under review

விசாகப்பெருமாள் ஐயர்

From Tamil Wiki
Revision as of 20:37, 24 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected Internal link name [[கந்தப்பையர்| to [[கந்தப்பையர் (புலவர்)|;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

விசாகப்பெருமாள் ஐயர் (1799- ) தமிழ் உரையாசிரியர். பஞ்ச இலக்கண வினா விடை , பாலபோத இலக்கணம் போன்ற இலக்கண நூல்களை இயற்றினார்

வாழ்க்கைக் குறிப்பு

விசாகப்பெருமாள் ஐயர் திருத்தணிகையில் வீரசைவ சமயத்தாரான கந்தப்பையருக்கு 1799-ல் மகனாகப் பிறந்தார். கல்லாரகரி வீரசைவ மடத்து அதிபர் வழி வந்தவர். சரவணப்பெருமாள் ஐயரும் இவரும் இரட்டையர். இராமாநுச கவிராயரிடம் கல்வி கற்றார். சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

விசாகப்பெருமாள் ஐயர் 'இயற்றமிழாசிரியர்' என்று அறியப்பட்டார்.நன்னூலுக்கு காண்டிகையுரை எழுதினார். 'பஞ்ச இலக்கண வினாவிடை' எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஐந்திற்கான இலக்கணங்களை வினா-விடை முறையில் விளக்கியது. பாலபோத இலக்கணம் நூலில் 19 தலைப்புகளில் தமிழ் இலக்கண விதிகளை விளக்கினார். வடமொழியின் 'சந்திராலோகம்' என்ற அணியிலக்கண நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்து உதாரணப் பாடல்களையும் அளித்தார்.

திருக்கோவையாருக்கு உரை எழுதி 1857-ல் அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார். இவர் நன்னூலுக்குக் காண்டிகையுரையுடன் 1840-ல் எழுதிப் பதிப்பித்துள்ளார். இது 1868, 1882லும் அச்சிடப்பட்டது. இவரை இலக்கண விசாகப் பெருமாளையர் என்னும் கவிராயர் என்றும் அழைத்து வந்தனர். இவருக்குச் சென்னையில் கல்வி விளக்க அச்சகம் ஒன்று இருந்தது. இளவல் சரவணப் பெருமாளையரும் இணைந்து திருவள்ளுவ மாலையை 1830-ல் அச்சிட்டுப் பதிப்பித்துள்ளனர்.

விசாகப்பெருமாள் ஐயர் மிரன் வின்ஸ்லோவுக்கு தமிழ்-ஆங்கிலப் பேரகராதியைத் தொகுக்கும் பணியில் உதவி புரிந்தார்.

படைப்புகள்

  • இலக்கணச்சுருக்க வினாவிடை
  • அணியிலக்கண வினாவிடை
  • யாப்பிலக்கண வினாவிடை
  • பாலபோத இலக்கணம்
  • நன்னூல்க் காண்டிகையுரை
  • திருக்கோவையார் உரை
  • கல்விப்பயன்
பதிப்பித்தவை
  • அணியிலக்கணம். (பதிப்பு),
  • யாப்பருங்கலக் காரிகை. (உரை),
  • நன்னூல். (பதிப்பு),
  • தண்டியலங்கார மூலமும் சுப்பிரமணிய தேசிகர் உரையும். விசாகப்பெருமாளயரும் பிறரும், (பதிப்பு),
  • யாப்பருங்கலக் காரிகை (விசாகப்பெருமாளயரும் பிறரும், (பதிப்பு),

உசாத்துணை




✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Sep-2023, 10:05:24 IST