under review

அ.லெ. நடராஜன்

From Tamil Wiki
Revision as of 22:05, 11 September 2026 by Ramya (talk | contribs)
அ.லெ. நடராஜன் (நன்றி: தீபம் இதழ்)

அ.லெ. நடராஜன் (அ.லெ. நடராசன்; நம்பி) (ஜூன் 09, 1909 - ?) எழுத்தாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர். வாழ்க்கை வரலாற்று நூல்கள் பலவற்றை எழுதினார். ரஷ்ய, ஹிந்தி மொழி நூல்கள் சிலவற்றை மொழிபெயர்த்தார். காரைக்குடியில் புதுமைப் பதிப்பகம் என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் பல நூல்களை வெளியிட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

அ.லெ. நடராஜன், இராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடியில், ஜூன் 09, 1909 அன்று பிறந்தார். உயர் கல்வி கற்ற இவர் தமிழ், ஆங்கிலம், ஹிந்தியில் புலமை பெற்றார். இவரது குடும்ப விவரங்களைப் பற்றி அறிய இயலவில்லை.

அ.லெ. நடராஜன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

அ.லெ. நடராஜன், சா. கணேசனால் ஊக்குவிக்கப்பட்டார். வாழ்க்கை வரலாற்று நூல்கள் பலவற்றை எழுதினார். காந்தியக் கொள்கைகள் மீது ஆர்வம் கொண்டு காந்தி எழுதிய நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டார். ரஷ்ய, ஹிந்தி இலக்கிய நூல்களை மொழிபெயர்த்தார். சிறார்களுக்கான நூல்களை எழுதினார். தொகுப்பு நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். அ.லெ. நடராஜன் லின்யுடாங், வினோபா பாவே, முல்க்ராஜ் ஆனந்த், மிகெயில் சோலோகோவ் ஆகியோரின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவராக அறியப்படுகிறார். 'நம்பி' என்ற புனை பெயரில் சில நூல்களை எழுதினார்.

'ஏழைபங்காளன் லெனின்' என்னும் நூலை எழுதியதற்காக நடராஜனுக்கு 'சோவியத்நாடு' வழங்கிய நேரு விருதும், ரஷ்யாவில் சுற்றுப்பயணம் செய்யும் வாய்ப்பும் கிடைத்தன.

பதிப்பு

பதிப்பகம் சார்ந்த நுட்பங்களைக் கற்ற அ.லெ. நடராஜன், 1941-ல், காரைக்குடியில் புதுமைப் பதிப்பகம் என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கினார். டி.கே. சிதம்பரநாத முதலியார் எழுதிய கம்பராமாயணம், ராஜாஜி எழுதிய 'ஸோக்ரதர்', கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய 'மலரும் மாலையும்', கல்கி எழுதிய 'மகுடபதி', 'சாரதையின் தந்திரம் முதலிய கதைகள்' போன்ற நூல்களை வெளியிட்டார். சிறார்களுக்கான நூல்களை எழுதி வெளியிட்டார். மொழிபெயர்ப்பு நூல்களையும் பதிப்பித்தார்.

காரைக்குடியிலிருந்து இயங்கிய புதுமைப் பதிப்பகம், டாக்டர் திரிபுரசுந்தரி (லக்ஷ்மி) எழுதிய குழந்தையை வளர்ப்பது எப்படி?, தாய்மை போன்ற நூல்களையும், ந. சுப்புரெட்டியார் மொழிபெயர்த்த 'மானிட உடல்', காந்தி எழுதிய 'ஹிந்து - முஸ்லிம் பிரசினை', 'மாணவருக்கு', 'பெண்களுக்கு', 'பிரிட்டிஷாருக்கு எனது வேண்டுகோள்', 'சமஸ்தானப் பிரச்சினை', 'சுயராஜ்ய சாஸ்திரம்' போன்ற பல நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டது.

புதுமைப் பதிப்பகம் இலக்கியம், இசை, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு, சிறார் நூல்கள் என நூற்றிற்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டது.

விருதுகள்

அ.லெ. நடராஜன் எழுதிய 'ஏழை பங்காளன் லெனின்' நூலுக்கு சோவியத் அரசின் நேரு பரிசு கிடைத்தது.

மறைவு

அ.லெ. நடராஜன் எப்போது காலமானார் என்பது பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை.

மதிப்பீடு

அ.லெ. நடராஜன் தமிழில் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதிய எழுத்தாளராகவும், 1001 அரபுக் கதைகளை முழுமையாக மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளராகவும், மகாபாரதத்தை முழுமையாக எழுதிய முன்னோடி எழுத்தாளராகவும் அறியப்படுகிறார். செ.மெ. பழநியப்ப செட்டியார், கண. முத்தையா வரிசையில் குறிப்பிடத்தகுந்த முன்னோடிப் பதிப்பாளர்களுள் ஒருவராக மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

கட்டுரை, வரலாற்று நூல்கள்
  • மாம்பழக் கூடை (சிறுவர் கதை)
  • தென் இந்தியச் சிறுகதைகள்
  • அறிவுச் சுரங்கம் (கதைத் தொகுப்பு)
  • அதிர்ஷ்டக் காற்று
  • இதிகாசக் கதைகள்
  • 101 கதைகள்
  • 21 கதைகள்
  • வியாசர் அருளிய மகாபாரதம் (நான்கு பாகங்கள்)
  • வால்மீகி ராமாயணம் (இரண்டு பாகங்கள்)
  • ஸ்ரீமத் பாகவதம் (இரண்டு பாகங்கள்)
  • ஸ்ரீமத் பகவத்கீதை
  • பகவான் மகாவீரர் வாழ்க்கை வரலாறு
  • இயேசுநாதர் வரலாறு
  • நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு
  • சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு
  • குருநானக் வாழ்க்கை வரலாறு
  • கௌதம புத்தர்
  • வாழ்விக்க வந்த வள்ளலார்
  • பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்
  • சாரதாமணி தேவியார்
  • மகாத்மா காந்தி
  • புத்தர் ஜாதகக் கதைகள்
  • ஏழைகளின் தோழன் லெனின்
  • மாவீரன் நெப்போலியன்
  • இதோபதேசக் கதைகள்
  • வள்ளலார் பொன்மொழிகள் (தொகுப்பு நூல்)
  • தமிழ் இசைப் பாட்டுக்கள் (தொகுப்பு நூல்)
மொழிபெயர்ப்பு
  • பிரிட்டிஷாருக்கு எனது வேண்டுகோள் (மூலம்: மகாத்மா காந்தி)
  • பெண்களுக்கு... (மூலம்: மகாத்மா காந்தி)
  • மாணவருக்கு... (மூலம்: மகாத்மா காந்தி)
  • நமது மொழிப் பிரச்சினை (மூலம்: மகாத்மா காந்தி)
  • ஹிந்து - முஸ்லிம் பிரச்சினை (மூலம்: மகாத்மா காந்தி)
  • சமஸ்தானப் பிரச்சினை (மூலம்: மகாத்மா காந்தி)
  • சுயராஜ்ய சாஸ்திரம் (மூலம்: மகாத்மா காந்தி)
  • டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது (மூலம்: மிகெயில் சோலோகோவ்)
  • பஞ்சதந்திரக் கதைகள்
  • அரபுக் கதைகள் (ஆறு பாகங்கள்)
  • ஈசாப் நீதிக் கதைகள் (மூன்று பாகங்கள்)
  • சீனதேசத்துக் கதைகள்

உசாத்துணை


‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Nov-2024, 16:01:46 IST