under review

முதுமொழிக்காஞ்சி

From Tamil Wiki
Revision as of 10:21, 4 November 2023 by Logamadevi (talk | contribs)

முதுமொழிக்காஞ்சி, சங்கம் மருவிய காலத் தொகுப்பான பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று. முதுமொழிக்காஞ்சியை இயற்றியவர் மதுரை கூடலூர் கிழார்.

பெயர்க் காரணம்

முதுமொழிக்காஞ்சி எனும் பெயரில் உள்ள முதுமொழி என்பது பழமொழி மூதுரை, முதுசொல் எனப் பொருள்படும். காஞ்சித் திணை நிலையாமையை உணர்த்தும். புறப்பொருள் வெண்பாமாலையில் முதுமொழிக் காஞ்சி என்று ஒரு துறை அமைந்துள்ளது. இதனை, 'மூதுரை பொருந்திய முதுமொழிக் காஞ்சி' என்றுதொகைச் சூத்திரத்தில் சுட்டியதோடு, பின்னர்,

'பலர் புகழ் புலவர் பன்னினர் தெரியும்
உலகியல் பொருள்
 முடிவு உணரக் கூறின்று'

என்று விளக்கியும் இதன் ஆசிரியர் ஐயனாரிதனார் உரைத்துள்ளார். உலகியல் உண்மைகளைத் தெள்ளத் தெளிந்த புலவர் பெருமக்கள் எடுத்து இயம்புவது முதுமொழிக்காஞ்சி .

காலம்

முதுமொழிக்காஞ்சியின் காலம் சங்கம் மருவிய காலமான ஐந்தாம் நூற்றாண்டு என கருதப்படுகிறது.

ஆசிரியர் குறிப்பு

முதுமொழிக்காஞ்சி நூலை இயற்றியவர் மதுரைக் கூடலூர் கிழார். கூடலூர் இவர் பிறந்த ஊராகவும், மதுரை பின்பு புகுந்து வாழ்ந்த ஊராகவும் இருத்தல் கூடும். கிழார் என்னும் குறிப்பினால் இவரை வேளாண் மரபினர் என்று கொள்ளலாம். தொல்காப்பிய மரபியலில்,

"ஊரும் பேரும் உடைத் தொழிற் கருவியும்
யாரும் சார்த்தி அவை அவை பெறுமே"

என்ற சூத்திர உரையில் 'அம்பர்கிழான் நாகன், வல்லங்கிழான் மாறன் என்பன வேளாளர்க்கு உரியன' எனக் குறிப்பிடப்படுகிறது. வரும் குறிப்பு மேற்கூறிய கருத்தை வலியுறுத்தும். தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் உடைமைப்பெயர்க்கு உதாரணமாக அம்பர் கிழான், பேரூர்கிழான்' என்பவை காட்டப்பட்டுள்ளன. இது கொண்டு கூடலூரைத் தம் உடைமையாகக் கொண்டவர் கூடலூர்கிழார் என்றும் ஊகிக்கலாம்.

சங்க நூல்களில் குறிக்கப்பெறும் கூடலூர் கிழாரும் இவரும் ஒருவர் அல்லர். சங்கப் புலவர் 'புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்' என்று குறிக்கப் பெறுகிறார். இவ் இருவரையும் குறிக்கும் அடைமொழி வேறுபாடே இருவரும் வேறு வேறு புலவர் என்பதைப் புலப்படுத்தும். மேலும், முதுமொழிக் காஞ்சியில் வரும் விழைச்சு, சொன்மலை, மீப்பு முதலிய பிற்காலச் சொல்லாட்சிகளும் இவர் சங்கப் புலவர் காலத்திற்குப் பிற்பட்டவர் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. டாக்டர் உ.வே.சாமிநாதையர் தான் பதிப்பித்த புறநானூறு நூலின் பாடினோர் வரலாற்றில், 'முதுமொழிக்காஞ்சியை இயற்றிய மதுரைக் கூடலூர் கிழார் வேறு, இவர் வேறு' என்று குறித்துள்ளார்.

நூல் அமைப்பு

முதுமொழிக்காஞ்சி பத்துப் பாடல்களைக் கொண்ட பத்து பதிகங்களைக் கொண்டது. ஒவ்வொரு பதிகமும் "ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்" என்னும் தரவு அடியோடு தொடங்குகிறது. அடுத்து ஓரடிப் பாடல்கள் பத்து ஒவ்வொன்றிலும் தாழிசை போல அடுக்கி வருகின்றன. முதுமொழிக்காஞ்சி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. பத்து அடிகளைக் கொண்ட ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனிப் பெயர் வழங்கப்பட்டுள்ளது

  • சிறந்த பத்து
  • அறிவுப் பத்து
  • பழியாப் பத்து
  • துவ்வாப் பத்து
  • அல்ல பத்து
  • இல்லைப் பத்து
  • பொய்ப் பத்து
  • எளிய பத்து
  • நல்கூர்ந்த பத்து
  • தண்டாப் பத்து

முதுமொழிக்காஞ்சியை நச்சினார்க்கினியர் முதலிய பழைய உரையாசிரியர்கள் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார்கள். முதுமொழிக்காஞ்சி முழுமைக்கும் தெளிவான பழைய பொழிப்புரை உள்ளது.

பாடல் நடை

எளிய பத்து

ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
 ஓதலின் சிறந்தன்று ஒழுக்க முடைமை.
காதலின் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்
மேதையின் சிறந்தன்று கற்றது மறவாமை
வண்மையின் சிறந்தன்று வாய்மை உடைமை
இளமையின் சிறந்தன்று மெய்பிணி இன்மை
நலன் உடைமையின் நாணுச் சிறந்தன்று.
குலன் உடைமையின் கற்புச் சிறந்தன்று.
கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று.
செற்றாரைச் செறுத்தலின் தன் செய்கை சிறந்தன்று.
முன்பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று.

உசாத்துணை


✅Finalised Page