under review

சிவவாக்கியர்

From Tamil Wiki
Revision as of 14:01, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சிவவாக்கியர்

சிவவாக்கியர் (பொ.யு. 9-ம் நூற்றாண்டு) சித்தர், தமிழ்ப்புலவர். பதினெண்சித்தர்களில் ஒருவர் என்பது சைவர்கள் கருத்து. இவரின் பாடல்கள் 'சிவவாக்கியம்' என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

துருக்கியர்கள் படையெடுத்து வந்த காலத்திற்கு பின் (பொ.யு. 9-ம் நூற்றாண்டு) சிவவாக்கியர் வாழ்ந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதினர். சிவனைப் பற்றிய பாடல்களைப் பாடியதாலும், 'சிவவாக்கியம்' என சில பாடல்களில் இருந்ததாலும் அறிஞர்கள் இந்தப் பெயரை இட்டனர் என்பர். ’சிவ சிவ’ என்று சொல்லிக்கொண்டு இவர் பிறந்த காரணததால் இவர்க்குச் 'சிவவாக்கியர்' என்று பெயரிடப்பட்டதென சைவர்கள் நம்பினர்.

தொன்மம்

சிவவாக்கியரும் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமழிசையாழ்வாரும் ஒருவரே என்பர். திருமழிசையில் பிருகுமுனிவர் செய்துவந்த தவத்தினைக் கலைக்கத் தேவேந்திரன் தேவமங்கை ஒருத்தியை அனுப்ப, அவள் தவத்தைக் கெடுத்து மகவொன்றையும் பெற்றுவிட்டுத் தேவலோகம் சென்றாள். அப்பிள்ளைக்குத் திருமழிசையான் என்ற பெயர்சூட்டித் திருவாளன் எனும் வேடன் வளர்த்தான். வளர்ப்புத் தந்தையின் வைணவமதத்தைத் தழுவித் திருமழிசையாழ்வார் என்று பேர்பெற்றிருந்தவர் பின்பு சைவராகிச் சிவவாக்கியர் ஆனார் என்பது சைவர் கருத்து. பார்க்கவ முனிவருக்குப் பிண்டமாகப் பிறந்து பின்பு பரிபூரணமாகித் திருவாளன் எனும் குறவனால் வளர்க்கப்பட்டுப் பல்வேறு சமயங்களிலும் புகுந்து பேயாழ்வாரால் மீட்கப்பட்டவர் திருமழிசையாழ்வார் என்பது வைணவர் கருத்து.

சிவவாக்கியம்

இலக்கிய வாழ்க்கை

சிவவாக்கியர் வைத்தியம், வாதம், யோகம், ஞானம் பற்றி பாடல்கள் இயற்றினார். கடவுள் ஒருவரே என்பது சிவவாக்கியரின் கொள்கை. பல கடவுள்களை வணங்குவதைக் கண்டித்து பாடல்கள் எழுதினார். இது 'சிவவாக்கியம்' என்று அழைக்கப்பட்டது. மறுபிறப்பில்லை என்றதும் இந்த ஞானியாருடைய கோட்பாடு. இது சார்ந்தும் பாடல்கள் எழுதினார். சிவவாக்கியரின் பாடல்கள் சிலவற்றை எல்லிஸ்துரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தாயுமானவர், சிவஞானவள்ளல், பட்டினத்தடிகள் ஆகியோர் சிவவாக்கியரைப் போற்றி பாடல்கள் எழுதினர்.

சிவவாக்கியப்பாடல்களின் எண்ணிக்கை குறித்து வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. 1904-ல் வெளியிட்ட மா. வடிவேலு முதலியாரின் உரையுடன் கூடிய பூவிருந்தவல்லி சுந்தரவிலாச அச்சுக்கூடப் பதிப்பில் 518 பாடல்கள் உள்ளன. 1959-ல் வெளியிடப்பட்ட அரு. ராமநாதனின் 'சித்தர் பாடல்கள்' எனும் பதிப்பில் 526 பாடல்களுள்ளன. 'நாடிப்பரீட்சை' என்னும் நூலையும் சிவவாக்கியர் இயற்றியதாகக் கூறுவர். 'வைத்திய சிரோரத்ன நடன காண்டம் 1500' என்ற நூலில் நான்கு பாடல்கள் மட்டும் சிவவாக்கியர் இயற்றியதாக உள்ளன. 'சிவவாக்கிய மந்திரம்', 'சிவவாக்கியர் குணவாகடம்', 'சிவவாக்கியர் சூத்திரம்' என்ற பெயரில் நூல்கள் வெளியாகியுள்ளன.

தத்துவம்

சிவவாக்கியரின் அவ்வெனும் எழுத்தினால் என்னும் புகழ்பெற்ற பாடல் அத்வைதம் முன்வைக்கும் பிரம்மவாதம் எனும் கொள்கைக்கு இணையானதாக உள்ளது. சைவமரபுக்குள் இருந்த வேதாந்தச் சார்பு கொண்ட தத்துவ மரபைச் சேர்ந்தவராக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

பாடல் நடை

  • ஒரே கடவுள்

அரியுமல்ல வரனுமல்ல வயனுமல்ல வப்புறம்
கருமைசெம்மை வெண்மையுங் கடந்துநின்ற காரணம்
பெரியதல்லச் சிறியதல்லப் பெண்ணுமாணு மல்லவே
துரியமுங் கடந்துநின்ற தூரதூர தூரமே

  • மறுபிறப்பில்லை

கறந்தபான் முலைப்புகா கடைந்தவெண்ணெய் மோர்புகா
உடைந்தசங்கி னேசையு முயிர்களு முடல்புகா
வடிந்தவோர டையினே டுதிர்ந்தபூ மரம்புகா
இறந்துபோன மானிட ரினிப்பிறப்ப தில்லையே

  • சிவவாக்கியர் சித்தர் பாடல்கள்

நட்ட கல்லை தெய்வம் என்று புட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொன என்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ

நூல் பட்டியல்

  • சிவவாக்கியம்
  • நாடிப்பரீட்சை

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 18-Oct-2023, 11:13:43 IST