under review

துரை. சீனிச்சாமி

From Tamil Wiki
Revision as of 19:53, 1 August 2026 by Logamadevi (talk | contribs)
Durai siinisami.jpg

துரை.சீனிச்சாமி (முனைவர் துரை. சீனிச்சாமி) (ஜூன் 14, 1944- ஏப்ரல் 20, 2026) ஆய்வாளர், கவிஞர், பேராசிரியர்.

பிறப்பு,கல்வி

துரை.சீனிச்சாமி நெல்லை மாவட்டம் புளியங்குடியை அடுத்துள்ள சிந்தாமணி என்னும் சிற்றூரில் ஜேம்ஸ் துரைராஜ்-அன்னம்மாள் இணையருக்கு ஜூன் 14, 1944 அன்று பிறந்தார். தொடக்கக் கல்வியைச் சிந்தாமணியிலும், உயர்நிலைக் கல்வியைப் புளியங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், புகுமுக வகுப்பைப் பாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியிலும் படித்தார். இளங்கலைப் படிப்பை விருதுநகர் செந்தில் குமார நாடார் கல்லூரியிலும், முதுகலைப் படிப்பைக் காரைக்குடி அழகப்பர் கல்லூரியிலும் பயின்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 'கம்பராமாயணத்தில் இயற்கை' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

துரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழிக் கல்விப் பிரிவில் 1976 முதல் 1982 வரை பணியாற்றினார். அதன் பிறகு பேரறிஞர் வ.ஐ.சுப்பிரமணியன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அவரைப் பணியமர்த்தினார். 2004 -ல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.

துரை சீனிச்சாமி மணமானவர். மனைவி சரோஜா.

இலக்கிய வாழ்க்கை

சி.சு. செல்லப்பா நடத்திய எழுத்து' பத்திரிகையில் 'தீராப்பசி' என்ற புதுக்கவிதையின் மூலம் இலக்கிய உலகில் அறிமுகமானார் துரை. சீனிச்சாமி. தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபோது 'தமிழில் காப்பியக் கொள்கைகள்' என்ற நூலின் இருதொகுதிகளை எழுதினார். எழுத்து பிரசுரத்தில் அவரது முதல் கவிதை நூல் 'அந்தி' வெளியானது. நவீன இலக்கிய இதழ்களோடு இணைந்து புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவராகவும் விவாதக் கட்டுரைகளை முன்வைப்பவராகவும் இயங்கினார்.

துரை. சீனிச்சாமி தன் கவிதைகளில் ந. பிச்சமூர்த்தி, பிரமிள் இருவரையும் பின்பற்றியவர். 'அந்தி'க்குப் பிறகு அகரம் வெளியீடாக 'உரித்த யானை' (1980) என்ற மற்றொரு கவிதைத் தொகுப்பும் வந்திருக்கிறது.

மதிப்பீடு

துரை. சீனிச்சாமியைக் குறித்து "மரபிலக்கியத்திலும் நவீன இலக்கியத்திலும், கல்விவட்டாரத் திறானாய்விலும் சிறுபத்திரிகைத் தோரணை விமர்சனத்திலும் அழகியலோடும் இடதுசாரிப் பார்வையோடும் (புதுக்கவிதைக் கவிஞராகவும்) இணக்கமுள்ள தமிழ்ப் பேராசிரியர்கள் மிகச் சிலரையே சுட்டிக்காட்டமுடியும். அதில் முதல்வராக இவரையே கூறமுடியும்" என்று கால. சுப்ரமணியம் குறிப்பிடுகிறார்.

மறைவு

துரை. சீனிச்சாமி ஏப்ரல் 20, 2026 அன்று காலமானார்.

நூல்கள்

ஆய்வு நூல்கள்
  • தமிழில் காப்பியக் கொள்கைகள் (தொகுதி 1, தொகுதி 2)
  • தமிழ் நாவல்களில் உளச் சித்தரிப்பு
  • கவிதைக் கோட்பாடு
  • திறனாய்வு எதிர்காலம்
  • இலக்கியத்தில் இயற்கை
  • நாவல்: நவீன விமர்சனங்கள்
  • இருபதாம் நூற்றாண்டுக் கவிதை: புதிய போக்கும் தோற்றமும் வளர்ச்சியும்
  • செவ்வியல் இலக்கியம்
  • சிலப்பதிகாரம் கதையும் கருத்தியலும்
  • தொல்காப்பியமும் இலக்கிய வகையும்(அச்சு)
  • தமிழ் ஆராய்ச்சி வரலாறும் வளர்ச்சியும்(அச்சு)
கவிதை
  • அந்தி
  • உரித்த யானை

உசாத்துணை

முனைவர். துரை.சீனிச்சாமி-மு.இளங்கோவன்

‎


✅Finalised Page