under review

இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

From Tamil Wiki
Revision as of 09:04, 11 November 2023 by Logamadevi (talk | contribs)

இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாமை இயற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

பெருங்கெளசிகனார் என்பது இயற்பெயர். அந்தணர். இரணியமுட்டமென்பது மதுரையைச் சுற்றி அமைந்த ஆனைமலை, நத்தம், அழகர்மலை, திருப்பத்தூர் ஆகிய இடங்களை உள்ளடக்கிய சிறியநாடு. மலைபடுகடாத்தின் 145-வது அடியில் இவரைப்பற்றிய தகவல்கள் உள்ளன.

இலக்கிய வாழ்க்கை

இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாம் நூலை இயற்றினார். நற்றிணையில் இரண்டு (44,139) பாடல்களும் இவர் பெயரில் உள்ளன. கௌசிகனாரென்று ஒரு நல்லிசைப் புலவர் பெயர் பழைய நூல்களில் உள்ளது. அவரும் இவரும் ஒருவரா வேறா எனத் தெரியவில்லை.

மலைபடுகடாம் நவிர மலையின் தலைவனான நன்னன் சேய் நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது. 583 அடிகளால் ஆன பாடல். ஒரு கூத்தன் வேறொரு கூத்தனை ஆற்றுப்படுத்தியதால் இந்நூல் கூத்தராற்றுப்படை என்னும் வகைமையைச் சேரும்.

பாடல் நடை

  • மலைபடுகடாம் (1 – 13)

திருமழை தலைஇய இருள் நிற விசும்பின்
விண் அதிர் இமிழிசை கடுப்ப பண் அமைத்துத்,
திண் வார் விசித்த முழவொடு, ஆகுளி,
நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்,
மின் இரும் பீலி அணித்தழைக் கோட்டொடு,
கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின்,
இளிப் பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு,
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ,
நடுவு நின்று இசைக்கும் அரிக்குரல் தட்டை,
கடி கவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி,
நொடிதரு பாணிய பதலையும் பிறவும்,
கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப,
நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்;

உசாத்துணை


✅Finalised Page