under review

கொல்லிக் கண்ணன்

From Tamil Wiki
Revision as of 12:30, 26 December 2024 by SakthivelS (talk | contribs) (Created page with "கொல்லிக் கண்ணன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது. ==வாழ்க்கை குறிப்பு== கொல்லிக் கண்ணன் சங்க கா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கொல்லிக் கண்ணன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

கொல்லிக் கண்ணன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கண்ணன் என்னும் இயற்பெயரை கொண்டவர். சேரர்கள் ஆட்சி செய்த கொல்லி மலையை சேர்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

கொல்லிக் கண்ணன் பாடிய பாடல் குறுந்தொகையில் 34 வது பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவனோடு சேர முடியாது வருந்திய தலைவியை நோக்கி, தலைவன் அவளை முறைப்படி பெண் கேட்டு வரும் மகிழ்வு செய்தியை தோழி உரைப்பதாக மருத திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • தலைவனை சந்திக்க முடியாது வருந்திய தலைவியை அவளது வீட்டினர் இகழ்ந்தார்கள். சுற்றத்தார்கள் தலைவியின் காதல் நிலையை மறுத்தார்கள்.
  • உவமை: சுருண்ட முடி கொண்டவளே, பகைவரை வென்ற ஆர்ப்பரிக்கும் வெற்றி ஓசையால் யானையங்குருகு பறவைகளின் கூட்டம் அஞ்சி பரந்து செல்லும் சேர மன்னன் குட்டுவனின் மரந்தை நகரத்தை போல அழகுடன் விளங்குகிறாய்.

பாடல் நடை

குறுந்தொகை - 34

  • திணை: மருதம்
  • துறை: தோழி தலைவன் வரைவொடு வந்தமையைத் தலைவிக்கு உணர்த்தியது


ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர்
தமியர் உறங்கும் கௌவை யின்றாய்
இனியது கேட்டின் புறுகவிவ் வூரே
முனாஅ தியானையங் குருகின் கானலம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம்
குட்டுவன் மரந்தை யன்னவெம்
குழைவிளங் காய்நுதற் கிழவனு மவனே.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.