under review

கோக்குளமுற்றனார்

From Tamil Wiki
Revision as of 16:04, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)

கோக்குளமுற்றனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் குறுந்தொகையில் ஒன்றும் நற்றிணையில் ஒன்றும் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கை குறிப்பு

கோக்குளமுற்றனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கோக்குளம் என்னும் ஊரில் பிறந்து வாழ்ந்தவர். குளமுற்றனார் என்னும் பெயர் உடையவர்.

இலக்கிய வாழ்க்கை

கோக்குளமுற்றனார் பாடிய பாடல்கள் குறுந்தொகையில் 98 -ம் பாடலாகவும், நற்றிணையில் 96-ம் பாடலாகவும் இடம்பெற்றுள்ளன. குறுந்தொகை 98 ஆம் பாடல் பொருளீட்ட சென்ற தலைவன் உரிய காலத்தில் திரும்பி வராமையால் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை தோழியிடம் தலைவி உரைப்பதாக முல்லைத் திணையிலும், நற்றிணை 96-ம் பாடல் பிரிந்து சென்று திரும்பி வந்துள்ள தலைவனுக்கு கேட்கும்படி இற்செறிக்கப்பட்டுள்ள தலைவிக்கு ஏற்பட்ட துன்பத்தை தோழி உரைப்பதாக நெய்தல் திணையிலும் அமைந்தும் காணப்படுகிறது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

குறுந்தொகை - 98
  • வீட்டுத் தோட்டத்து புதரில் தழைத்திருக்கும் பீர்க்கங் கொடியில் மழைக்காலத்தில் பூக்கள் மலரும்.
  • உவமை: தலைவனை பிரிந்த பசலை நோய் ஏற்பட்ட தலைவியின் தோல் நிறம் பீர்க்கம்பூவினை போன்று மாறியுள்ளது.
நற்றிணை - 96
  • கடற்கரையில் புன்னை மரத்தின் மலரும் ஞாழல் மரத்தின் மலரும் உதிர்ந்து கிடக்கும்.
  • வளைவாக காணப்படும் உப்பங்கழியில் மலர்ந்துள்ள நெய்தல் மலர்களையும் தழைகளையும் இணைத்து பின்னி ஆடையாக அணிந்து கொள்வர்.
  • நெய்தல் நில மகளிர் தம் கூந்தல் ஐந்தாக பகுத்து வாரி பின்னலிடுவர்.

பாடல் நடை

குறுந்தொகை - 98

  • திணை: முல்லை
  • கூற்று: பருவம் கண்டு அழிந்த(வருந்திய)தலைமகள் தோழிக்கு உரைத்தது.

இன்ன ளாயினள் நன்னுதல் என்றவர்த்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
நன்றுமன் வாழி தோழிநம் படப்பை
நீர்வார் பைம்புதற் கலித்த
மாரிப் பீரத் தலர்சில கொண்டே.

நற்றிணை - 96

  • திணை: நெய்தல்
  • கூற்று: சிறைப்புறமாகத் தோழி தலைவிக்குரைப்பாளாய் வரைவுகடாயது.

 
'இதுவே, நறு வீ ஞாழல் மா மலர்தாஅய்,
புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறை,
புதுவது புணர்ந்த பொழிலே; உதுவே,
பொம்மற் படு திரை நம்மோடு ஆடி,
புறம் தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால்
துவரினர் அருளிய துறையே; அதுவே,
கொடுங் கழி நிவந்த நெடுங் கால் நெய்தல்
அம் பகை நெறித் தழை அணி பெறத் தைஇ,
தமியர் சென்ற கானல்' என்று ஆங்கு
உள்ளுதோறு உள்ளுதோறு உருகி,
பைஇப் பையப் பசந்தனை பசப்பே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Mar-2025, 16:59:41 IST