under review

அருணைச் சிலேடை வெண்பா மாலை

From Tamil Wiki
Revision as of 01:04, 25 December 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை

அருணைச் சிலேடை வெண்பா மாலை (முதல் பதிப்பு: 1885), அருணாசலம் என அழைக்கப்படும் அண்ணாமலை தலத்தையும், தலத்தில் உறையும் சிவபெருமானையும் சிலேடை வடிவில் சிறப்பித்துப் பாடப்பட்ட வெண்பா நூல். இந்நூலை இயற்றியவர் சிந்நயச் செட்டியார்.

வெளியீடு

அருணைச் சிலேடை வெண்பா மாலை நூல், சென்னை புஷ்பரதச் செட்டியாரின் கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் 1885-ல் பதிப்பிக்கப்பட்டது. இதன் ஆசிரியர் சிந்நயச் செட்டியார்.

ஆசிரியர் குறிப்பு

சிந்நயச் செட்டியார், தேவக்கோட்டை என்று அழைக்கப்பட்டும் தேவிக்கோட்டையில் 1855-ல் பிறந்தார். ஆசுகவியாக அறியப்படும் சிந்நயச் செட்டியார் சொல் பலிதம் கொண்டிருந்தார் எனப்படுகிறது. அவர் இயற்றிய பிற நூல்கள்: மதுரை மீனாட்சி அம்மை பதிகம், நகரத்தார் வரலாறு, திருவொற்றியூர்ப் புராணம், மயின்மலைப் பிள்ளைத் தமிழ், சிலம்பைப் பதிற்றுப்பத்து அந்தாதி, தேவைத் திரிபு அந்தாதி, காசி யமக அந்தாதி. திருவாரூத் தலத்தில் பல ஆண்டு காலம் வாழ்ந்த சிந்நயச் செட்டியார், 1900-ம் ஆண்டில் காலமானார்.

நூல் அமைப்பு

அருணைச் சிலேடை வெண்பா மாலை நூலின் தொடக்கத்தில் அண்ணாமலையார் ஆலயத்தில் உறையும் யானை திறைகொண்ட விநாயகர் மீதான காப்புச் செய்யுள் இடம்பெற்றது. தொடர்ந்து நூல் இடம்பெற்றது. நூலின் முதல் பாடல் சிவபெருமான் மீதான காப்புச் செய்யுள்ளாக அமைந்தது. நூலில் உள்ள பாடல்கள் சிலேடை நயத்துடன் பாடப்பட்டுள்ளன.

உள்ளடக்கம்

புலவர், தான் பாட விரும்பும் ஊரையோ அல்லது தலத்தின் பெயரையோ பாடலின் இரண்டாவது அடியின் மூன்றாம் சீரில் வைத்து, முன் இரண்டடிகளில் சிலேடையையும், பின் இரண்டடிகளில் திரிபோ, மடக்கோ வருமாறும் அமைத்துப் பாடுவது சிலேடை வெண்பா. இவற்றில் பல வகைகள் உண்டு. முதல் ஐம்பது பாடல்களில் சிலேடை இல்லாமலும் பின் ஐம்பது பாடல்களில் சிலேடை அமையுமாறு பாடுவதும் வழக்கத்தில் உள்ளது.

அருணைச் சிலேடை வெண்பா மாலை நூல், பாடல்களின் முதல் பாதியில் தலத்தின் சிறப்பையும் பின்பாதியில் இறைவனின் சிறப்பையும் கூறுமாறு இயற்றப்பட்டுள்ளது. பாடல்கள் சிலேடை நயத்துடனும், இலக்கியச் சிறப்புடனும் அமைந்துள்ளன.

பாடல்

சாற்றுமட வார்வயிறுஞ் சார்ந்தவரைத் தேர்ந்தவரும்
ஆற்றுப் படுக்கும் அருணையே - கூற்று
வருமேற் றளியார் வதைப்பரவ ராய
திருமேற் றளியார் சிலம்பு

காட்டிற் கடுந்தரக்குங் கண்ணார் கவினரங்கும்
ஆட்டைக் கலக்கம் அருணையே - கேட்டெழும்பூ
பாளத் திநகரன் பன்மாந் தினகரன்
காளத் திநகரன் காப்பு

நம்பினார்க்குச் சித்தியொரு நாலிரண்டு மீராறும்
அம்பிகைவ ழங்கும் அருணையே - வெம்பியெழு
நஞ்சைக் களத்தா னராயணன்கா னாக்களத்தா
னஞ்சைக் களத்தா னகம்

இம்மையொடு ஞானியரு மேற்பாருக் கீவாரும்
அம்மை கடுக்கும் அருணையே - யெம்மையாள்
மைஞ்ஞீலி யத்தன் மழுமா னணியத்தன்
பைஞ்ஞீலி யத்தன் பதி

பாடினர்க்குப் பார்த்திபரும் பலகதியிற் பாய்பரியும்
ஆடிக் களிக்கும் அருணையே - மூடர்
திருப்பத்தூ ரத்த னிடபத்தூ ரத்தன்
திருப்பத்தூ ரத்தன் சிலம்பு

வாகைத்தார் மன்னவரும் வாச்சியமுந் தேங்கமலை
ஆகத்து வைக்கும் அருணையே - பாகத்திற்
காண மலையான் கமலையான் செம்மலையான்
கோண மலையான் குடி

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Dec-2024, 10:38:37 IST