சக்ரவர்த்தினி
சக்ரவர்த்தினி (இதழ்) பெண்களுக்கென்றே ஆரம்பிக்கப்பட்ட இதழ். மாத இதழாக வெளிவந்தது. இதில் சி. சுப்ரமணிய பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றினார்.
வரலாறு
சக்ரவர்த்தினி ஆகஸ்ட் 1905 முதல் வெளியானது. இதன் உரிமையாளர் வைத்தியநாத ஐயர். இவ்விதழில் சி.சுப்ரமணிய பாரதியார் பதின்மூன்று மாதங்கள் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பாரதியாருக்குப் பின் வரககவி அ. சுப்பிரமணிய பாரதி சக்ரவர்த்தினி இதழின் ஆசிரியராக இருந்தார். எம்.எஸ். நடேச ஐயரும் சில காலம் ஆசிரியராக இருந்தார். பி.எஸ். அப்புசாமி ஐயர் ஜனவரி 1912 வரை சக்ரவர்த்தினி இதழை நடத்தினார். கோ. வடிவேலு செட்டியார் பின்னர் பொறுப்பேற்றுக் கொண்டார். 1916-க்குப் பின் சக்ரவர்த்தினி இதழ் நின்றது.
உள்ளடக்கம்
கவிதை, கதை, நாடகம், மொழிபெயர்ப்பு, நூல் மதிப்புரை, பொது வர்த்தமானங்கள், சமாசாரக் குறிப்புகள்(துணுக்குகள்) என இலக்கியத்தின் பல பிரிவுகளுக்கு சக்ரவர்த்தினி இடமளித்தது.
சக்ரவர்த்தினி இதழில் பாரதியார் ‘ஷெல்லிதாஸ்’ என்ற புனைப் பெயரில் எழுதிய துளஸீபாயி எனும் சிறுகதை நவம்பர் 1905 தொடங்கி வளிவந்தது. பாரதியார் குறிப்பிடத்தகுந்த சில தலையங்கங்களை இந்த மாத இதழில் எழுதினார். உ.வே.சா வைப் பாராட்டி பாரதியார் எழுதிய வாழ்த்துச் செய்யுள் சக்ரவர்த்தினி இதழில் வெளியாகியுள்ளது. 1906 பிப்ரவரியில் பாரதியார் ‘வந்தேமாதரம்’ என்ற தலைப்பில் எழுதிய பாடல் சக்ரவர்த்தினி இதழில் வெளிவந்தது.
1906 முதல் ‘சுந்தரி’ என்ற தலைப்பில் ‘ஜானகி’ என்பவர் எழுதிய தொடர் சக்ரவர்த்தினி இதழில் வெளிவந்தது. ‘விஜயலட்சுமி’ என்ற தொடரை ‘தேவகுஞ்சரி அம்மாள்’ எழுதினார். ‘மணிவாசகன்’ தொடரை தெ. கிருஷ்ணசாமிப் பாவலர் எழுதினார். ஆர்.எஸ். சுப்புலட்சுமி அம்மாள் எழுதிய ‘பார்வதி சோபனம்’ என்ற பாடல் தொடர் வெளியானது. ஷேக்ஸ்பியரின் ’ஹேம்லட்’ தமிழில் கே. வெங்கட்ராம ஐயரால் மொழிபெயர்க்கப்பட்டுத் தொடராக வந்தது. பானுமதி என்ற தொடரை வரககவி அ. சுப்பிரமணிய பாரதியார் சக்ரவர்த்தினி இதழில் எழுதினார்.
இலக்கிய இடம்
சக்ரவர்த்தினி பெண்ணின் பெருமை பேசும் இதழாக வெளிவந்தது. “தமிழ் நாட்டு மாதர்களின் அபிவிருத்தியே நோக்கமாக வெளியிடப்படும் மாதாந்திரப் பத்திரிக்கை” என்ற குறிப்புடன் வெளியான இதழ் .சக்ரவர்த்தினி . ‘பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு’ என்ற கவிதையுடன் வெளிவந்தது. சென்றநூற்றாண்டின் தேசியமறுமலர்ச்சி சார்ந்த இலட்சியவாத நோக்கத்துடன் பெண்கல்வி, பெண்களி சமூக இடம், அவர்களின் சிந்தனைச் சுதந்திரம் ஆகியவற்றை வலியுறுத்தும் இதழாக வெளிவந்த சக்ரவர்த்தினிக்கு தமிழ் சிந்தனைக்களத்தில் முன்னோடி இதழ் என்னும் இடம் உண்டு.
இதழில் எழுதியவர்கள்
பெண் எழுத்தாளர்கள்
- அசலாம்பிகை அம்மாள்
- அலர்மேல்மங்கை அம்மாள்
- ராஜலஷ்மி அம்மாள்
- ஆர்.எஸ். சுப்பலஷ்மி அம்மாள்
- கஜாம்பிகை
ஆண் எழுத்தாளர்கள்
- மஹேசகுமார சர்மா
- வெங்கட்ராம ஐயர்
- எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு
- எஸ்.வி. சீனிவாஸய்யர்
- பஞ்சாபகேசய்யர்
உசாத்துணை
- “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)”; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories. }