under review

மதுரை கூடலூர் கிழார்

From Tamil Wiki

மதுரைக் கூடலூர் கிழார் முதுமொழிக்காஞ்சி நூலை இயற்றியவர். கூடலூர் இவர் பிறந்த ஊராகவும், மதுரை பின்பு வாழ்ந்த ஊராகவும் இருத்தல் கூடும். கிழார் என்னும் குறிப்பினால் இவரை வேளாண் மரபினர் என்று கொள்ளலாம். இவர் சங்கப்புலவர் காலத்திற்குப் பிற்பட்ட காலத்தவர் என கருதப்படுகிறது.

தொல்காப்பிய மரபியலில்,

ஊரும் பேரும் உடைத் தொழிற் கருவியும்
யாரும் சார்த்தி அவை அவை பெறுமே.

என்ற சூத்திர உரையில் 'அம்பர்கிழான் நாகன், வல்லங்கிழான் மாறன் என்பன வேளாளர்க்கு உரியன' என வரும் குறிப்பு மேற்கூறிய கருத்தை வலியுறுத்தும், தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் உடைமைப்பெயர்க்கு உதாரணமாக அம்பர் கிழான், பேரூர்கிழான்' என்பவை காட்டப்பட்டுள்ளன. இது கொண்டு கூடலூரைத் தம் உடைமையாகக் கொண்டவர் கூடலூர்கிழார் என்றும் ஊகிக்கலாம். அரிசில் கிழார், ஆவூர் கிழார், காரி கிழார், கோவூர் கிழார், என்று இவ்வாறு கிழார் என்னும் சிறப்புடன் புலவர் பலர்சங்க நூல்களிலும் காணப்படுகின்றனர்.

சங்க நூல்களில் குறிக்கப்பெறும் கூடலூர் கிழாரும் இவரும் ஒருவர் அல்லர். சங்கப் புலவர் 'புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்' என்று குறிக்கப் பெறுகிறார். இவ் இருவரையும் குறிக்கும் அடைமொழி வேறுபாடே இருவரும் வேறு வேறு புலவர் என்பதைப் புலப்படுத்தும். மேலும், முதுமொழிக் காஞ்சியில் வரும் விழைச்சு, சொன்மலை, மீப்பு முதலிய பிற்காலச் சொல்லாட்சிகளும் இவர் சங்கப் புலவர் காலத்திற்குப் பிற்பட்டவர் என்பதைத் தெளிவுபடுத்தும். டாக்டர் உ.வே. சாமிநாதையர் புறநானூற்றில் தாம் எழுதிய பாடினோர் வரலாற்றில், 'முதுமொழிக் காஞ்சியை இயற்றிய மதுரைக் கூடலூர் கிழார் வேறு; இவர் வேறு' என்று குறித்துள்ளார்.

பாடல் நடை

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
ஓதலில் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை
காதலில் சிறந்தன்று கன்னஞ்சப் படுதல்
மேதையில் சிறந்தன்று கற்றது மறவாமை
வன்மையில் சிறந்தன்று வாய்மை உடைமை
இளமையில் சிறந்தன்று மெய்பிணி இன்மை
நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று
குலனுடை மையின் கற்புச் சிறந்தன்ற
கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று
செற்றரை செருதலில் தற்செய்கை சிறந்தன்று
முன்பெரு கலின்பின் சிருகாமை சிறந்தன்று

பொருள்:

  • கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் உள்ள மக்களுக்கு எல்லாம், கல்வியைக் காட்டிலும் நல்லொழுக்கம் உடைமை சிறந்ததாகும்.
  • ஒருவரிடம், அன்பைக் காட்டிலும், தமது உயரிய பண்பைக் கண்டு மதிக்கும் முறையில் அவர் அஞ்சி ஒழுகும்படி நடத்தல் சிறந்தது.
  • கல்வியில் பெரிய மேதையாய் வல்லமை பெற்று இருப்பதைக் காட்டிலும், கற்ற வரைக்கும், மறவாமல் அதன்படி ஒழுகுதல் சிறந்தது.
  • வளமான செல்வம் உடைமையை விட, உண்மையான (முறை தவறாத) வாழ்வு உடைமை சிறந்தது.
  • நோயோடு கூடிய இளமையை விட, நோயின்றி ஒரளவு முதுமையும் நல்லது.
  • எல்லாச் செல்வங்களைக் காட்டிலும், நாணமும் மானமும் உடைய வாழ்க்கை சிறந்தது.
  • உயர் குலத்தோர் என்னும் பெருமையினும், கற்பு-கல்வி உடையவர் என்னும் பெருமை சிறந்தது.
  • ஒருவர் தாம் கற்பது போதாது; கற்றவர்களைப் போற்றி வழிபடுதல் சிறந்தது.
  • பகைவரை ஒறுத்தலைவிட (தண்டித்தலை விட), அவரினும் தம்மை உயர்ந்தவராக்கிக் காட்டுதல் சிறந்தது.
  • முன்னால் ஆரவாரமாக வாழ்ந்து வளம் குன்றிப் போவதினும், பின்னால் நிலைமை குறையாமல், நிறையுடன் வாழ்தல் சிறந்தது.

உசாத்துணை

தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page