under review

சி.எம். ராமச்சந்திர செட்டியார்

From Tamil Wiki
Revision as of 08:15, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
Kovaikizhar.jpg

சி.எம். ராமச்சந்திர செட்டியார் (கோவைக்கிழார் சி.எம். ராமச்சந்திர செட்டியார்) (நவம்பர் 03, 1888 - டிசம்பர் 03, 1969) தமிழறிஞர், வரலாற்றாளர். கொங்கு நாட்டு வரலாற்றை எழுதியவர். நாற்பது ஆண்டுகள் தொடர்ந்து நாட்குறிப்புகள் எழுதியவர். இசைக்கருவிகளைப் பற்றி தமிழில் தொகுத்து நவீன மொழியில் எழுதிய முன்னோடி.

சி.எம். ராமச்சந்திர செட்டியார் வழக்கறிஞராக கோவையில் பணியாற்றினார். கோவைக்கிழார் என்றழைக்கப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

Kovaikizhar1.jpg

சி.எம். ராமச்சந்திர செட்டியார் நவம்பர் 03, 1888 அன்று மருதாசலம், கோளம்மா ( அக்கம்மா) தம்பதியருக்குப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் எட்டு பேர். ராமச்சந்திர செட்டியார் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தேவாங்கச் செட்டியார் குலத்தில் பிறந்தவர்.

கோவை நகராட்சிப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். லண்டன் மிஷன் பள்ளியில் உயர்நிலைக் கல்வி கற்றார். சென்னை ராஜதானி கல்லூரியில் எப்.எ, பி.ஏ இயற்பியல் பயின்றார். 1905 - 12 ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல் படித்துப் பட்டம் பெற்றார்.

சமஸ்கிருதம், இந்தி, உருது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றறிந்தார்.

தனி வாழ்க்கை

Kovaikizhar2.jpg

சி.எம். ராமச்சந்திர செட்டியார் தன் இருபதாவது வயதில் செல்லம்மாவை திருமணம் செய்துக் கொண்டார். பிள்ளைகள் ஆறு பேர்.

1912-ம் ஆண்டு கோவையில் வழக்கறிஞராகப் பதவி ஏற்றார். கோவை நீதிமன்ற அலஸியஸ் ரிசீவராக இருந்தார். அறநிலையப் பாதுகாப்புத் துறை ஆணையராகவும் பணியாற்றினார். ராமச்சந்திர செட்டியார் 1918-ம் ஆண்டு கோவை நகராட்சியின் துணைத் தலைவராக இருந்தார். 1943 - 48 ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினராக பட்டத்தாரி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழ் வளர்ச்சி ஆலோசகராகவும் பணியாற்றினார். தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தின் உறுப்பினர் பதவியில் இருந்தார். கோவை அரசுக் கல்லூரி பழைய மாணவர் கழகத்திலும், காஸ்மோபாலிடன் க்ளப்பிலும் தலைவராக இருந்தார்.

சமூகப் பணி

சி.எம். ராமச்சந்திர செட்டியார் கோவை தேவாங்கர் உயர்நிலைப் பள்ளியின் நிறுவனர். கோவைத் தமிழ்ச் சங்கம் உருவாக காரணமாக இருந்தார். கோவைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார். தேவாங்கர் சாதியின் வளர்ச்சிக்கு கோவையில் கைத்தறிக் கூட்டுறவு சங்கங்களை உருவாக்கினார்.

கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டுமென குன்றக்குடி அடிகளாருடன் சேர்ந்து குரல் கொடுத்தார்.

பேரூர் தமிழ்க் கல்லூரி

கோவை பேரூர் சாந்தலிங்கர் திருமடம் சார்பில் பேரூர் தமிழ்க் கல்லூரி உருவாகத் துணைபுரிந்தார். சாந்தலிங்கத் தம்பிரானின் தலைமையில் அக்கல்லூரி 1953-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கல்லூரியின் வளர்ச்சிக்கு நிதி சேர்க்கப் பாடுபட்டார். கல்லூரி நூலக உருவாக்கத்திற்கும் உழைத்தார். 1953-ம் ஆண்டு பேரூர் தமிழ்க் கல்லூரியில் சிந்து சமவெளி ஆய்வு பற்றிப் பேச ஹெராஸ் பாதிரியாரை (சிந்து சமவெளி பற்றிய ஆரம்பகால ஆய்வாளர்) அழைத்து வந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சி.எம். ராமச்சந்திர செட்டியார் பள்ளி நாட்களிலேயே தமிழ் மீது ஈடுபாடு கொண்டார். ராமச்சந்திர செட்டியாரின் ஆசிரியர்களான திருச்சிற்றம்பலம் பிள்ளை, சபாபதிப் பிள்ளை பள்ளி நாட்களில் அவருக்கு ஆதர்சமாக இருந்தனர். கல்லூரியில் உ.வே.சாமிநாதையர் ராமச்சந்திர செட்டியாரின் ஆசிரியர்.

அறநிலையப் பாதுகாப்புத் துறை ஆணையராகப் பணியாற்றிய போது தமிழக கோவில்களுக்குச் சென்று ஒவ்வொரு கோவிலின் வரலாறு, நிர்வாக முறை பற்றிய செய்திகளையும் தொகுத்திருக்கிறார். இவை எதுவும் அச்சில் வரவில்லை. இவற்றுடன் இவர் எழுதிய வரலாற்று நாடகங்கள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், வாழ்க்கை வரலாறு என பல நூல்கள் அச்சில் வரவில்லை. பல இதழ்களில் எழுதியவைகளும் தொகுக்கப்படவில்லை

சி.எம். ராமச்சந்திர செட்டியாரின் கையெழுத்துப் பிரதிகள் அனைத்தும் பேரூர் சாந்தலிங்க அடிகளார் மடத்தின் நூலகத்தில் உள்ளன. பல துறைகளில் ஈடுபாடு கொண்ட ராமச்சந்திர செட்டியார் எழுதி வெளிவந்த நூல்கள் எண்பதற்கு மேல் இருக்கும் என அவர் வாழ்க்கை வரலாற்றை தொகுத்த சி.ஆர். இளங்கோவன் குறிப்பிடுகிறார்.

ராமச்சந்திர செட்டியார் தெலுங்கு மொழியில் தமிழ் இலக்கிய வரலாறு உருவாக முயற்சி செய்தார்.

தொல்லியல் நூல்கள்

ராமச்சந்திர செட்டியார் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் உதவியுடன் 'அணிப்பித்து' என்னும் நூலில் கல்வெட்டில் காணப்படும் அணிவகைகளைக் கால வரிசைப்படி தொகுத்துள்ளார்.

சென்னை ஓலைச்சுவடிகள் நூலகத்தில் இருந்த 'சோழன் பூர்வ பட்டயம்', 'கொங்குதேச ராஜாக்கள்', 'பேரூர் கோவை' ஆகிய நூல்களைப் பதிப்பித்தார். தஞ்சை சரஸ்வதி மகாலில் இருந்த 'இராமப்பையன் அம்மானை' ஏட்டைப் பதிப்பித்தார். இந்நூல் வையாபுரிப் பிள்ளையாலும் பதிப்பிக்கப்பட்டது. ஆனால் செட்டியாரின் நூலில் நிறைய வரலாற்றுச் செய்திகள் சேர்க்கப்பட்டுள்ளன.

சமய நூல்கள்

சி.எம். ராமச்சந்திரனின் கொங்கு நாட்டில் உள்ள சமண வழிபாடு பற்றிய ‘சமணமும் கொங்கும் அபயசந்து' என்ற நூல் முக்கியமானது. தேவார நால்வர்கள் குறித்து ’நால்வரும் கல்வெட்டுகளும்’ என்ற நூலை எழுதியுள்ளார். கேரள திரிசூர் மாவட்டம் திருவஞ்சைக்குளம் சிவன் கோவில் தேவாரம் பாடிய சுந்தரருடன் தொடர்புடையது என்ற தகவலை கண்டுபிடித்து எழுதினார். இதை தவிர கோவையிலுள்ள கோவில்கள், அவற்றின் வழிபாடு முறைகள் பற்றிய புத்தங்கள் எழுதியுள்ளார்.

பயண நூல்கள்

1951-ம் ஆண்டு சி.எம். ராமச்சந்திர செட்டியார் தன் ஏழு நண்பர்களோடு இலங்கை யாழ்ப்பாணம் சென்ற பயணத்தை ’நாங்கள் எழுவர்’ என்ற பயண நூலாக எழுதியுள்ளார். இந்நூல் 2010-ம் ஆண்டு கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் மறுபதிப்பு கண்டது.

இசைக்கருவிகள்

அண்ணாமலை பல்கலைக்கழகம் வெளியிட்ட இவரது 'தமிழிசைக் கருவிகள்' நூல் முக்கியமானது. இது இசைக்கருவிகள் பற்றி நவீன மொழியில் அமைந்த முன்னோடி நூல்.

கோவை வரலாறு

‘இதுவோ எங்கள் கோவை’ என்ற தலைப்பில் கோவை மாநகராட்சியின் வரலாறு முழுவதும் தொகுத்து எழுதியுள்ளார்.

நாட்குறிப்பு

சி.எம். ராமச்சந்திர செட்டியார் நாட்குறிப்பை சீராக எழுதியவர். இந்நாட்குறிப்புகள் சி.எம். ராமச்சந்திர செட்டியாரின் கால வரலாற்றை அறிய உதவுபவை. அந்த வகையில் ஆனந்தரங்கம்பிள்ளை, வீரநாயக்கர், சவரிராயப் பிள்ளை, மறைமலையடிகள் வரிசையில் வருபவர் சி.எம். ராமச்சந்திர செட்டியார் என ஆய்வாளர் அ.கா. பெருமாள் குறிப்பிடுகிறார். அவர் நாற்பது ஆண்டுகள் தொடர்ந்து எழுதிய நாட்குறிப்பு கோவை பேரூர் தமிழ்க் கல்லூரியில் உள்ளது.

இதழியல் வாழ்க்கை

கோவை தமிழ்ச் சங்கம் சார்பாக வெளிவந்த 'கொங்கு மலர்' இதழை 1934 முதல் 37 வரை நடத்தினார். 1947 முதல் 1959 வரை சைவ சித்தாந்த சமாஜத்தின் 'சித்தாந்தம்' இதழுக்கு ஆசிரியராக இருந்தார்.

பட்டங்கள்

  • ஆங்கில அரசின் ராவ் சாகிப் (1930), ராவ் பகதூர்(1938) பட்டம் பெற்றவர்.
  • சென்னை மாநிலத் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்ப் புரவலர் பட்டம்
  • மதுரை ஆதீனம் சைவ ஞாயிறு பட்டம்

விருது

  • தமிழ் வளர்ச்சிக் கழகம் கொங்குநாட்டு வரலாற்று நூலுக்குச் சிறந்த நூலாசிரியர் விருது வழங்கியது.

மறைவு

டிசம்பர் 03, 1969 அன்று சென்னையிலுள்ள மகள் வீட்டில் காலமானார். சி.எம். ராமச்சந்திர செட்டியாரின் சமாதி அவர் நிறுவிய கோவை பேரூர் கல்லூரியில் உள்ளது.

வாழ்க்கை வரலாற்று நூல்கள்

  • கோவை கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார், சி.ஆர். இளங்கோவன்

நூல்கள்

பதிப்பித்த நூல்கள்
  • இராமப்பையன் அம்மானை ஏட்டையிலிருந்து பதிப்பித்தல்
  • தமிழிசைக் கருவிகள்
  • சோழன் பூர்வ பட்டயம்
  • கொங்குதேச ராஜாக்கள்
  • பேரூர் கோவை
செய்யுள் தொகுப்புகள்
  • நாங்கள் எழுவர்
  • திருவஞ்சைக்களம் செலவு
  • மண்டைக்காடு விழா
உரைநடை நூல்கள்
  • கோவில் பூனைகள்
  • கொங்கு நாட்டு வரலாறு
  • முட்டம் வரலாறு
  • நாட்டுப்புறம்
  • தமிழிசைக் கருவிகள்
நாடகங்கள்
  • காஞ்சி மாதேவி
  • வீழ்ச்சியம் மீட்சியும்
  • சிவராத்திரி பெருமை
  • நாட்டுப்பற்று
  • சென்றமைந்தன் வென்றுவந்தது
தொகுத்த நூல்கள்
  • அணிப்பித்து

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page