ரா. செந்தில்குமார்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
ரா. செந்தில்குமார் ஒரு தமிழ் எழுத்தாளர். சிறுகதைகளையும் கட்டுரைகளையும் எழுதி வருகிறார். ஜப்பானில் வசித்து வரும் செந்தில்குமார் புதிய கதைக்களங்களிலும் பண்பாட்டு பின்புலங்களிலும் ஏற்படும் உராய்வுகளை கதையாக்குகிறார். தமிழகத்தை கதைக்களமாக கொண்ட கதைகள் நிலப்பிரபுத்துவத்திற்கு பின்பான காலகட்டத்தில், சென்ற காலத்து நிலப்பிரபுத்துவ ஆளுமைகளின் வீழ்ச்சியை பதிவு செய்கின்றன.
பிறப்பு, கல்வி
செந்தில்குமார் ஜூலை 23, 1976 அன்று அன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பி.எஸ். ராமலிங்கம்-ரெத்னா இணையருக்கு மகனாக பிறந்தார். பள்ளி இறுதி வரை மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். பூண்டி ஸ்ரீபுஷ்பம் கல்லூரியில் இளங்கலை கணிப்பொறியியலும், சென்னை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை கணிப்பொறியியலும் கற்றார்.
தனி வாழ்க்கை
2004ல் காயத்ரியை மணந்தார். கவின் என்று ஒரு மகனும் காவியா என்று ஒரு மகளும் உள்ளனர். தற்போது ஜப்பானில் மென்பொருள் நிறுவனராக பணியாற்றி வருகிறார்.
கல்லூரி காலத்தில், சிறிது காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஈடுபட்டார், தொடர்ந்து திராவிட இயக்கம் சார்ந்து சில அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டார்.
முழுமதி கல்வி அறக்கட்டளை மூலம் தமிழகத்திலுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவி, தமிழகத்திலுள்ள ஈழத் தமிழர் முகாம்களிலுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவிகளை மேற்கொண்டார். பின்தங்கிய கிராமங்களிலுள்ள அரசு பள்ளிகளை தத்தெடுத்து மாதிரி பள்ளிகளாக்க உதவிகள் செய்தார்.
இலக்கிய வாழ்க்கை
சிறிய வயதில் இவரது முதல் படைப்பாக கோகுலம் இதழில் சிறுகதை வெளியானது.
பள்ளி காலத்தில் சிட்டுக்குருவி என்னும் தலைப்பில் கையெழுத்து பத்திரிக்கை நடத்தினார். தொடர்ந்து ஜெயகாந்தன் மூலம் தமிழிலக்கியத்தில் ஈடுபாடு ஏற்பட்டு தொடர் வாசிப்பு மேற்கொண்டார். தமிழக இலக்கியவாதிகளான எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், லீனா மணிமேகலை போன்றோரை ஜப்பானுக்கு அழைத்து பல்வேறு இலக்கிய கூட்டங்களை நடத்தினார்.
தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக "ஜெயமோகன், தி. ஜானகிராமன், வண்ணதாசன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி மற்றும் லியோ டால்ஸ்டாயை" குறிப்பிடுகிறார்.
"இசூமியின் நறுமணம்" சிறுகதை தொகுப்பு 2021 ல் வெளியானது. பன்னிரு கதைகளில் நான்கு கதைகள் நீங்கலாக மற்றெல்லாம் ஜப்பானிய சூழலில் எழுதப்பெற்றவை. அவற்றுள் நடைமுறை, அலுவலகம், குடும்பம், வாழ்க்கை, மாநகர இயக்கங்கள் மற்றும் ஜப்பானிய தேசத்தின் குணநலன்கள் நுட்பமாகப் பேசப்படுகின்றன.
இலக்கிய இடம், மதிப்பீடு
ஜெயமோகன் "நெடுங்காலம் நல்ல வாசகராக இருந்து, தயக்கத்துடன் எழுதத்தொடங்கி, சில தன்வாழ்க்கைச் சித்தரிப்புகளையும் நினைவு கிளர்தல்களையும் எழுதி, எழுத்தில் நுண்ணுணர்வால் துழாவிக்கொண்டே இருந்து, சட்டென்று ஒரு கதைவழியாக தன்னை கண்டடைந்து தன் எழுத்தை அமைத்துக்கொள்வது பொதுவாக எழுதத்தொடங்குப்வர்களின் பாதை. அத்தகைய ஒரு திறப்புக்கணம் ரா.செந்தில்குமாரின் ’இசூமியின் நறுமணம்’என்னும் கதை" என்று செந்தில்குமாரை பற்றி மதிப்பீடு செய்கிறார்.
நாஞ்சில் நாடன் "‘இசூமியின் நறுமணம்’ எனும் இந்தத் தொகுப்பின் எட்டு கதைகள் மூலம் ஜப்பானியப் பண்புகளைப் படைத்துக்காட்ட முயலும் ரா.செந்தில்குமாரின் முயற்சி பாராட்டுதலுக்குரியது, வரவேற்கத் தகுந்தது. ‘எல்லை ஒன்றின்மை எனும் பொருள் அதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும்’ என்றுதான் பாரதியார் கம்பனையே முயற்சி என்கிறார். அந்த மதிப்பீட்டிலேயே ரா.செந்தில்குமாரின் இந்தக் கதைகளையும் முயற்சி என்கிறேன். ரா.செந்தில்குமார் என்பது பெயர்தான் என்றாலும் டோக்கியோ செந்தில் எனும் பெயரிலேயே நண்பர் பலரும் அறிவார் அவரை. எதிர்காலத்தில் ‘நாமமும் அனுமன் என்பேன்’ என்று கம்பன் கூறுவதைப்போல தமிழிலக்கியத்தில் பெயர்நிலைக்க அவர் முயல வேண்டும்." என்று இந்த சிறுகதை தொகுப்பின் முன்னுரையில் ஆசிரியர் செந்தில்குமாரை பற்றி குறிப்பிடுகிறார்.
எம். கோபாலகிருஷ்ணன் "உலகெங்கும் கால்கொண்டிருக்கும் இன்றைய புதிய தலைமுறை எழுத்தாளர்கள் பலர், தம் அயல்நில வாழ்வின் அனுபவங்களை தமிழ் கதைப்புலத்துக்கு வலுசேர்க்கும் புனைவுகளாக மாற்றித் தருகிறார்கள். அந்த வரிசையில் ரா.செந்தில்குமாரின் ‘இசூமியின் நறுமணம்’ தொகுப்பை சிறிதும் தயக்கமின்றி சேர்க்கலாம்" என்று செந்தில்குமாரை பற்றி குறிப்பிடுகிறார்.
நூல்கள்
நூல் பட்டியல்: இசூமியின் நறுமணம் சிறுகதை தொகுப்பு (2021)
சிறுகதைகள்
- மடத்து வீடு சிறுகதை (2016) - பதாகை இணைய இதழ்
- சர்வம் சௌந்தர்யம்
- சிபுயா கிராஸிங்க்
- மலரினும் மெல்லிது
- இசூமியின் நறுமணம்
- செர்ரி ஃப்ளாசம்
- இந்திர தேசம்
- அனுபவ பாத்தியம்
- பெட்டகம்
- நிவிக்குட்டியின் டெடிபேர்
கட்டுரைகள்
- தி.ஜா என்னும் சௌந்தர்ய உபாசகர்
- மானுடத்தின் மீதான பெருங்காதல்: போரும் அமைதியும்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.