இமையம்
இமையம் (வெ. அண்ணாமலை) (பிறப்பு:மார்ச் 10, 1964) தொடர்ச்சியாக தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். 2020-ல் "செல்லாத பணம்" நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றார். புனைவுகளில் வாழ்க்கையை அதன் இயல்புகளில் பதிவு செய்யும் எழுத்தாளர். தமிழின் இயல்புவாத இலக்கியப்போக்கின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர்.
பிறப்பு, கல்வி
இமையம் கடலூர், திட்டக்குடி, கழுதூரில் வெங்கட்டன், சின்னம்மாள் இணையருக்கு மார்ச் 10, 1964-ல் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இயற்பெயர் வெ.அண்ணாமலை. தொடக்கக் கல்வியை மேலாதனூர் அரசுப்பள்ளியில் பயின்றார். உயர்கல்வியை கழுதூரிலும், மேல் நிலைக்கல்வியை சேப்பாக்கம் அரசுப் பள்ளியிலும் பயின்றார். பெரியார் அரசு கலைக்கல்லூரி திருச்சியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
இமையம் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். 1997-ல் தன் முப்பத்து மூன்றாவது வயதில் ச.புஷ்பவள்ளியை மணந்து கொண்டார். மனைவி முதுநிலை ஆசிரியராக பணியாற்றுகிறார். மகன்கள் கதிரவன், தமிழ்ச்செல்வன். விருதாச்சலத்தில் வசிக்கிறார்.
இலக்கிய வாழ்க்கை
இமையம் ’கோவேறு கழுதைகள்’ என்னும் நாவல் வழியாக தமிழில் அறிமுகமானார். தமிழின் இயல்புவாத இலக்கியப்போக்கின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர். ஏழு நாவல்களும், ஆறு சிறுகதைத்தொகுப்புகளும் வெளியாகியுள்ளன. பெத்தவன் என்கிற நெடுங்கதை, இவரின் படைப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று என கருதப்படுகிறது. இக்கதை தெலுங்கில் மொழிபெயர்க்கப் பட்டு திருப்பதிப் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
"கோவேறு கழுதைகள்", லட்சுமி ஹோம்ஸ்ட்ராம் (Lakshmi Holmstrom) என்பவரால், East West Books என்ற பதிப்பகத்தாரால் "Beasts of Burden" என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. இதே புதினம் 2009-ல் பாஷா பாரதி என்னும் நிறுவனத்தால் கன்னடத்திலும் மொழிபெயர்ப்பு செய்து வெளியாகியது. ஆறுமுகம் என்ற புதினம் கதா நிறுவனத்தால் ஆங்கிலத்தில் 2006-ல் வெளியிடப்பட்டது. பெத்தவன் என்ற நெடுங்கதை Oxford University Press என்ற பதிப்பகத்தின் மூலம் 'The Begetter' என்ற பெயரில் 2015-ல் வெளியிடப்பட்டது. இவருடைய புத்தகங்கள் கன்னடா, தெலுங்கு, ஆங்கிலம், ப்ரெஞ்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இலக்கிய இடம்
தமிழின் இயல்புவாத இலக்கியப்போக்கின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர். இமையம் தனது புனைவுகளில் வாழ்க்கையை அதன் இயல்பில் பதிவு செய்கிறார். அசலான வாழ்க்கையை அதன் அத்தனை முரண்களுடனும் பதிவு செய்கிறார். தமிழ் இலக்கியப் பரப்பில் தனக்கான தனிபோக்கை உருவாக்கிக் கொண்டவர் இமையம்.
எழுத்தாளர் சுந்தர ராமசாமி "கோவேறு கழுதைகள்" நாவலைப் பற்றிக் கூறுகையில், "தமிழில் நாவல்கள் தோன்றத் தொடங்கி ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஓடிவிட்டது. அவற்றில் மனித மேன்மையை முன்வைத்து நாவல் எனும் கலை வடிவும் கொண்டவற்றைக் கைவிரல்களில் எண்ணிவிடலாம். அந்தக் குறைவான எண்ணிக்கையில் தன்னையும் இணைத்துக் கொண்டு விடுகிறது இந்த நாவல். மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கும் பிரிவுகளின் சகல கீழ்மைகளையும் மனந்திறந்து கலைப்பூர்வமாக முன்வைத்து மனித துக்கத்தை இந்த அளவுக்குத் தேக்கியதிலும் சரி, அதன் அனுபவப் பரிமாற்றத்தில் பெற்ற வெற்றியிலும் சரி, இதற்கு இணையாகச் சொல்லத் தமிழில் மற்றொரு நாவல் இல்லை." என்றார்.
"அடித்தளமக்களின் வாழ்க்கையை இயல்புவாத அழகியலுடன் சொல்லும் இவரின் கதைகள் சமூக விமர்சனமாக கூர்கொள்பவை. ஆனால் அதற்கும் மேலே சென்று மானுட வாழ்க்கை, வரலாறு சார்ந்து ஆழ்ந்த வினாக்களையும் எழுப்பிக்கொள்பவை. அவ்வகையில் எந்த ஒரு பெரும்படைப்பாளியின் படைப்புக்களையும்போல அழகியல் – சமூகவியல் அடையாளங்களைக் கடந்துசெல்பவை அவை." என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.
"இலக்கியப் படைப்பு என்பது சமூக விமர்சனம். சமூக இழிவுகளாக இருப்பவற்றை விமர்சனம் செய்வதுதான் ஒரு நிஜமான கலைஞனின், கலைப்படைப்பின் வேலை. சமூக இழிவுகளை சுட்டிக்காட்ட, அடையாளப்படுத்தவே எழுதுகிறேன். நான் சரியாகவும், முழுமையாகவும் சமூக இழிவுகளை பதிவு செய்திருக்கிறேனா என்பதில்தான் என்னுடைய கதைகளுக்கான உயிர் இருக்கிறது. எழுத்தின் அடிப்படையே அதுதான்." என இமையம் கூறுகிறார்.
விருதுகள்
- சாகித்திய அகாதெமி விருது - 2020 - செல்லாத பணம் புதினம்
- அக்னி அட்சரம் விருது - 1994
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது - 1994
- அமுதன் அடிகள் இலக்கிய விருது - 1998
- திருப்பூர் தமிழ்ச் சங்க விருது - 1999
- இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகம் இளநிலை ஆய்வு நல்கையை-2002
- தமிழக அரசின் தமிழ்த் தென்றல் திரு வி.க. விருது -2010
- பெரியார் விருது - 2013 - திராவிடர் கழகம்.
- இயல் விருது - 2018 - தமிழ் இலக்கியத் தோட்டம், கனடா
- சாகித்திய அகாதமி விருது, 2020
நூல்கள் பட்டியல்
நாவல்
- கோவேறு கழுதைகள் (1994)
- ஆறுமுகம் (1999)
- செடல் (2006)
- எங் கதெ (2015)
- செல்லாத பணம் (2018)
- இப்போது உயிரோடிருக்கிறேன்
- வாழ்க வாழ்க (2020)
- உப்பு வண்டிக்காரன் (2024)
சிறுகதைத் தொகுப்புகள்
- மண்பாரம் (2002)
- வீடியோ மாரியம்மன் (2008)
- கொலைச் சேவல் (2013)
- சாவு சோறு (2014)
- நறுமணம் (2016)
- நன்மாறன் கோட்டைக் கதை (2019)
- திருநீறு சாமி (2023)
- தாலிமேல சத்தியம்
நெடுங்கதை
- பெத்தவன்(க்ரியா பதிப்பகம்) (2013)
மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள்
ஆங்கிலம்
- BEAST OF BURDEN (கோவேறு கழுதைகள்)
- The Begetter (பெத்தவன்)
- Video Mariamman and other short stories (சிறுகதைத்தொகுப்பு) 2021
ப்ரெஞ்சு
- Le Pere (பெத்தவன்): 2020
கன்னடா, தெலுங்கு
- பெத்தவன்
- கோவேறு கழுதைகள்
உரைகள்
- கொண்டாடப்படலைன்னா நீ எழுத்தாளனே இல்லை: இமையம் பேட்டி: சமஸ்
- எழுத்தில் அரசியல் இல்லாதவன் எழுத்தாளனே இல்லை: youtube: Nakkerantv
இணைப்புகள்
- வல்லினம் இமையம் சிறப்பிதழ்
- இமையம்: வலைதளம்
- இமையம் புத்தகங்கள் வாங்க
- இலக்கியம் என்பதே பிரசாரம்தான் - இமையம்
- இப்போது உயிரோடிருக்கிறேன் நாவல் குறித்து அ. ராமசாமி
- அழியாத சொற்களை உருவாக்குபவனே எழுத்தாளன் – இமையம் நேர்காணல் - அரவிந்தன்
- How Imayam redefined realism in Tamil literature and proved his critics wrong: D.I. Aravindan
உசாத்துணை
- தமிழ்ச் சமூகத்தின் வெவ்வேறு முகங்களைத்தான் எழுதுகிறேன்!- இமையம் பேட்டி: இந்து தமிழ் திசை
- ஒரு சொல்லை ஒரு வாக்கியத்தை கண்டு பிடிப்பதற்காகவே எழுதுகிறேன்: வல்லினம்: இமையம்
- I write for subaltern people to have equality: Sahithya Akademi Award winner Imayam: newindianexpress
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
13-Dec-2022, 08:56:37 IST