standardised

காண்டீபம் (வெண்முரசு நாவலின் எட்டாம் பகுதி)

From Tamil Wiki


காண்டீபம் (‘வெண்முரசு’ நாவலின் எட்டாம் பகுதி)

காண்டீபம்[1] (‘வெண்முரசு’ நாவலின் எட்டாம் பகுதி) இந்திரபிரஸ்தம் அமைக்கப்பட்ட பின்னர் அர்ஜுணன் யாத்திரை மேற்கொள்வதை விவரிக்கிறது. அர்ஜுணன் வென்று மணந்தவர்கள் நால்வர். திரௌபதி, உலூபி, சித்ராங்கதை, சுபத்திரை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு உலகைச் சேர்ந்தவர். ஒவ்வொரு வெற்றியிலும் அவன் தன்னைத் தானே கண்டடைந்துகொள்கிறான். அக்கண்டடைதலின் உச்சத்தில் தன் ஐந்தாவது துணையாகிய காண்டீபத்தைப் பிறிதொன்றாக உணர்கிறான். மகாபாரத அர்ஜுணன் வெறும் வில்லேந்தி அல்லன்; தனக்கென ஏதும் நாடாமல் போர்புரிந்த கர்மயோகி. ஞானமுழுமை அவனுக்கே சொல்லப்பட்டது. அறிந்து கடந்து தானே மெய்மைதான் என்றானவன் அவன். அந்த அருந்ததவத்தானின் பயணத்தின் தொடக்கத்தைச் சித்தரிக்கிறது இந்தக் காண்டீபம். மகாபாரதத்தின் திருப்புமுனைத்தருணங்களுக்கு முன்னால் ஒவ்வொன்றும் தன்னைக் கூர்மைப்படுத்திக்கொள்ளும் தருவாயில் நிகழ்கிறது. சமண சமயத்தின் தோற்றம் குறித்த சித்தரிப்புகள் இந்தக் காண்டீபத்தில் உள்ளன.

பதிப்பு

இணையப் பதிப்பு

‘வெண்முரசு’ நாவலின் எட்டாம் பகுதியான ‘காண்டீபம்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் செப்டம்பர் 2015 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு நவம்பர் 2015-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

காண்டீபத்தைக் கிழக்கு பதிப்பகம் அச்சுப் பதிப்பாக வெளியிட்டது.

ஆசிரியர்

‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

அர்சுணன்-சுபகைக்கு இடையிலான உறவிலிருந்துதான் இந்தக் ‘காண்டீபம்’ தொடக்கம் பெறுகிறது. அந்த உறவின் உண்மைத்தன்மையை வாசகருக்கு விளக்கிய பின்னர்தான் இது நிறைவுறுகிறது. சுபகை-அர்சுணன் உறவில் சுபகை அர்சுணனுக்குத் தன்னை ‘ஆத்மார்த்தமாக முழுதளித்தாள்’ என்பதே எழுத்தாளரின் அழுத்தமான கருத்தாக இருக்கிறது. அதனாலேயே அர்சுணனுக்குப் பிற பெண்களைவிட அவளே அகவயமாகிறாள். அவள் விழைவதும் அதைத்தான். அதை அவள் எய்திவிடுகிறாள்.

‘காண்டீபம்’ முழுக்க முழுக்க அர்சுணனின் அதிதிறமை பற்றியும் பிறரால் அடைய முடியாத அரிய மகளிரையும் எண்ணற்ற தடைகளைத் தன் மனஉறுதியாலும் உடல் வலிமையாலும் தகர்த்து, திருமணம் புரியும் விதங்கள் குறித்தும் பேசுகிறது. அர்சுணனின் உள்ளமும் காண்டீபமும் ஒன்றே. அர்சுணனின் உள்ளமே அவனை எங்கும் எத்தகைய தடையையும் தகர்த்தபடியே முன்னோக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது. காண்டீபமும் தன்னுள் ஏற்றப்படும் அம்பினை அவ்வாறே பாயச் செய்கிறது.

தொடக்கத்திலும் இறுதியிலும் சிறார்களின் கனவுலகம் பற்றி விரியும் இதில் அடுத்தடுத்த அத்யாயங்கள் ‘காமிக்ஸ்’ தன்மை கொண்டு திகழ்கின்றன. அர்சுணன் மேற்கொள்ளும் நெடும் பயணங்கள் அனைத்துமே சாகஸக்காரருக்குரியவைதான். அதனாலேயே அந்தப் பயண வழியில் அர்சுணன் எதிர்கொள்ளும் அனைத்தும் எழுத்தாளர் ஜெயமோகனின் சொற்களின் வழியாக அதிகற்பனையில் விளைந்த ‘செவ்வியல் காமிக்ஸா’க இந்தக் காண்டீபத்தை மாறிவிடுகின்றன.

அர்சுணன்-உலூபிக்கு அரவான் பிறப்பதும் அர்சுணன் ஃபால்குனையாக மாறி சித்ராங்கதனை அடைந்து, ஆண் பெண்ணாகவும் பெண் ஆணாகவும் மாறி பப்ருவாகனைப் பெற்றெடுப்பதும் ஐந்து தேவகன்னியர்கள் ஐந்து முதலைகள் போல வடிவெடுத்து வந்து, அர்சுணனைத் தாக்குவதும் அவர்களை அர்சுணன் எளிதில் வெல்வதும் ஏரியில் மிதக்கும் அதிசய நகரத்தைப் பற்றிய சித்திரமும் மீகற்பனைகளே என்றாலும்கூட, வாசகர்கள் அவற்றை ஏற்றுக்கொள்ளும் வகையில்தான் எழுத்தாளர் ஜெயமோகன் காட்சிகளை அமைத்துள்ளார்.

வெண்முகில் நகரத்தில் ஒரு வரைபட அளவில் மட்டுமே காட்டப்படும் ‘இந்திரப்பிரஸ்தம்’ காண்டீபத்தில்தான் அது எவ்வெவ்வகையில் துவாரகையைவிடச் சிறந்தது, வேறுபட்டது என்பது பற்றியெல்லாம் விளக்கப்பட்டுள்ளது. இவற்றின் ஊடாக ‘இந்திரப்பிரஸ்தம்’ குறித்த எதிர்மறை விமர்சனமும் இழையோடுகிறது. பெண்களின் அதிகாரங்கள் நிறைந்த அந்தப்புரங்கள்; ஆண்களின் விழைவுகள் நிரம்பிவழியும் அரசவைகள்; வணிகர்களின் பேராசைகளால் மிளிரும் வணிகப் பெருநகரங்கள் என மூன்று தரப்புகளால் ‘காண்டீபம்’ திகழ்கிறது.

துவாரகையிலிருந்து அர்சுணனும் சுபத்திரையும் தப்பிச் செல்லும் காட்சி சில அத்யாயங்கள் வரை நீள்கின்றன. அந்த அத்யாயங்களில் எழுத்தாளர் ஜெயமோகன் பயன்படுத்தியிருக்கும் சொற்றொடரமைப்பின் வழியாக அர்சுணனும் சுபத்திரையும் செல்லும் யவனத்தேரின் அதிவேகமும் துவாரகையின் ஒவ்வொரு குறுக்குத் தெருவின் காட்சியும் நம் கண்முன் துலங்குகின்றன. சுபத்திரையின் திறமையும் அர்சுணனின் வலிமையும் துவாரகையின் நகர்விரிவும் என மூன்றையும் இணைத்து அந்த அத்யாயங்கள் எழுதப்பட்டுள்ளன.

அர்சுணன்-உலூபி பற்றிய தகவல்களில் இடைவெட்டாக ஆண், பெண் பாலின மாற்றத்தால் ஏற்படும் உடலியல், உளவியல் சார்ந்த நெகிழ்வுகளைக் காணமுடிகிறது.

அர்சுணன் உடலளவிலும் மனத்தளவிலும் சிவயோகியாக மாற்றம்கொண்டு ‘ரைவதமலை’க்கும் இந்திரப்பிரஸ்தத்துக்கும் நுழையும் காட்சிகளில் பிறிதொரு அர்சுணனை வாசகர்கள் கண்டடைகின்றனர். அந்த அர்சுணன் குருதியை வெறுக்கும் அர்சுணன்; படைக்கலங்களைப் புறக்கணிக்கும் அர்சுணன். அத்தகைய அர்சுணனையே சுபத்ரை விரும்புவதாக எழுத்தாளர் காட்டியிருப்பது ஒருவகையில், ஒட்டுமொத்த கதையோட்டத்தில் ஏற்படும் துள்ளல்தான். இதனை மீறல் என்றும் கொள்ளலாம். இந்த மீறலின் வழியாகவே திரௌபதி, சுபத்ரை ஆகியோக்கு இடையே உள்ள முரணைக் குறிப்புணர்த்திவிடுகிறார் எழுத்தாளர். பெண்மீது முடிவற்ற விழைவுகொண்ட அர்சுணனையே அனைத்துப் பெண்களும் விரும்பும்போது, சுபத்ரை மட்டும் சிவயோகி வேடமிட்ட அர்சுணனை விரும்புவது ஒரு முரண்தான். இதற்குச் சுபத்ரைக்கு ஷத்ரியர்களைப் பிடிக்காது என்பது, ஒரு காரணமாக இருந்தாலும் இதற்கு இயல்பாகவே சுபத்ரையிடம் குடிகொண்டுள்ள இறுமாப்புதான் முதன்மைக்காரணமாக இருக்கும். ஒருவகையில், ‘திரௌபதியின் மற்றொரு வடிவம்தான் சுபத்ரை’ என்ற நோக்கில் நாம் சிந்தித்தால், சுபத்ரையின் இந்த இறுமாப்புக்குரிய அடிப்படைக் காரணத்தை நம்மால் உய்த்தறிய இயலும். அந்த இறுமாப்பினைத் தகர்ப்பதற்காகத்தான் திரௌபதி, ‘நெடுநாட்களுக்குப் பின்னர் இந்திரப்பிரஸ்தத்துக்குள் நுழையும் அர்சுணன் தன்னையே முதலில் சந்திக்க வேண்டும்’ என்று விரும்பி, அவனை அழைத்துச் சந்திக்கிறாள்.

காண்டீபத்தின் சில அத்யாயங்களில் உள்ளும் புறமுமாகச் சமண (அருகர்) சமயத்தைப் பற்றி விரிவான தகவல்கள் உள்ளன. அவை அக்காலச் சமுதாயத்தில் சமண சமயத்தின் தாக்கம் பற்றியும் இனக்குழு மக்களிடையே சமணம் பெற்றிருந்த செல்வாக்குக் குறித்தும் அறிய உதவும். அருகநெறியும் கருணைமொழியும் கொண்டவராக அரிஷ்டநேமியைப் படைத்து, அவரையும் இளைய யாதவருக்கு நிகரானவராகக் காட்டியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன். ‘வெண்முரசு’ நாவல் பகுதிகள் முழுக்கவே விதவிதமான அதிமானுடரை வாசகர்கள் காணமுடியும். அந்த வகையில்தான் காண்டீபத்தில் அரிஷ்டநேமி இடம்பெற்றுள்ளார். இவர் இளைய யாதவரையும் வென்றவராகவும் இந்திரனின் வெள்ளையானையின் மீதேறி விண்ணகம் செல்பவராகவும் காட்டப்பட்டுள்ளார். ‘வெண்முரசு’ நாவலில் பெரும்பாலும் சைவமும் வைணவமும் இரண்டறக் கலந்துள்ளன. அவற்றோடு, அவற்றுக்கு நிகராகச் சமண சமயமும் பிணைந்துள்ளது.

இதுநாள் வரை வாசகர்கள் ‘காண்டீபம்’ பற்றி நினைத்திருக்கும் கற்பனைப் படிமத்தைத் தகர்த்துள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன். ‘காண்டீபம்’ கனமானது; யாராலும் அதைத் தூக்க இயலாது; அது வடிவில் மிகப்பெரியது; மிகப் பெரிய அம்புகளைப் பொருத்தி எய்யப் பயன்படுவது என்றெல்லாம் நாம் நினைத்திருந்தோம். ஆனால், எழுத்தாளர் ‘காண்டீபம்’ பற்றிக் கூறும்போது, காண்டீபத்தைக் குறிப்பிட்ட பகுதியைப் பிடித்துத் தூக்கினால் எளிதில் தூக்கிவிட முடியும் என்றும் அதைச் சுருக்கி சுருக்கி முழங்கை அளவுக்கு மாற்றிவிடலாம் என்றும் அதில் மிகச் சிறிய அம்பினைப் பொருத்தி எய்ய முடியும் என்றும் கூறுவது பெருவியப்பளிக்கிறது.

யாதவப்பெருங்குடிகளின் வல்லமையும் இயலாமையும் யாதவர்களின் வாய்மொழியாகவே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இளைய யாதவர் அவர்களை ஒன்றுதிரட்ட விழையவில்லை எனில் அவர்கள் வெறும் இனக்குழு மாந்தர்களாவே வாழ்ந்து மடிந்திருக்கக் கூடும். குலத்தலைவர்களின் அதிகார எல்லைகளையும் புழங்கு நில வரம்புகளையும் விரித்து, அவர்களை அரசாட்சி வட்டத்துக்குள் இழுத்துவந்து, அவர்களின் தகுதிநிலையை உயர்த்திய பெருமை இளைய யாதவரையே சாரும். அந்தணர், ஷத்ரியர், வணிகர், வேளாளர் என்ற நாற்பெருங்குடிக்கு இடைநிகர்த்தவராக யாதவர்களைக் கொண்டுவந்து நிறுத்தி, அவர்களை மையமாக்க முயலும் இளைய யாதவரின் திட்டமான ‘யாதவப் பேரரசு’ உருவாக்கம் என்பது, ஒட்டுமொத்த பாரதவர்ஷத்துக்கே விடுக்கப்பட்ட அறைகூவல்தான். இந்திரப்பிரஸ்தத்தில் மாபெரும் நகரணிவிழாவும் இளைய யாதவரை முதன்மை வேள்விக்காவலராக நிறுத்தி ராஜசூய வேள்வியும் நடத்துவதன் வழியாக மற்றொரு அறைகூவல் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து திரௌபதியால் பாரதவர்ஷத்துக்கு விடுக்கப்பட உள்ளது. ஒருவகையில் துவாரகையும் இந்திரப்பிரஸ்தமும் இணைநகரங்கள்தான். இரண்டுமே யாதவப் பேரரசுகளாகவேதான் மக்களின் முன் நிறுத்தப்படுகின்றன.

கதை மாந்தர்

அர்சுணன் முதன்மைக் கதைமாந்தராகவும் இளைய யாதவர், திரௌபதி, உலூபி, சித்ராங்கதை, சுபத்திரை, அரிஷ்டநேமி, சுபகை ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.

உசாத்துணை

இணைப்புகள்


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.