கஜாம்பிகை
To read the article in English: Gajambhikai.
கஜாம்பிகை தமிழின் தொடக்க கால எழுத்தாளர்களில் ஒருவர். ஸ்ரீமதி (எ) அம்பரீஷோபாக்கியானம் முக்கியமான படைப்பு. குறுகிய காலத்திலேயே மூன்று பதிப்புகளைக் கண்டது.
வாழ்க்கைக் குறிப்பு
கஜாம்பிகை பிரம்மஸ்ரீ சிவானந்த யோகீஸ்வரரின் இளைய மகளாக திருச்சியில் பிறந்தார். தந்தை 'திருச்செந்தில் வெண்பா அந்தாதி’ முதலிய நூல்களை எழுதிய சமய, தத்துவவாதி. ஆனந்தபோதினி இதழில் பல இலக்கிய, ஆன்மீக, சமயக் கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதினார். ’பிரம்மவித்யா’, 'ஆரிய ஜனப் பிரியன்’ போன்ற இதழ்களின் துணையாசிரியர். கஜாம்பிகையின் அக்காள் பாலசரஸ்வதி தேவகுஞ்சரியம்மாளும் எழுத்தாளர். இலக்கியச் சூழலில் கஜாம்பிகை வளர்ந்தார். இவரது பிற வாழ்க்கைக் குறிப்புகள் கிடைக்கவில்லை.
வேறு பெயர்கள்
- கஜாம்பாள்
- கஜாம்பிகை அம்மாள்
இலக்கிய வாழ்க்கை
ஸ்ரீமதி (எ) அம்பரீஷோபாக்கியானம், ஞானாம்பாள் போன்ற கதைகளை எழுதினார். அம்பரீஷோபாக்கியானம் என்பது அம்பரீஷன் எனும் மன்னனின் புராணக் கதை. இந்நூலின் மூன்றாம் பதிப்பு 1917-ல் வெளிவந்தது. 'ஞானாம்பாள்’ ஒரு சமூக நாவல். 1920-ல் நான்காம் பதிப்பு கண்டது. இவரது கதைகள் குறுகிய காலத்திற்குள்ளேயே பல பதிப்புகள் கண்டதன் மூலம் இவரின் கதைகளுக்கு இருந்த வரவேற்பை அறியலாம். 1907-ல் சக்ரவர்த்தினியில் எழுதிய கெளரி என்ற சிறுகதை புகழ்பெற்றது. வேறு சிறுகதைகள் எழுதியிருக்கிறாரா என்பது பற்றி அறிய முடியவில்லை.
நூல்கள்
- ஸ்ரீமதி (எ) அம்பரீஷோபாக்கியானம்
- ஞானாம்பாள்
- கெளரி (சிறுகதை)
உசாத்துணை
- "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)"; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:31:11 IST