under review

உண்மைநெறி விளக்கம்

From Tamil Wiki

உண்மைநெறி விளக்கம் 14 மெய்கண்ட சாத்திர நூல்களில் ஒன்று. தத்துவ நாதரால் இயற்றப்பட்டது. உமாபதி சிவாசாரியார் இயற்றியது எனக் கருதுவோரும் உண்டு.

ஆசிரியர்

உண்மைநெறி விளக்கத்தை இயற்றியவர் தத்துவ நாதர். இவர் சிற்றம்பல நாடிகளின் மாணவர்.

இந்நூலை எழுதியவர் உமாபதி சிவம் என்று மரபாகக் கூறப்பட்டு வந்தது. சு. அனவரத விநாயகம் பிள்ளை தன் ஆய்வின் முடிவில் இந்நூலின் ஆசிரியர் தத்துவ நாதர் என்று கண்டறிந்தார். தருமை ஆதினத்தின் மூலம் வெளிவந்த மெய்கண்ட சாத்திரப் பதிப்பும் ஆசிரியர் தத்துவ நாதர் என்றே குறிப்பிடுகிறது. நூலின் பாயிரப் பாடலும்

எண்ணும் அருள்நூல் எளிதின் அறிவாருக்கு
உண்மை நெறிவிளக்கம் ஓதினான் -வண்ணமிலா
தண்காழித் தத்துவனார் தாளே புனைத்தருளும்
நண்பாய தத்துவ நாதன்

என்று குறிப்பிடுகிறது

நூல் அமைப்பு

உண்மை நெறி விளக்கம் காப்பு தவிர ஆறு பாடல்களைக் கொண்டது. இப்பாடல்கள் இறையருளால் உயிர் பெறும் பேற்றை பத்து நிலைகளிலாகக் கூறுகின்றன.

உண்மை என்பது மெய்ஞ்ஞானம்‌ அல்லது சிவஞானம்‌. அதுவே வீடு பேற்றிற்குச்‌ சாதனம். அதனைப்‌ பெறுதற்குரிய வழி உண்மை நெறி எனப்படும்‌. அவ்வழிகளை

  • தத்துவ ரூபம்‌
  • தத்துவ தரிசனம்‌
  • ஆன்ம ரூபம்‌,
  • ஆன்ம தரிசனம்‌
  • ஆன்ம சுத்தி
  • சிவரூபம்‌
  • சிவதரிசனம்‌
  • சிவயோகம்‌
  • சிவபோகம்‌

எனப்‌ பத்தாகத்தொகுத்து மெய்கண்ட நூல்கள்‌ கூறும்‌. இவை 'தசகாரியம்‌' எனப்படும்‌.

இந்த ஞானவழிகளாகிய தசகாரியத்தை ஆறு பாடல்களில் சுருங்கக்கூறி விளங்கவைக்கும்‌ நூலே உண்மை நெறி விளக்கம்‌. அரிதாகப் பெற்ற பிறவி நீங்கும் முன் பிரபஞ்சப்‌ பற்றினை நீக்கி, உயிரின்‌ இயல்பினையுணர்ந்து, சிவத்தின்‌ காட்சி கண்டு, சிவயோகிகளாய்‌, சிவபோகம் நுகர்ந்து இன்புறும் வழியைக் கூறுகிறது.

பாடல்களின் பேசுபொருள்

சிற்றம்பல நாடிகள் எழுதிய துகளறு போதம் கூறும் முப்பது நிலைகளும் உண்மை நெறி விளக்கத்தின் ஆறு பாடல்களில் உள்ளன என்று சிந்தனை உரை கூறுகிறது.

  • முதல் பாடல் - தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி
  • இரண்டாம் பாடல்- ஆன்ம ரூபம், தரிசனம், சுத்தி
  • மூன்றாம் பாடல்- சிவரூபம்
  • நான்காம் பாடல் -சிவதரிசனம்
  • ஐந்தாம் பாடல்-சிவயோகம்
  • ஆறாம் பாடல்-சிவபோகம்

உரைகள்

உண்மைநெறி விளக்கத்துக்கு சிந்தனை உரை, நமச்சிவாயத் தம்பிரான் உரை என பலர் உரைகள் உள்ளன. கா. சுப்ரமணிய பிள்ளை உரைநடையில் ஓர் உரை எழுதியுள்ளார்.

பாடல் நடை

மண்முதற்‌ சிவம தீறாய்‌ வடிவுகாண்‌ பதுவே ரூபம்‌
மண்முதற்‌ சிவம தீறாய்‌ மலஞ்சட மென்றல்‌ காட்சி
மண்முதற்‌ சிவம தீறாய்‌ வகையதிற்‌ றானி லாது
கண்ணுத லருளானிங்கல்‌ சுத்தியாய்க்‌ கருத லா

சிவயோகம்


எப்பொருள்வந் துற்றிடினு மப்பொருளைப் பார்த்தங்
கெய்துமுயிர் தனைக்கண்டிங் கவ்வுயிர்க்கு மேலா
மொப்பிலருள் கண்டுசிவத் துண்மை கண்டிங்
குற்றதெல்லா மதனாலே பற்றி நோக்கித்
தப்பினைச்செய் வதுமதுவே நினைப்புமது தானே
தருமுணர்வும் புசிப்புமது தானே யாகும்
எப்பொருளு மசைவில்லை யெனவந்தப் பொருளோ
டிசைவதுவே சிவயோக மெனுமிறைவன் மொழியே.


உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.