சி.ஆர். ரவீந்திரன்
- ரவீந்திரன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ரவீந்திரன் (பெயர் பட்டியல்)
சி.ஆர். ரவீந்திரன் (சி. ரங்கசாமி ரவீந்திரன்; ரவி, சி.ஆர். ஆர்) (பிறப்பு: நவம்பர் 20, 1945) கவிஞர்; எழுத்தாளர்; இதழாளர்; மொழிபெயர்ப்பாளர்; விமர்சகர். வானம்பாடி இயக்கத்தைச் சேர்ந்தவர். இலக்கிய இதழ்கள் சிலவற்றை நடத்தினார். தன் படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார்.
பிறப்பு, கல்வி
சி.ஆர். ரவீந்திரன், கோவையை அடுத்துள்ள பேரூர் செட்டிப்பாளையத்தில், நவம்பர் 20, 1945 அன்று, ரங்கசாமி-லட்சுமி அம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். பள்ளிப் படிப்பை பேரூரில் முடித்தவுடன், பி.யூசி.யை, பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் (பூளைமேடு சாமநாயுடு கோவிந்தசாமி நாயுடு கல்லூரி) பயின்றார். அதே கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்தார். கோவை அரசு கலைக் கல்லூரியில் பயின்று ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
படிப்பை முடித்ததும் சில ஆண்டுகள் கோவை அரசுக்கல்லூரியில் டியூடராக பணியாற்றினார். பின் பணியிலிருந்து விலகி முழு நேர எழுத்தாளராக, பத்திரிகையாளராக இயங்கினார்.
இலக்கிய வாழ்க்கை
ரவீந்திரன், கல்லூரியில் படிக்கும்போது ஆசிரியர்களால் இலக்கிய நூல்கள் அறிமுகமாகின. மு.வ., கல்கி, ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன் போன்றோரது நூல்கள் இவரைக் கவர்ந்தன. ஆங்கில இலக்கிய நுால்கள் பலவற்றை வாசித்தார். பேராசிரியர் டாக்டர் குழந்தைவேலுவின் தூண்டுதலால் மலையாள இலக்கிய அறிமுகம் ஏற்பட்டது. நேரடியாக அம்மொழியிலேயே வாசிக்க விரும்பி மலையாளம் கற்றுக் கொண்டார்.
ரவீந்திரனின் முதல் கவிதை ‘காலடிச் சுவடுகள்’ இது கண்ணதாசன் ஆசிரியராக இருந்த இதழ் ஒன்றில் வெளியானது. முதல் சிறுகதை, ‘இரவின் பூக்கள்’ இலங்கையின் ‘வீரகேசரி’ நாளிதழின் வாரமலரில் பிரசுரமானது. தொடர்ந்து தீபம், கணையாழி உள்ளிட்ட பல இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். ரவீந்திரன், வானம்பாடி கவிதா மண்டலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அவ்விதழில் பல கவிதைகளை எழுதினார். கண்ணதாசன், சதங்கை, ழ, விடியல் எனப் பல இதழ்களில் ரவீந்திரனின் கவிதைகள் வெளியாகின. ஜெயகாந்தன் எழுத்துக்களால் கவரப்பட்டார். அவரைப் போன்று சமூக அக்கறையுள்ள படைப்புகளை எழுத வேண்டும் என்று உறுதி பூண்டார்.
படைப்புகள்
ரவீந்திரனின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘ரிவோல்ட்’ 1988-ல் வெளியானது. ‘பழைய வானத்தின் கீழே’ என்பது ரவீந்திரனின் முதல் நாவல். அதனை அடுத்து ‘பசியின் நிறம்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளியானது. இத்தொகுப்பு கேரளப் பல்கலைக்கழகத்தில் பாட நூலாக வைக்கப்பட்டது. தொடர்ந்து பல இதழ்களில் இவரது சிறுகதை, கட்டுரைகள் வெளியாகின. இவரது படைப்புகளில் ‘ஈரம் கசிந்த நிலம்’ என்ற நாவல் பலரால் பாராட்டப்பட்டது. கொங்குப் பகுதி விவசாயிகளின் வாழ்க்கையை, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, அவலங்களை அந்த நாவலில் அவர் பதிவு செய்திருந்தார். அந்த நாவலுக்காக ரவீந்தரனுக்கு ‘பாரதிய பாஷா பரிஷத்’ விருது கிடைத்தது. பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள் என, ‘ஈரம் கசிந்த நிலம்’ நாவலைப் பற்றி ஜெயமோகன் மதிப்பிட்டுள்ளார் [1].
சுரங்கத் தொழிலாளர்களின் அவல வாழ்க்கையைக் கூறுவது ’வெயில் மழை.’ இருளர்களின் வாழ்க்கையைப்பற்றிப் பேசும் ‘மணியபேரா’ ரவீந்திரனின் முக்கியமான படைப்புகளுள் ஒன்று. இவரது ‘அங்குத்தாய்’ நாவல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பாட நூலாக இடம் பெற்றது. கவிஞர் கண்ணதாசனின் கவிதைகளை சாகித்ய அகாதெமிக்காக தொகுத்திருக்கிறார். பல கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ரவீந்திரனின் படைப்புகள் பாட நூல்களாக இருந்திருக்கின்றன. இவரது படைப்புகளைப் பற்றி ஆராய்ந்து பல ஆய்வு மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். ஆங்கிலத்திலும் இவரது சிறுகதைகள் சில வெளியாகியுள்ளன. தேர்ந்தெடுத்த சில சிறுகதைகள் மலையாளம், ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாவல், சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என இதுவரை 50-க்கும் மேற்பட்ட நுால்களைத் தந்துள்ளார், ரவீந்திரன்.
மொழிபெயர்ப்புகள்
ரவீந்திரன், மொழிபெயர்ப்பிலும் தேர்ந்தவர். ஜேம்ஸ் ஆலன், கலீல் ஜிப்ரான், வால்டர் டோயல், ஸ்டேபிள்ஸ், ஓஷோ போன்றோரது நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். தனக்குப் பிடித்த மலையாளப் படைப்புகள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இலங்கையிலிருந்து வெளியான விவேகி, பூரணி, அஞ்சலி, மல்லிகை போன்ற இதழ்களில் இவரது மொழிபெயர்ப்புக் கதை, கவிதை, கட்டுரைகள் வெளியாகின.
இதழியல் வாழ்க்கை
ரவீந்திரன் சில காலம், ‘மேம்பாலம்’, ’விழிப்பு’ உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். சக்தி சர்க்கரை ஆலையின் சார்பாக வெளியான செய்தி மடலில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தார். நிருபர், அச்சகர், பத்திரிகை ஆசிரியர் என்று பல பொறுப்புக்களில் இயங்கினார். ‘ஆல்’, விழிப்பு’ போன்ற சிற்றிதழ்களை நடத்தி வந்தார்.
பொறுப்புகள்
சாகித்ய அகாதெமியின் மாநிலக் குழு உறுப்பினராகப் பணிபுரிந்திருக்கிறார். பல்வேறு இலக்கிய அமைப்புகளில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
விருதுகள்
- அகிலன் நாவல் போட்டியில் இரண்டாம் பரிசு - ஈரம் கசிந்த நிலம்’ நாவலுக்கு.
- ‘பாரதிய பாஷா பரிஷத்’ விருது - ’ஈரம் கசிந்த நிலம்’ நாவலுக்கு.
- தங்கம்மாள் நினைவுப் பரிசு - ஈரம் கசிந்த நிலம்’ நாவலுக்கு.
- கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது - ஈரம் கசிந்த நிலம்’ நாவலுக்கு.
- தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது- ‘கோரைப்புல்’ நாவல் (2014).
- திருப்பூர் தமிழ்ச்சங்க விருது- ‘மஞ்சு வெளி’ நாவல்.
- லில்லி தேவசிகாமணி நினைவு விருது- ‘ஒவ்வொரு நாளில் ஒரு நாள்’ சிறுகதைத் தொகுப்புக்கு.
- ‘சங்கமம்’ கருத்துப் பரிமாற்றக் களம் வழங்கிய ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது.
ஆய்வு
‘பொன்னீலன் சி.ஆர். ரவீந்திரன் படைப்புகள் வழி மக்கள் வாழ்வியல் போரட்டம்’ என்ற தலைப்பில் கே. ஜெயா, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்திற்காக முனைவர் பட்ட ஆய்வு செய்துள்ளார்.
இலக்கிய இடம்
கொங்கு நாட்டில் வசிக்கும் விவசாயிகள், உழைப்பாளிகள், பழங்குடியினரின் வாழ்க்கையை மையமாக கொண்டவை ரவீந்திரனின் படைப்புகள். கொங்கு பிரதேசத்தின் பல்வேறு இனக் குழு வாழ்க்கையைப் பிரதிபலிப்பவையாகவும், வட்டார சமூக வரலாறாகவும் இவரது படைப்புகள் அமைந்துள்ளன. தமிழில் எழுதப்படாத வாழ்க்கையை, பேசப்படாத மனிதர்களை, அவர்களின் வாழ்க்கையை எழுத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற விருப்புடன் செயல்பட்டு வருகிறார்.
நூல்கள்
நாவல்கள்
- பழைய வானத்தின் கீழே
- ஈரம் கசிந்த நிலம்
- கோரைப்புல்
- மஞ்சு வெளி
- வெயில் மழை
- மணியபேரா
- அங்குத்தாய்
- காக்கைப் பொன்
- காற்றே கனலே
- கண்ணில் மின்னல்
- செந்தூரச் சாரல்
- காலம்
- தேயிலைக் கொழுந்து
- ஓடைப்புல்
- இரும்புச்சுவர்கள்
சிறுகதைத் தொகுப்புகள்
- எதிரீடுகள்
- பசியின் நிறம்
- வானம் பார்த்த வனம்
- ஒவ்வொரு நாளில் ஒரு நாள்
- நாளை வரும் முன்
- கருக்கலில் ஒருத்தி
- மகாகவியின் மயக்கம்
- இன்னொருத்தர்
நாடகங்கள்
- பசு
- இளிச்சவாயன்
மொழிபெயர்ப்புகள்
- உனக்குள் உன்னைத் தேடு - (ஆங்கில மூலம்: Dr. வால்டர் டோயல் ஸ்டேபிள்ஸ்)
- எல்லாமே மனநிலைதான் - (ஆங்கில மூலம்: ஜே.பி.வாஸ்வானி (JP VASWANI)
- 15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் இரகசியங்கள் - மூன்று பாகங்கள் - (ஆங்கில மூலம்: மைக்கேல் ஜெஃப்ரீஸ்)
- சிந்தனையை மாற்றுங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள் - (ஆங்கில மூலம்: பிரையன் டிரேசி)
- தன்முக ஓவியம் - (ஆங்கில மூலம்: கலீல் ஜிப்ரான்)
- நீயே உன்னை சந்தி - (ஆங்கில மூலம்: ஆரிசன் ஸ்வெட் மார்டன்)
கட்டுரை நூல்கள்
- கோபுரத்தில் ஒரு குயில்
- கண்ணனைக் கண்ட கவிஞன்
- கண்ணதாசன் கண்ட கவிஞன்
- ஒரு புயலின் ஓய்வு - நெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு
தொகுப்பு நூல்கள்
- கவிஞர் கண்ணதாசன் கவிதைகள்
உசாத்துணை
- எழுத்தாளர்: சி.ஆர். ரவீந்திரன்: தென்றல் இதழ் கட்டுரை
- சி.ஆர். ரவீந்திரன் நேர்காணல்: 'தகவு'-கலை இலக்கிய திங்களிதழ்
- சிலிகான் ஷெல்ல்ஃப் தளம் கட்டுரை
- அது ஒரு வானம்பாடி காலம்!: சி.ஆர். ரவீந்திரன்: இந்து தமிழ் திசை
- எழுத்தாளர் சி ஆர் ரவீந்திரன் படைப்புலகு
- எழுத்தாளர் சி.ஆர்.ரவீந்திரன்: சுப்ரபாரதிமணியன்: திண்ணை இணையதளக் கட்டுரை
- ஈரம் கசிந்த நிலம் விமர்சனம் : தினமணி இதழ் கட்டுரை
- ஈரம் கசிந்த நிலம் விமர்சனம்: காமதேனு: இந்து தமிழ் திசை
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
10-Mar-2023, 07:36:43 IST