்டார். அந்நூலை 1950-ல் கவிமணியின் மாணவரான உமைதாணுப்பிள்ளை வெளியிட்டார். முதலியார் ஓலைகளை கவிமணி உதவியுடன் திருவிதாங்கூர் அரசர் விலைகொடுத்து வாங்கிக்கொண்டார். மொத்தம் 600 ஓலைகள் அவ்வாறு விற்கப்பட்டன. ஆனால் அவற்றை திருவிதாங்கூர் அரசு வெளியிடவில்லை. அவற்றில் 107 ஓலைகளை கவிமணி பி. சிதம்பரம்பிள்ளை என்னும் வழக்கறிஞர் வழியாக வெளியிட்டார். 1930-ல் இந்த நூல் வெளியாகியது. எஞ்சிய ஆவணங்கள் சில மலையாளத்தில் வெளியாகியிருக்கின்றன. அ.கா. பெருமாள் ஓலைகளை பரிசோதித்து 15 ஆவணங்களைக் குறிப்புகளுடன் மக்கள் பிரசுரம் வெளியீடாக 1999-ல் பிரசுரித்தார். அதன்பின் 'முதலியார் ஆவணங்கள்' என்ற பேரில் 89 ஆவணங்களைத் தொகுத்து தமிழினி வெளியீடாக 2006-ல் வெளியிட்டார்.
உள்ளடக்கம்
முதலியார் ஆவணங்களில் கீழ்க்கண்டவை பேசப்பட்டுள்ளன என அ.கா.பெருமாள் கருதுகிறார்
- நிலம்,மனை, வீடு முதலியவை தொடர்பான விலைப்பத்திரம், கடன் பத்திரம், ஸ்ரீதனப்பத்திரம் , குத்தகை பத்திரம்
- நாஞ்சில்நாட்டின் 12 பிடாகைகளில் நடந்த நாட்டுக்கூட்டம் பற்றிய செய்திகள்
- திருவிதாங்கூர் அரசர் அனுப்பிய ஆணைகள், தனிப்பட்ட கடிதங்கள்
- விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்கர்கள், ஆற்காடு நவாப்புகள், நெல்லையின் கொள்ளைக்காரர்கள் ஆகியோரின் படையெடுப்பு மற்றும் சூறையாடல் பற்றிய செய்திகள்
- அடிமை விற்பனைச் செய்திகள்
- வரிக்குறைப்பு விண்ணப்பங்கள்
- நீதிமன்ற தீர்ப்புகள், கருணை மனுக்கள்
- சாதிக்கலவரம், வரிமறுப்பு போராட்டம் பற்றிய அறிக்கைகள்
மொழி
பொ.யு. 1534-ம் ஆண்டு எழுதப்பட்ட ஆவணத்தின் மொழி:
கொல்லம் 709 மாண்டு ஆனி மாசம் 7 தேதி வஞ்ஞிப்புழை உழுத்திரன் கண்டன் மனிச்சமாய் நெய்தமங்கலத்து நாராயணன் நாராயணனு நாராயண மங்ஙலத்து கேசவன் கேசவனும் போம் ஆளூர் நகரத்தது ஆண்டு கொண்ட நயினார் உடையான் குட்டிக்கு கணக்கெழுதிக்கொடுத்த பரிசாவது பரசேரி தேவ…க்கு எதுப்பையாய் வாங்கித்தந்த பணம் இருபத்தஞ்சும் அதற்கடுத்த ஆடிமாதம் 25 கொடுப்பது கொடாழாகில்…
வரலாற்று இடம்
முதலியார் ஆவணங்கள் தமிழக வரலாற்றைப் பற்றி இன்று கிடைக்கும் நேரடியான நிகழ்வுக்குறிப்புகளில் முக்கியமானவை. அக்காலத்து வரலாற்று நிகழ்வுகளுடன் அன்றாட நிர்வாகம் மற்றும் சமூக அமைப்பு ஆகியவற்றை புரிந்துகொள்ள முக்கியமான ஆதாரங்களாக இவை கருதப்படுகின்றன.
உசாத்துணை
- முதலியார் ஆவணங்கள் அ.கா.பெருமாள் தமிழினி வெளியீடு 2006
- அ.கா. பெருமாள் பதிப்பித்த முதலியார் ஓலைகள்- பா.தாமரைச்செல்வி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
14-Sep-2023, 22:41:24 IST