under review

முஹ்யித்தீன் மாலை

From Tamil Wiki
Revision as of 03:44, 28 April 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)

முஹ்யித்தீன் மாலை (பதிப்பு:1 999) இஸ்லாமிய மாலை இலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை இயற்றியவர் கா. அப்துல்கபூர்.

வெளியீடு

முஹ்யித்தீன் மாலை, கா. அப்துல்கபூர் இயற்றிய ‘பாமாலை – 18’ என்ற இஸ்லாமிய மாலை இலக்கியங்களின் தொகுப்பு நூலில், பிற மாலை இலக்கிய நூல்களுடன் இணைந்து இடம்பெற்றது. பாமாலை 18 நூலை தக்கலையில் உள்ள பொன்மொழிப் பதிப்பகம், 1999-ல் வெளியிட்டது.

நூல் அமைப்பு

முஹ்யித்தீன் மாலை நூலில் 75 கண்ணிகள் அமைந்துள்ளன. அடிக்கு ஆறு சீர்கள் என பன்னிரண்டு சீர்கள் இடம்பெற்றுள்ளன முஹ்யித்தீன் மாலை முழுவதும், ’முஹ்யித்தீன்' என்ற சொல்லுடன் நிறைவடைகிறது.

உள்ளடக்கம்

இஸ்லாமிய இறைநேசச் செல்வர் ஒருவர் மீது கா. அப்துல்கபூர் கொண்ட பற்றின் வெளிப்பாடே முஹ்யித்தீன் மாலை. முஹ்யித்தீன் அப்துல் காதீர் ஜீலானி என்பவர், நபிகள் நாயகத்தின் பதினான்காவது தலைமுறையைச் சேர்ந்த ஞானி. ஈரானில் பிறந்து, ஈராக்கின் தலைநகராம் பாக்தாத்தில் அடக்கம் பெற்றவர். முஹ்யித்தீன் அப்துல் காதீர் ஜீலானியின் வாழ்க்கை வரலாறு, அவரது பெருமை, சிறப்பு, அவரது அருங்குணங்கள் ஆகியன முஹ்யித்தீன் மாலை நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

பாடல்

ஈரான் நாட்டு தபரீஸின் இலங்கும் ஜீலான் நகரத்தின்
பேராம் நீபுச் சிற்றூரில் பிறந்தார் ஷெய்கு முஹ்யத்தீன்

பெரியார் செய்யிது ஆபூஸாலிஹ் பெண்கள் திலகம் பாத்திமா
அரியார் பெற்றோர் இருவருக்கும் அணியாய் வந்தார் முஹ்யீத்தீன்

சின்னஞ் சிறு பிராயத்தில் சீரார் தந்தை மறைந்தேக
அன்னையர் அன்புப் பார்வையிலே அறிவை வளர்த்தார் முஹ்யீத்தீன்

தனித்தும் விழித்தும் புசியாமல் தண்ணீர் கூட அருந்தாமல்
அனைத்தும் துறந்தே மூன்றாண்டின் அருந்தவ மாற்றும் முஹ்யித்தீன்

அன்புக்கடலே அருட்கடலே அனைத்தும் கொண்ட பெருங்கடலே
இன்பக் கடலே ஆழ்கடலே இதயக்கடலே முஹ்யீத்தீன்

நாதா நீதா முஹ்யித்தீன் ஞான மேதா முஹ்யீத்தீன்
மாதா பாதா முஹ்யீத்தீன் வேதா தாதா முஹ்யீத்தீன்

மதிப்பீடு

முஹ்யித்தீன் மாலை, இஸ்லாமிய மாலை இலக்கிய நூல்களுள் ஒன்று. இஸ்லாமிய ஞானிகளுள் ஒருவரான முஹ்யித்தீன் அப்துல் காதீர் ஜீலானி என்பவர் மீது பாடப்பட்டது. நபிகள் நாயகத்திற்குப் பிறகு இஸ்லாமிய நெறிக்குப் புத்துயிர் ஊட்டியவராக இவர் அறியப்படுகிறார். நபிகள் நாயகத்திற்கு அடுத்தநிலையில் ஈரான், ஈராக், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானைச் சார்ந்த இஸ்லாமியப் பெருமக்களால் நன்கு அறியப்பட்டவர். முஹ்யித்தீன் அப்துல் காதீர் ஜீலானி பற்றித் தமிழில் இயற்றப்பட்ட பல இலக்கிய நூல்களுள், குறிப்பிடத்தகுந்த மாலை இலக்கிய நூலாக முஹ்யித்தீன் மாலை அறியப்படுகிறது.

உசாத்துணை

  • இந்திய இலக்கியச் சிற்பிகள்: கா. அப்துல்கபூர், எழுத்தாக்கம்: ஹ.மு. நத்தர்சா, சாகித்ய அகாதமி நிறுவன வெளியீடு, முதல் பதிப்பு: 2005.
  • பாமாலை 18, கா. அப்துல்கபூர், பொன்மொழி பதிப்பகம், தக்கலை, முதல் பதிப்பு: 1999.


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Apr-2025, 07:30:26 IST