கோவில் ஒழுகு
கோவில் ஒழுகு (கோயிலொழுகு) (1137)நூல் இதிகாச புராண காலத்திலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு வரையான ஸ்ரீரங்கம் கோவிலின் வரலாற்றைச் சொல்லும் நூல். இந்நூல் ஸ்ரீரங்கம் கோவிலின் அதிகாரிகளால் கல்வெட்டுகளிலிருந்தும், செவிவழிச் செய்திகளில் இருந்தும் எழுதப்பட்டது.
நூல், காலம்
ஶ்ரீரங்கம் கோயிலொழுகு நூல் ஶ்ரீரங்கம் கோயிலின் வரலாற்றையும், தொன்மங்களையும், அன்றாடபூசைகளையும், விழாக்களையும், பிற ஒழுங்குகளையும் விரிவாகச் சொல்லும் நூலாகும். ஶ்ரீரங்கம் ஆலயத்தின் அதிகாரிகளால் கல்வெட்டுக்களில் இருந்தும் செவிவழிச்செய்திகளில் இருந்தும் இது தொகுக்கப்பட்டிருக்கலாம். 1017 முதல் 1137 வரை வாழ்ந்த ராமானுஜர் ஆணையின்படி இந்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது என நம்பப்படுகிறது.
பதிப்பு
கோவிலொழுகு பொ.யு. 1976-ல் ஸ்ரீமத் ஸ்ரீ பரமஹம்ஸ ஸ்ரீமந் நாராயண ராமாநுஜ ஜீயரின் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம் நூலின் ஆசிரியரான கிருஷ்ணஸ்வாமி ஐயங்காரால் பதிப்பிக்கப்பட்டது. இந்நூல் ஸ்ரீமத் ஸ்ரீ பரமஹம்ஸ ஸ்ரீமந் நாராயண ராமாநுஜ ஜீயர் ஸ்தாபித்த ஸ்ரீ வைஷ்ணவ க்ரந்த ப்ரகாசந ஸமிதி வெளியிட்டுள்ளது. கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் தன் முன்னுரையில் இந்நூல் பொ.யு. 1888, பொ.யு. 1909 ஆகிய ஆண்டுகளில் அச்சிடப்பட்ட பிரதிகளை மூலமாக கொண்டு 1976-ல் அச்சிடப்பட்டது எனக் குறிப்பிடுகிறார். மேலும் 1888-ல் அச்சிடப்பட்ட பதிப்பே சரியானது என்றும் குறிப்பிடுகிறார்.
ஆசிரியர்
கோவிலொழுகு நூலின் ஆசிரியர் ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரையைச் சேர்ந்த எம்பெருமானார் என்றழைக்கப்படும் ராமானுஜர் எனக் கருதப்படுகிறது. ராமானுஜர் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தியவர். ஸ்ரீரங்கம் கோவிலின் இதிகாச, புராண வரலாறும், ஆழ்வார்கள், எம்பெருமானாருக்கு முந்தைய ஆச்சாரியர்கள் வரலாறும் இந்நூலில் சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளதாலும், எம்பெருமானார் காலத்து வரலாறு விரிவாக எழுதப்பட்டுள்ளதாலும். இந்நூல் எம்பெருமானார் காலத்திலோ, அதற்கு பிந்தைய காலத்திலோ எழுதப்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுகிறது.
மேலும் எம்பெருமானார் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தியது குறித்த குறிப்பு குருபரம்பரை நூலிலும் காணக்கிடைகிறது.
நூலாராய்ச்சி
திருப்பதி ஸ்ரீ வேங்கடேஸ்வரா பல்கலைகழகத்தில் சரித்திரப் பேராசிரியராக இருந்த வி.என். ஹரிராவ் கோவிலொழுகு நூலைப் பற்றிய விரிவான ஆய்வுடன் ஆங்கில மொழியாக்கமும் செய்துள்ளார். இந்நூல் பொ.யு. 1961-ம் ஆண்டு வெளிவந்துள்ளது. அதில் அச்சிடப்படாத ஓலைச்சுவடியையும், கையெழுத்து பிரதி ஒன்றையும் இணைத்துள்ளார். தமிழ் பதிப்பில் இவை இணைக்கப்படவில்லை.
நூல் அடக்கம்
கோவில் ஒழுகு கால வரிசைப் படி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள், பாண்டியர், சோழர், விஜயநகர அரசர்கள் ஆற்றிய தொண்டு பற்றிய குறிப்புகள் அடங்கிய நூல். மேலும் கோவிலில் உள்ள ஒவ்வொரு சன்னதியும், கோபுரமும், மண்டபமும் எந்த மன்னரால் எடுப்பித்து கட்டப்பட்டது என்ற குறிப்பும் இந்நூலில் உள்ளது. விஜயநகர பேரரசு பொ.யு. 1336-ம் ஆண்டு துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்த வரலாறும் இந்நூலில் எழுதப்பட்டுள்ளது.
கோவில் புராணம்
தர்மவர்ம சோழன் காவிரி ஆற்றங்கரையில் கட்டிய ஸ்ரீரங்கம் கோவில் வெள்ளத்தில் புதையுண்டது. தர்மவர்ம சோழனுக்கு பின் வந்த கிளிசோழன் தன் கனவில் வந்த கிளியின் உதவியுடன் ஸ்ரீரங்கம் கோவிலின் விமானத்தை மீட்டெடுத்து திருக்கோவிலைக் கட்டி எழுப்பியதாக கோவில் புராணம் உள்ளது.
நடை
'ததநந்தரம், ராஜமஹேக்தரன், ப்ரதிஸம்வத்ஸரமும் திருக்காவேரி பெருகிவந்ததால் திருவணுக்கன் திருவாசலுக்குள்ளே ஊற்றூறலாயிருக்கையில், அத்தைத்துற்பித்து, திருவனந்தாழ்வான் கண்வளர்ந்தருளுகிறவிடமும் முதலாகத் தளவரிசை பண்ணுவித்து, கோயிலாழ்வாரைச்சூழ எழுந்தருளியிருக்கிற நாராயணர், நாபி, நளிகர், நாகஸயநர், நாரஸிம்ஹர் இருக்கிற தளவரிசை மட்டத்துக்கு மேலேயும் எடுத்துக்கட்டி, தூணும் எழவீசிக் கட்டிவைத்துத் தள வரிசையும் படுப்பித்து, இரண்டாம் ஆவரணத்துத் திருமதிள்களும், தெற்குத் திருவாசல் கோபுரமும், வடவண்டைத் திருவாசலும், தர்மவர்மாவின்வகை கைங்கர்யமான திருக்கோபுரநயிநார் சேநைமுதலியார் கோவில் தவிரத் திருக்கோபுரமும் - தளவரிசையும் ராஜமஹேந்தரசோழன் கைங கர்யமாகையாலே, ராஜமஹேந்த்ரன் திருவீதி என்று வ்யவஹாரம் ௩டந்துவந்தது'. (கோயிலொழுகு. ராஜமகேந்திர சோழன் கைங்கர்யம்)
நூலில் உள்ள அரசர்களின் கைங்கர்யம்
இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அரசர்களின் கைங்கர்யம் காலவரிசைப்படி,
- தர்மவர்மன் கைங்கர்யம்
- கிளிசோழன் கைங்கர்யம்
- ராஜமகேந்திர சோழன் கைங்கர்யம்
- நந்தசோழன் கைங்கர்யம்
- குலசேகரப்பெருமாள் கைங்கர்யம்
- சோழேந்திரசிம்ஹன் கைங்கர்யம்
- கங்கைதேவர் சிங்கணன் தண்டநாயக்கர் கைங்கர்யம்
- விக்ரமசோழனான அகளங்கன் கைங்கர்யம்
- சுந்தரபாண்டியதேவர் கைங்கர்யம்
- எம்மண்டலங்கொண்டு கோவில் பொன்மேய்ந்த பெருமாள் சுந்தரபாண்டியதேவர் கைங்கர்யம்
- குலோத்துங்கசோழன் கைங்கர்யம்
- கம்பயதண்டயநாயக்கர் கைங்கர்யம்
- கரியமாணிக்கத்தண்டயநாயக்கர் கைங்கர்யம்
- மலைப்பெருமாள் கைங்கர்யம்
- வீரநரசிங்கதேவர் கைங்கர்யம்
- ஆகுளூர் வரநாதராயர் கைங்கர்யம்
- தேவப்பெருமாள் கைங்கர்யம்
- வாலநாதராயர் கைங்கர்யம்
- திருவிக்கிரமசோழன் கைங்கர்யம்
- பள்ளிகொண்டான்சோழன் கைங்கர்யம்
- கலியுகராமன் கைங்கர்யம்
- வல்லபதேவன் கைங்கர்யம்
- திருமங்கைமன்னன் கைங்கர்யம்
- பெரியகிருஷ்ணராயர் உத்தமநம்பி கைங்கர்யம்
- நாக மங்கலம் அண்ணப்பவுடையார் கைங்கர்யம்
- திம்ம ராகுத்தர் கைங்கர்யம்
- ஹரிஹர ராயர் கைங்கர்யம்
- உத்தமர்கோவில் ஸ்ரீரங்கராஜர் கைங்கர்யம்
- விருப்பண்ணவுடையார் கைங்கர்யம்
- சக்கராயர் கைங்கர்யம்
- தென்னாயக்கர் கைங்கர்யம்
- சாத்தாத நரசிங்கதாஸர் கைங்கர்யம்
- அண்ண ஆண்டப்ப உடையார் திருமலைதந்தான் கைங்கர்யம்
- அண்ணப்ப உடையார் கைங்கர்யம்
- பராசர் கைங்கர்யம்
- புத்தூர் அழகியமணவாளபெருமாள் கைங்கர்யம்
- கருடவாஹநபண்டிதர் கைங்கர்யம்
- அண்ணப்பருடையார் கைங்கர்யம்
- நாகராஜ உடையார் கைங்கர்யம்
- வழியடிமைநிலையிட்ட உத்தமநம்பி கைங்கர்யம்
- பெரிய சக்ரராயர் கைங்கர்யம்
- மூவெந்திறையார், தீராவினைதீர்த்தார், திருவேங்கடமுடையான் கைங்கர்யம்
- க்ருஷ்ணராய உத்தமநம்பி கைங்கர்யம்
- குடல்சாரவாளநயினார் கைங்கர்யம்
- கோவிந்தராஜர் கைங்கர்யம்
- கம்பராஜாமல்லர் கைங்கர்யம்
- ஜந்நயநாயகக்ர் கைங்கர்யம்
- கம்பயராஜா கைங்கர்யம்
- ஆழ்வார்ஜீயர் கைங்கர்யம்
- அழகர் கைங்கர்யம்
- ஸாளுவதிருமலைராஜா கைங்கர்யம்
- கந்தாடை ராமாநுஜதாஸர் கைங்கர்யம்
- விஸ்வநாதநாயக்கரைக் கொண்டு நிரஸிம்ஹாசாரியார் பண்ணின கைங்கர்யம்
- க்ருஷ்ணப்பநாயக்கர் கைங்கர்யம்
- குமாரக்ருஷ்ணப்பநாயக்கர் கைங்கர்யம்
பிற வரலாற்று நிகழ்வுக்குறிப்புகள்
கோயிலொழுகு தமிழக வரலாற்றின் தொன்மையான நிகழ்வுக்குறிப்பு. ( Chronicle ) தமிழகம் சார்ந்த பிற குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுக்குறிப்புகள் மோடி ஆவணங்கள், முதலியார் ஓலைகள் மற்றும் ஆனந்தரங்கம் பிள்ளை எழுதிய தினப்படி சேதிக்குறிப்பு (ஆனந்தரங்கம்பிள்ளை)
வரலாற்று இடம்
நிகழ்வுக்குறிப்புகள் எனப்படும் நேரடியான வரலாற்றுக்குறிப்புகள் தமிழக வரலாற்றில் ஒன்றிரண்டே கிடைத்துள்ளன. அவற்றில் காலத்தால் தொன்மையானதும், பெரும்பாலும் ஏற்கப்பட்டதுமான வரலாற்று நிகழ்வுக்குறிப்பு ஶ்ரீரங்கம் கோயிலொழுகு. கோயிலின் வரலாறு, கோயிலின் வழிபாட்டுமுறைகள் ஆகியவற்றை விவரிக்கும் இந்நூல் தமிழக வரலாற்றை ஆய்வுசெய்வதற்கும், தமிழக சமயம் மற்றும் ஆலயவழிபாட்டு முறைகளை ஆய்வுசெய்வதற்கும் உரிய முதன்மையான ஆவணங்களில் ஒன்று.
உசாத்துணை
- கோவில் ஒழுகு, தினமலர்
- கோவில் ஒழுகு நூல், பாகம் 1 & 2 ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ
- Koil olugu: The Chronicle of the Srirangam Temple with Historical Notes, Hari Rao V.N.
- கோயிலொழுகு இணையநூலகம்
- கோயிலொழுகு இணைய நூலகம் ஆர்கைவ்ஸ்
- கோயிலொழுகு இணையநூலகம் சேகரம்
- காலவெளியில் ஒரு பயணம் தமிழ் ஹிந்து
- திருவரங்கம் திருக்கோயிலின் பெருமைமிகு வரலாறு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
27-Feb-2024, 20:35:38 IST