being created

ஆலம்பேரி சாத்தனார்

From Tamil Wiki

ஆலம்பேரி சாத்தனார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் இயற்றிய எட்டுப் பாடல்கள் சங்க இலக்கிய தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

ஆலம்பேரி சாத்தனார் பெயரிலுள்ள ஆலம்பேரி ஊர்ப் பெயராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சாத்தன் என்பது வணிகரைக் குறிக்கும் பொதுப்பெயர். மேலும் இவர், மதுரை ஆருலாவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார் எனவும் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

ஆலம்பேரி சாத்தனார், இயற்றிய எட்டுப் பாடல்கள் சங்க இலக்கிய தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன. அகநானூறு நூலில் 47, 81, 143, 175- வது பாடல்களும் நற்றிணை நூலில் 152, 255, 303, 338- ஆகிய பாடல்களும் ஆலம்பேரி சாத்தனாரால் இயற்றப்பட்டவை. இவற்றுள் புறநானூறு பாடல்கள் நான்கும் பாலைத் திணையை சார்ந்தவை. நற்றிணையில் இடம் பெற்றுள்ள பாடல்களில் மூன்று நெய்தல் திணையையும் ஒன்று குறிஞ்சித் திணையையும் சார்ந்தது.

பாடல்களால் அறியவரும் செய்திகள்

தன் காதல் நிறைவேறாத தலைவன் மடலேறும் வழக்கம் இருந்தது. மடலேறும் ஆடவன் பனங்கருக்கால் ஆன குதிரையின்மேல் ஆவிரை, பூளை, உழிஞை மலர்களை இடையிட்டுக் கட்டிய எருக்கம் பூ மாலையைச் சூடி மடல் ஏறினான் (நற் 152)

ஊர் மன்றத்துப் பனைமரத்தின் அடியில் கடவுள் சிலைகள் இருக்கும்.

கரடி இலுப்பை மரத்தின் இனிய பழங்களை விரும்பி உண்ணும். பழங்கள் சலித்துப்போனால் கரையான் புற்றுகளைத் துளைத்து புற்றாஞ்சோற்றை (புற்றிலுள்ள கரையான்களை) உண்ணும். (அகம் 81)

விளங்கு என்னும் நகரில் இருந்துகொண்டு அரசாண்ட மன்னன் பெரும் வீரனும், கொடையாளியுமான கடலன். (அகம் 81)

மலைப்பாங்கான இடங்களில் நள்ளிரவு நேரம் குறிஞ்சிப்பண் பாடப்பட்டது. அச்சம் தரும் இடமும் காலமும் ஆகும்.  ”நறுங்கா நடுக்கத்துக் குறிஞ்சி பாடி” (மலைபடுகடாம் 359) . மலையிடங்களில் உறையும் தெய்வங்களைக் கவர வணக்கத்துடன் கூத்தரும் விறலியரும் குறிஞ்சிப்பண்ணைப் பாடினர். அச்சவுணா்வே குறிஞ்சிக்கு அடிப்படை உணா்வாகக் காணப்பட்டது.

பிட்டன் வானவனின் படைத்தலைவன். குதிரைமலைச் சாரலுக்கு அரசன். குதிரைமலை குதிரை போல் உருவம் கொண்டிருந்தது. இந்த மலைப்பகுதியில் குதிரைக் கவாஆன் என்ற கணவாய்(கவாஅன்) இருந்தது. (அகம் 143).

அகநானூறு 47

தலைமகன் இடைச் சுரத்து அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது

சுழற்றியடிக்கும் சூறைக்காற்றால் மூங்கிற்காடுகள் தீப்பிடித்து எரிந்தாலும் நாம் அவற்றைக் கடந்து செல்வோம்.

ஊரில் மாலையில் மகளிர் விளக்கேற்றும் நேரத்தில் போய்ச் சேரலாம்.

நம் வீட்டு முற்றத்தில் இரைதேடி நடைபோடும் புறாகூட அண்டை வீட்டு மாடப்புறாவைக் கூவியழைக்கும் அந்த மாலை வேளையில், ‘எங்கே இருக்கிறாரோ, என்ன செய்கிறாரோ’ என்று நம்மைப் பற்றி எண்ணிக் கலங்கிக்கொண்டிருப்பாள் நம் தலைவி.

அவளை அப்படியே அள்ளிக்கொண்டு கட்டிக்கொள்ளலாம். கொண்ட கொள்கையினின்றும் வழுவாமல் பணியாற்றிய உறுதிகொண்ட நம் உள்ளத்தை நம் பரம்பரையே வாழ்த்தும்.

நெஞ்சே! நீ விரைவில் எழுந்து பணியினை மேற்கொள்வாயாக

அகநானூறு 81

பாலைத்திணை

பிரிவுணர்த்திய தலைமகற்கு, தோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து சொல்லியது

விடியற்காலத்தில் இரையைத் தேடி உலாவும் இரையைக் கொள்ளுதலில் வல்ல கரடி உயர்ந்த கிளைகளையுடைய இலுப்பை மரத்தின் இனிய பழங்களைத் தின்னும்

பழங்கள் சலித்துப்போனால் பொலிவற்ற துளைகளைக் கொண்ட மண்புற்றின், கூட்டமான கறையான்கள் ஒன்றுகூடி முயன்று செய்த நனைந்த வாயையுடைய நெடிய உச்சியினை இரும்புலையில் ஊதும் துருத்தியைப் போல் பெரிதாய் வளைக்குள் மூச்சுவிட்டுப் புற்றாஞ்சோற்றை உண்ணும்

நிலம் வெடிக்கும்படியாக வறண்டுபோன பாலை நிலத்தில், கண்கள் கூசும்படியாக ஞாயிறு காயும்

கவிழ்ந்து கிடக்கும் பரட்டைத் தலையையுடைய வலிமையான கிளைகளைக் கொண்ட பாதை ஓரத்து வெண்கடம்பு மரத்தில் ஏறியிருந்து, ஒற்றையாக, பாய்ந்து இரையைப் பற்றும் பருந்து வருந்தியிருக்கும்

வெப்பம் மிக்க நீண்ட இடங்களான கடும்சண்டைகள் நடக்கும் கடந்துசெல்லக் கடினமான வழியினைத் தாண்டிச் செல்ல உமது உள்ளம் தூண்டுகிறது

வெகுண்டெழுந்த பகைவரின் ஒளிர்கின்ற வேல்படையுள்ள போர்க்களத்தை, யானைப்படைகளும் அழியுமாறு வெல்லும், சிறந்த வள்ளலான கடலன் என்பவனின் விளங்கில் என்னும் ஊரினைப் போன்ற, எனது கருமையான அழகிய மைதீட்டிய கண்கள் கலங்கி அழுகின்றன

ஐயனே பொருள் தேடுவதற்காக என்னைப் பிரிந்து செல்வீர்களா பொருள்தேடுவதற்காக.

அகநானூறு 143

ஐய, பொருள் செய் வினை மேற்கொண்டு இவளைப் பிரிய எண்ணுகிறீர்.

காடே கட்டழகை இழக்கும்படிக் கடுமையான வெயில் காய்கிறது. மரக்கிளைகள் இலைகள் இல்லாமல் வறுமையுற்றுக் கிடக்கின்றன.

சருகாகிக் கிடக்கும் தேக்கிலைகள் மேலைக்காற்றால் ஒதுக்கப்பட்டுக் கிடக்கின்றன. மூங்கிலில் பற்றிய தீ அதில் விழுந்து பற்றி எரிகிறது. எரியும் வெடிமுழக்கம் மலைப் பிளவுகளில் எதிரொலிக்கிறது.

“இப்படிப்பட்ட கொடுமையான மலைக்காட்டைக் கடந்து செல்லப்போகிறேன்” என்று நீ வாயால் சொன்னதற்கே இவள் கண்கள் நீரைக் கொட்டுகின்றன.

பிட்டன் வானவனின் படைத்தலைவன். குறைபாடு இல்லாமல் கடுமையாகப் போர் புரியும் ஆற்றல் மிக்கவன். வந்தவர்களுக்கெல்லாம் வளமான பொருள்களைச் சுரக்கும் ஊற்றாக விளங்குபவன். வீரக் கழல் அணிந்தவன். வாளாற்றல் மிக்கவன். உயர்ந்த மலைமுகடு கொண்ட குதிரைமலைச் சாரலுக்கு அரசன். குதிரைமலை குதிரை போல் உருவம் கொண்டிருந்தது. இந்த மலைப்பகுதியில் குதிரைக் கவஆன் என்ற கணவாய்(கவாஅன்) இருந்தது.

அவன் மலையில் உள்ள சுனையில் பூத்திருக்கும் நீலமலர் போன்ற இவளது கண்கள் அழுகின்றன. அதற்காக நான் நொந்துகிடக்கிறேன்

அகநானூறு 175
  • பாலைத்திணை
  • பிரிவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது
  • மழைக்காலத்தில் திரும்பிவிடுவேன் என்று கூறி அவர் என்னை நம்பவைத்தார்
  • வில்லில் நாண் கட்டும் விளிம்புப் பகுதி பருமனாகவுள்ள வலிமையான வில்லை உடைய ஆண்கள் அம்பினை எய்து வழிப்போக்கர்களின் உயிரைப் போக்கும்போதெல்லாம் பருந்துகள் தன் சுற்றத்தை அழைத்து வீழ்ந்து கிடப்போரின் முடைநாற்றம் அடிக்கும் உடலை உண்ணும்.
  • என் முன்னங்கையை வளையலோடு பற்றிக்கொண்டு கூறினார். “மழை பொழிய மேகம் சூழும் காலத்தில் வினையை முடித்துக்கொண்டு வந்துவிடுவேன்” என்றார். தோழி! அவர் சொன்ன மழைக்காலம் வந்துவிட்டதே.
  • கைவண்மை மிக்க வள்ளல் செழியன் வலிமை மிக்க தேரில் சென்று ஆலங்கானம் என்னுமிடத்தில் போரிட்டபோது அவன் வேல்கள் மின்னியது போல இப்போது வானம் மின்னுகிறது. அப்போது அவன் முரசு முழங்கியது போல இடி முழங்குகிறது. சக்கரத்தைக் கையிலே கொண்ட திருமால் மார்பில் உள்ள ஆரம் போல வானவில்லை வளைத்துக் காட்டுகிறது. மண்ணெல்லாம் விளைச்சல் தருமாறு மழை பொழிகிறது. அவர் வருவேன் என்று சொன்ன காலம் இதுதானே?
நற்றிணை 152
  • நெய்தல் திணை
  • மடல் வலித்த தலைவன் முன்னிலைப் புறமொழியாக, தோழி கேட்கச் சொல்லியது.
  • கொண்ட காமமோ இந்தப் பனங்கருக்காலே கட்டிய பரியைத் தந்தது
  • ஊராரெடுக்கும் அலரோ ஆவிரை, பூளை, உழிஞை என்று இன்னன மலர்களை இடையிட்டுக் கட்டிய எருக்கம் பூ மாலையைத் தந்தது
  • சூரியனோ தன்னொளி வானின் மேலே செல்லும்படி விளங்கிய கதிர்கள் மழுக்க மடைந்து எனக்குத் துன்பத்தைத் தந்தது
  • முற்கூறிய யாவும் எல்லாவற்றையுந் தந்தவற்றின் மேலும்; மெல்லென வாடைக்காற்றுப் பனித்துளியைத் தூவுதலாலே; கூட்டிலே தன் பெடையைப் பிரியாது புணர்ந்திருக்கும் அன்றிற் பறவையின் குரலுடனே அளாவிக்கொண்டு; இரவென்பதும் என் செயலெல்லாம் அழியும்படி செய்தது
  • கண்டோர் யாவராலும் இரங்கும்படியாகிய நிலைமையையுடைய. நான் இவ்வளவு துன்பத்திற்கிடையே இனி எவ்வண்ணம் உய்குவேனோ?
நற்றிணை 255
  • குறிஞ்சித் திணை
  • கழுதுப்பேய் நடமாடும் என்று அஞ்சி ஊரே உறங்கிக் கொண்டிருக்கிறது.
  • ஊரைக் காக்கும் கானவர் வழக்கமாக அச்சம் தரும் குறிஞ்சிப் பண்ணைப் பாடிக்கொண்டு உறங்காமல் இருக்கின்றனர்.
  • காட்டில் வலிமை மிக்க யானையோடு போரிட்ட வரிப்புலி தன் கல்லுக் குகையில் இருந்துகொண்டு உறுமுகிறது
  • மலையடுக்கத்தில் மின்னலும் இடியுமாக மழை பொழிந்து கொண்டிருக்கும் நள்ளிரவு இது.
  • அவர் வரும் வழியில் படமெடுத்தாடும் நச்சுப்பாம்பு வருந்தும்படி இடி முழங்குகிறது.
  • அவர் இல்லாமல் என் மென்மையான தோள் சோர்ந்து வருந்தினாலும் பரவாயில்லை. இன்று அவர் வராமல் இருந்தால் நல்லது.
நற்றிணை 303
  • நெய்தல்
  • வேட்கை தாங்ககில்லாளாய்த் தோழிக்குத் தலைமகள் சொல்லியது
  • ஆரவாரம் மிக்க ஊராகிய பாக்கம் ஒலி அடங்கி யாமத்தில் ‘நள்’ என்னும் அமைதி ஒலியுடன் உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும்.
  • ஊர் மன்றத்துப் பனைமரத்தின் அடியில் கடவுள் சிலைகள் இருக்கும்.
  • அந்தப் பனைமரத்தில் இருந்துகொண்டு அன்றில் பறவைகள் பேசிக்கொள்ளும் ‘உயவு’க் குரல் கேட்கும்.
  • அந்தக் குரல் கேட்கும்போதெல்லாம் கண்ணுறங்காமல் இருக்கும் அவள் துயரம் மேலிட்டு வருந்துவாள்.
  • அப்படி வருந்தும் ஒருத்தி தனக்காக இருக்கிறாள் என்று எண்ணிப் பார்க்காமல் என் தலைவன் இருக்கிறான்.
  • தோழி, கேள்.வலிமையான கையை உடைய பரதவர் கடலுக்குள் சென்று தம் செம்மைத்திறம் கொண்ட குத்துக்கோலை எறியும்போது வளைத்து முடிந்திருக்கும் அவர்களின் வலையை அறுத்துக்கொண்டு சுறாமீன் ஓடும் கடல் நிலத்தை உடையவன் அவன்.
  • அவன் என் நெஞ்சின் துயரை அறியவில்லை
நற்றிணை 338
  • நெய்தல் திணை
  • ஒருவழித் தணந்த காலை ஆற்றாத தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது.
  • கடுமையாக வெயில் பொழிந்த ஞாயிறு மலையில் மறைந்துவிட்டது.
  • அடும்புக் கொடியை அறுத்துகொண்டு அவர் தேர் வரும் ஓசை இரவு வந்த பின்பும் கேட்கவில்லை.
  • பெருந்துன்பம் என்னை வாட்டுகிறது. இப்படிச் சொல்லிக்கொண்டு வருந்தும் நிலைமையை நிறுத்திக்கொள் என்று கூறுகிறாய்.
  • இங்குள்ள நிலையில் வருந்துவதை நான் எப்படித் தவிர்க்க இயலும்?
  • அகன்ற கடல்பரப்பில் இரையைத் தேடி உண்டு பசியாறிவிட்ட குருகு, மீன் புலால் நாற்றம் வீசும் நம் சிறுகுடி மன்றத்தில் ஓங்கி நிற்கும் பனைமர மடலில் ஏறி இருந்துகொண்டு, தன் வளைந்த வாயை உடைய பெண்குருகைத் தன் கூட்டில் சேர்ந்து உறவாட மெதுவாகக் கூவி அழைத்துக் கொண்டே இருக்கிறது.
  • என் உயிரே போகும்படியான அந்தக் காதல் ஒலியைக் கேட்கும் நான் வருந்தாமல் எப்படி இருக்கமுடியும்?

பாடல் நடை

அகநானூறு 47

பாலைத்திணை பிரிவுணர்த்திய தலைமகற்கு, தோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து சொல்லியது

அழிவு இல் உள்ளம் வழிவழிச் சிறப்ப
வினை இவண் முடித்தனம்ஆயின், வல் விரைந்து
எழு இனி வாழிய நெஞ்சே! ஒலி தலை
அலங்கு கழை நரலத் தாக்கி, விலங்கு எழுந்து,
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி
விடர் முகை அடுக்கம் பாய்தலின், உடன் இயைந்து,
அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும்
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி, கைம்மிக்கு,
அகன் சுடர் கல் சேர்பு மறைய, மனைவயின்
ஒண் தொடி மகளிர் வெண் திரிக் கொளாஅலின்,
குறு நடைப் புறவின் செங் காற் சேவல்
நெடு நிலை வியல் நகர் வீழ்துணைப் பயிரும்
புலம்பொடு வந்த புன்கண் மாலை,
'யாண்டு உளர்கொல்?' எனக் கலிழ்வோள் எய்தி,
இழை அணி நெடுந் தேர்க் கை வண் செழியன்
மழை விளையாடும் வளம் கெழு சிறுமலைச்
சிலம்பின் கூதளங் கமழும் வெற்பின்
வேய் புரை பணைத் தோள், பாயும்
நோய் அசா வீட, முயங்குகம் பலவே.

சுழற்றியடிக்கும் சூறைக்காற்றால் மூங்கிற்காடுகள் தீப்பிடித்து எரிந்தாலும் நாம் அவற்றைக் கடந்து செல்வோம்.ஊரில் மாலையில் மகளிர் விளக்கேற்றும் நேரத்தில் போய்ச் சேரலாம். நம் வீட்டு முற்றத்தில் இரைதேடி நடைபோடும் புறாகூட அண்டை வீட்டு மாடப்புறாவைக் கூவியழைக்கும் அந்த மாலை வேளையில், ‘எங்கே இருக்கிறாரோ, என்ன செய்கிறாரோ’ என்று நம்மைப் பற்றி எண்ணிக் கலங்கிக்கொண்டிருப்பாள் நம் தலைவி. அவளை அப்படியே அள்ளிக்கொண்டு கட்டிக்கொள்ளலாம். கொண்ட கொள்கையினின்றும் வழுவாமல் பணியாற்றிய உறுதிகொண்ட நம் உள்ளத்தை நம் பரம்பரையே வாழ்த்தும். நெஞ்சே! நீ விரைவில் எழுந்து பணியினை மேற்கொள்வாயாக

நற்றிணை 152

நெய்தல் திணை மடல் வலித்த தலைவன் முன்னிலைப் புறமொழியாக, தோழி கேட்கச் சொல்லியது.

மடலே காமம் தந்தது; அலரே
மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே;
இலங்கு கதிர் மழுங்கி, எல் விசும்பு படர,
புலம்பு தந்தன்றே, புகன்று செய் மண்டிலம்;
எல்லாம் தந்ததன்தலையும் பையென
வடந்தை துவலை தூவ, குடம்பைப்
பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ,
கங்குலும் கையறவு தந்தன்று;
யாங்கு ஆகுவென்கொல்; அளியென் யானே?

கொண்ட காமமோ இந்தப் பனங்கருக்காலே கட்டிய பரியைத் தந்தது? ஊராரெடுக்கும் அலரோ ஆவிரை, பூளை, உழிஞை என்று இன்னன மலர்களை இடையிட்டுக் கட்டிய எருக்கம் பூ மாலையைத் தந்தது? சூரியனோ தன்னொளி வானின் மேலே செல்லும்படி விளங்கிய கதிர்கள் மழுக்க மடைந்து எனக்குத் துன்பத்தைத் தந்ததுமுற்கூறிய யாவும் எல்லாவற்றையுந் தந்தவற்றின் மேலும்; மெல்லென வாடைக்காற்றுப் பனித்துளியைத் தூவுதலாலே; கூட்டிலே தன் பெடையைப் பிரியாது புணர்ந்திருக்கும் அன்றிற் பறவையின் குரலுடனே அளாவிக்கொண்டு; இரவென்பதும் என் செயலெல்லாம் அழியும்படி செய்தது. கண்டோர் யாவராலும் இரங்கும்படியாகிய நிலைமையையுடைய நான் இவ்வளவு துன்பத்திற்கிடையே இனி எவ்வண்ணம் உய்குவேனோ?


உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.