மா. சுப்பிரமணியம்
மா. சுப்பிரமணியம் (பிறப்பு: மே 25, 1953) (மற்ற பெயர்கள்: எம். சுப்ரமணிய பிள்ளை) நாகர்கோயிலை சேர்ந்த ஆங்கிலப் பேராசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். நாகர்கோயில் இந்துக்கல்லூரி ஆங்கிலத் துறையில் விரிவுரையாளராக பணியாற்றினார். முக்கியமான மொழியாக்கங்களை செய்துள்ளார். நாட்டாரியல் ஆய்வுகளில் அ.கா.பெருமாள் போன்ற அறிஞர்களுடன் பங்கெடுத்திருக்கிறார்.
இளமை, கல்வி
மா.சுப்பிரமணியம் மே 25, 1953 அன்று கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டியபுரத்தில் மாதேவன் பிள்ளை வள்ளியம்மாள் இணையருக்கு பிறந்தார். மாதேவன் பிள்ளை கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்டேட்களில் பணியாற்றினார்.
மா. சுப்பிரமணியம் பள்ளிக்கல்வியை 9-ஆம் வகுப்பு வரை அழகியபாண்டியபுரத்திலும் பின்னர் நாகர்கோயிலிலும் முடித்தார். இளங்கலை தாவரவியல் படிப்பை ஆரவாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரியில் படித்தார். பின்னர் மொழியார்வம் காரணமாக முதுகலை ஆங்கிலம் படிப்பை நாகர்கோயில் கல்லூரியிலும், இதழியல், இந்தியக் கலாச்சாரம் ஆகியவற்றில் டிப்ளமா படிப்புகளையும் படித்தார்.
பின்னர் மக்கள் தகவல் தொடர்பியலில் எம்.பில் படிப்பும், மொழிபெயர்ப்பு துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.
தனி வாழ்க்கை
மா. சுப்பிரமணியத்தின் மனைவி பெயர் ராஜேஸ்வரி. இவர்களுக்கு இரு மகன்கள். ஒருவர் தினமலர் நாளிதழிலும் மற்றவர் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் பணியாற்றுகின்றனர்.
மா. சுப்பிரமணியம் கல்லுரியிலிருந்து ஓய்வு பெற்றபின் குடும்பத்துடன் நாகர்கோயிலில் வசித்துவருகிறார்.
மொழியாக்கப் பணிகள்
மா. சுப்பிரமணியம் கல்வியாளராக மொழியாக்கம், மக்கள் தகவல் தொடர்பியல் பற்றிய பல கருத்தரங்குகளை ஒருங்கிணைத்து பங்கெடுத்துள்ளார். பின்னர் பண்பாட்டியலாளர்கள், வரலாற்று ஆய்வாளர்களுடன் இணைந்து ஆய்வுகளில் பங்கெடுத்தார்.
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற தம்பிமார் கதையை இவரது நண்பரான அ.கா. பெருமாள் தமிழில் எழுதியிருந்தார். 1999-ல் மா. சுப்பிரமணியம் இக்கதையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். A Scorching Guile என்ற பெயரில் இதை ஆசிய கல்வி நிறுவனம் , ஜி ஜான் சாமுவேல் ஆசிரியத்துவத்தில் வெளியிட்டது.
நாராயண குரு பற்றி கே. ஸ்ரீனிவாசன் எழுதிய ஆங்கில நூலை மா. சுப்பிரமணியம் 2004-ல் தமிழில் மொழியக்கம் செய்தார். ஜெயமோகன் எழுதிய முன்னுரையுடன் இதை தமிழினி வெளியிட்டது.
மற்ற எழுத்துப் பணிகள்
மைசூரில் இயங்கும் மத்திய இந்திய மொழிகள் கழகத்துக்காக மா.சுப்பிரமணியம் தமிழிலக்கிய வரலாற்றின் ஒரு பகுதியை எழுதினார்.
மா. சுப்பிரமணியம் நந்தவனம் என்ற சிற்றிதழை தன் குடும்பத்தாருடன் சேர்ந்து இரு வருடங்கள் நடத்தினார். இலக்கியம், கலை மட்டுமல்லாமல் பொது ஆர்வத்துக்குரிய இதழாக நந்தவனம் விளங்கியது.
சுந்தர ராமசாமியின் காகங்கள் இலக்கிய கூடுகை நிகழ்வுகளை அ.கா. பெருமாள் தொகுத்து வெளியிடுவதற்கு உதவினார். ஜெயமோகனும் நண்பர்களும் வெளியிட்ட சொல்புதிது இதழுக்காக பேட்டிகளில் பேட்டியாளராக பங்களித்தார். பல்கலை மானியக் குழுவுக்காக எம். வேதசகாயகுமார் செய்த ஆய்வுகளில் தொகுப்புரைகள் உருவாக்கினார்.
மா. சுப்பிரமணியம் கன்னியாகுமரி மற்றும் தமிழக அளவில் முனைவர் பட்டம் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி கல்வித்துறையில் தொடர்ந்து செயல்படுகிறார்.
படைப்புகள்
மொழியாக்கங்கள்
- A Scorching Guile (தமிழில் தம்பிமார் கதை, அ.கா பெருமாள்) பொது ஆசிரியர் ஜி. ஜான் சாமுவேல், Institute of Asian Studies, Chennai, 1999
- நாராயண குரு (ஆங்கிலத்தில் கே.ஸ்ரீனிவாசன்), தமிழினி பதிப்பகம், 2004
வெளி இணைப்புகள்
✅Finalised Page