ஷம்சுத்தாசீன் கோவை
ஷம்சுத்தாசீன் கோவை (1919), மேலப்பாளையத்தில் வாழ்ந்த அறிஞரும், வள்ளலுமான ஷம்சுத்தாசீன் என்பவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட சிற்றிலக்கிய நூல். இந்நூலை இயற்றியவர் செய்குத் தம்பிப் பாவலர்.
வெளியீடு
ஷம்சுத்தாசீன் கோவை நூல், 1919-ல், மதுரை மகா வித்வான் ம.கா.மு. காதிறு முகியித்தன் மரைக்காயரால், சென்னை ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் இரண்டாவது பதிப்பு, ஏப்ரல் 13, 2000 அன்று, மேலப்பாளையம் V. S. T. தமுஸ்தாசிம் தரகனார் அறக்கட்டளை மூலம், திருநெல்வேலி டவுன் ஹமீது அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டு வெளியானது, இதனைப் பதிப்பித்தவர் செ. திவான்.
நூல் அமைப்பு
ஷம்சுத்தாசீன் கோவை நூலின் தொடக்கத்தில் கட்டளைக் கலித்துறையில் பாடப்பட்ட காப்புச் செய்யுள் இடம்பெற்றது. தொடர்ந்து 425 பாடல்கள் இடம்பெற்றன.
உள்ளடக்கம்
ஷம்சுத்தாசீன் கோவை நூலில், ஷம்சுத்தாசீனின் சிறப்பு, பெருமை, தலைவன் - தலைவியருக்கிடையே நிகழ்ந்த காதல், புணர்ச்சி, பிரிவு குறித்த செய்திகள் இடம் பெற்றன. காதல் நிகழ்வை 400 துறைகளில் காட்டும் நூலாக ஷம்சுத்தாசீன் கோவை நூல் அமைந்துள்ளது. இந்நூலில் 56 நாள் நிகழ்ச்சிகள் பேசப்பட்டுள்ளன. பாட்டுடைத் தலைவரின் ஞானாசிரியரான கோட்டாறு ஞானியார் சாகிப்பின் பெயரும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது புதுமையானதாக அறியப்படுகிறது.
பாடல்
தலைவன் ஊர் கூறல்
யோகத்திற் சீரி லுயர்விற் றகையி லுற்றபல
போகத்திற் சீர்த்தபு மான்ஷம்சுத் தாசின் பொலங்கிரிவாய்
மேகத்தி லோங்கு குழன்மட வீர்நகர் வேறலநம்
பூகத்தி லும்மூர் கறிக்கொடி யேறிப் புணர்ந்திடுமே
தலைவியின் சிறப்பு கூறல்
மாறா வமுத மழையோ சுகிர்த மருவுருவோ
நூறா மணிவிளக் கோமதி யோவிதி நுண்ணழகோ
தேறார் குடிகெடுத் தோன்ஷம்சுத் தாசீன் சிலம்பகத்தோர்
கூறா யொளிரு முயிர்க்குயி ராமென் குலதெய்வமே
பாங்கன் கூற்று
காவுங்கண் டேன்குழற் காடுங்கண். டேனின்னைக் காத்துறுகட்
கோவுங்கண் டேனுடற் கோலங்கண் டேனலங் கூர்பொருளும்
பாவங்கண் டேமகிழ் வோன்ஷம்சுத் தாசீன் பனிவரையாய்
யாவுங்கண் டேன்கண்டி லேனிறை வாநின் னியலின்மையே
நற்றாய் செவிலியை வினாதல்
பாலுங் கசப்பப் பழமும் புளிப்பப் படர்ந்தமுலை
மேலும் பசப்ப விழிநீ ரரும்ப மிடைந்தனளாற்
கோலும் பெருந்தவக் கோன்ஷம்சுத் தாசின் கொழுங்கிரிவா
யேலுங் குணத்தணங் கேயிசை யாயுற்ற தேந்திழைக்கே
மதிப்பீடு
ஷம்சுத்தாசீன் கோவை, கோவை இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு முழுமையாக இயற்றப்பட்ட நூல். இஸ்லாமியக் கோவை நூல்களில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாய், செய்குத்தம்பிப் பாவலரால் இயற்றப்பட்ட ஷம்சுத்தாசீன் கோவை நூல் அறியப்படுகிறது.
உசாத்துணை
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.