குறியிறையார்
குறியிறையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
குறியிறையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. எனவே இவரது பாடலில் இடம்பெற்றுள்ள 'குறியிறைப் புதல்வர்’ என்ற உவமையின் சிறப்பை முன்னிட்டு, அதையே புலவரின் பெயராக கொண்டனர்.
இலக்கிய வாழ்க்கை
குறியிறையார் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் 394 வது பாடலாக அமைந்துள்ளது. தலைவனின் பிரிவை எண்ணி வாடும் தலைவியிடம் தோழி, தலைவனது இயல்பை பழித்து கூறுவதாக அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
பொருளீட்டும் பொருட்டு பிரிந்து சென்ற தலைவன், சொல்லியபடி திரும்பி வராமல் தலைவிக்கு பிரிவு துயரத்தை கொடுக்கிறான். அது கண்ட தோழி தலைவியிடம் தலைவனின் குண மாற்றத்தை பழித்து கூறுகிறாள்.
- பெண் யானையின் முழங்காலளவு உயரமே உள்ள யானைக் கன்றானது கள் மிகுந்த மலை ஊரில் இருக்கும் குறவர் பிள்ளைகளுடன் விளையாடும்.
- உவமை: சிறு வயதில் குறுகிய முன்கைகளை உடைய குறவர் பிள்ளைகளுடன் விளையாடி மகிழ்ந்த யானை, வளர்ந்த பின் குறவர்கள் காவல் காக்கும் தினை வயலை மேய்ந்து அவர்களுக்கு பகையாக மாறுவது போல தலைவனும் உன்னிடத்தே முன்பு பழகி அன்பு செய்துவிட்டு, இப்போது பிரிவு துயரத்தை உனக்கு கொடுத்துள்ளான்.
பாடல் நடை
குறுந்தொகை - 394
குறிஞ்சித் திணை துறை: வரைவிடை ஆற்றாளாகிய கிழத்தியை ஆற்றுவிக்கும் தோழி தலைமகனை இயற்பழித்துக் கூறியது.
முழந்தாள் இரும்பிடிக் கயந்தலைக் குழவி
நறவுமலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற
குறியிறைப் புதல்வரொடு மறுவந் தோடி
முன்னாள் இனிய தாகிப் பின்னாள்
அவர்தினை மேய்ந் தாங்குப்
பகையா கின்றவர் நகைவிளை யாட்டே.
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.