under review

குளத்தங்கரை அரசமரம்

From Tamil Wiki
Revision as of 23:38, 12 April 2022 by Manobharathi (talk | contribs) (amending the date to the standard format and created hyperlinks for references)
மங்கையர்க்கரசியின் காதல்

குளத்தங்கரை அரசமரம் (1917) தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை என விமர்சகர்களால் சொல்லப்படுகிறது. வ.வே.சுப்ரமணிய ஐயர் இதை எழுதினார். மங்கையர்க்கரசியின் காதல் என்னும் நூலில் இந்தக்கதை இடம்பெற்றிருந்தது. தொடக்ககால விமர்சகர்கள் இதை தமிழின் முதல்சிறுகதை என்று சொன்னதை இன்று விமர்சகர்கள், இலக்கியவரலாற்றாசிரியர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

வெளியீடு

குளத்தங்கரை அரசமரம் என்ற தலைப்பில் பின்னர் வெளிவந்த கதை “குளத்தங்கரை அரசமரம் -ஒரு சிறிய கதை' என்ற பெயரில் முதலில் ஸூ.பாக்யலக்ஷ்மி அம்மாள் என்னும் புனைபெயருடன் 1915-ஆம் ஆண்டு 'விவேகபோதினி' செப்டம்பர், அக்டோபர் மாத இதழ்களில் இரு பகுதிகளாக வெளிவந்தது. ஒரு சிறிய கதை என அடைப்புக் குறிகளுடன் THE PEEPUL TREE NEAR THE TANK ( A SHORT STORY) என்ற துணைத் தலைப்புகளுடன் வெளியானது. (வ.வே.சு.ஐயரின் மனைவியின் பெயர் பாக்கியலட்சுமி அம்மாள்)

இக்கதையையும் சேர்த்து ‘இவை சந்திரகுப்தன் சரித்திராசிரியர் வெ.ஸூப்ரஹ்மண்ய ஐயரால் எழுதப்பட்டுள்ளன’ என்று குறிப்பிடப்பட்டு 'மங்கையர்க்கரசியின் காதல் முதலிய சிறுகதைகள்' என்ற தலைப்பில், ஐந்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பாக மண்டையம் சீனிவாசாச்சாரியாரும் வ.வே.சு.ஐயரும் சேர்ந்து நிறுவிய புதுச்சேரி கம்ப நிலையப் பிரசுரம் வெளியிட்டது .குளத்தங்கரை அரசமரம் கதை இங்கு குறிப்பிட்ட தொகுப்பில் ஐந்தாவது கதையாக இருந்தது. மங்கையர்க்கரசியின் காதல், காங்கேயன், அழேன் ழக்கே, கமலவிஜயம் ஆகியவை மற்ற கதைகள்.

கம்ப நிலையப் பிரசுரம் ஐந்து கதைகளுடன் பிரசுரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடாமல்தான் வெளியாகியுள்ளது. இவை சந்திரகுப்தன் சரித்திராசிரியர் வெ.ஸூப்ரஹ்மண்ய ஐயரால் எழுதப்பட்டவை என்ற முதற்பக்க ஆசிரியர் விவரக்குறிப்பு இருப்பதனால் இத்தொகுதி 1918-க்குப் பின்னரே வெளிவந்தது என ஊகிக்கப்படுகிறது. ஏனெனில் சந்திரகுப்தன் சரித்திரம் வெளியான ஆண்டு உறுதியாக 1918.

வ.வே.சு ஐயர் மறைவுக்குப் பின், 1927-ல், மூன்று கதைகள் சேர்த்து எட்டுக்கதைகள் கொண்ட தொகுப்பாக மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் என்னும் தலைப்பில் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. இதற்கு சி.ராஜகோபாலாச்சாரியார் முன்னுரை வழங்கியிருக்கிறார். வ.வே.சு.ஐயரின் மனைவி பாக்கியலட்சுமி அம்மாள் சார்பாக சங்கு சுப்ரமணியம் இந்நூலை வெளியிட்டார். 1953-ல் நான்காம் பதிப்பை அல்லையன்ஸ் கம்பெனி வெளியிட்டது.

கதைச்சுருக்கம்

இந்தக் கதை குளத்தங்கரையில் நின்றிருக்கும் அரசமரம் ஒன்று தானறிந்த கதையைச் சொல்வதுபோல் அமைந்துள்ளது. ருக்மிணி 12 வயதில் நாகராஜனை மணக்கிறாள். பல பொருளியல்நெருக்கடிகளினால் நாகராஜனின் குடும்பம் ருக்மிணியை கைவிட முடிவுசெய்கிறது. ஆனால் நாகராஜன் அவளை ஏற்கவே நினைக்கிறான். அச்செய்தி ருக்மிணிக்குச் சரியாகச் சொல்லப்படாததனால் அவள் குளத்தில் மூழ்கி உயிர்விடுகிறாள். நாகராஜன் சாமியாராகிறான்

முதல்சிறுகதை விவாதம்

வ.வே.சு ஐயருக்கு முன்னரே அ.மாதவையா, சி.சுப்ரமணிய பாரதியார் போன்றவர்கள் சிறுகதைகளை எழுதியுள்ளனர். ஆனால் வ.வெ,சு.ஐயர் மங்கையர்க்கரசியின் காதல் நூலுக்கு எழுதிய முன்னுரையில் சிறுகதை என்னும் தனித்த இலக்கியவடிவம் பற்றி குறிப்பாக சொல்லியிருப்பதனால் அவர் சிறுகதையின் வடிவம் பற்றிய உணர்வுடன் எழுதியவர் என்றும், ஆகவே இந்தக்கதை முதல்சிறுகதை என்றும் சொல்லப்பட்டது. புதுமைப்பித்தன் இக்கருத்தை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். விமர்சகர் க.நா.சுப்ரமணியம், சி.சு. செல்லப்பா போன்றவர்களின் கருத்து இது. தமிழ்ச்சிறுகதை வரலாறு எழுதிய சிட்டி -சிவபாதசுந்தரம் இருவரும் அதை ஏற்றிருக்கிறார்கள்.

ஆனால் மங்கையர்க்கரசியின் காதல் சிறுகதையின் செவ்வியல்வடிவில் அமையவில்லை. ஒரு சிறிய நீதிக்கதையாகவே உள்ளது. அதைவிட அ.மாதவையாவின் கண்ணன் பெருந்தூது, சி,சுப்ரமணிய பாரதியின் ரயில்வேஸ்தானம் போன்றவை சிறுகதை வடிவுக்கு அணுக்கமானவை.

குளத்தங்கரை அரசமரம் ரவீந்திரநாத் தாகூரின் ’கடேர் கதா' என்ற சிறுகதையின் தழுவல் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடேர் கதாவில் ஒரு படித்துறை ருக்மிணியின் கதைக்குச் சமானமாக ஒரு கதையைச் சொல்கிறது. அக்கதை தமிழிலும் த.நா.குமாரசாமியால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது

மங்கையர்க்கரசியின் காதல் தொகுதியிலுள்ள எல்லா கதைகளுமே வெவ்வேறு கதைகளின் தழுவல்களே. தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் வ.வே.சு.ஐயருக்கு குறிப்பிடத்தக்க இடமில்லை என்னும் கருத்து இன்றைய விமர்சகர் நடுவே உள்ளது

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.