second review completed

மாஸ்தி வெங்கடேச ஐயங்கார்

From Tamil Wiki
Revision as of 20:14, 24 June 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Moved templates to bottom of page;)
Masti.jpg

மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (Maasthi Venkatesa Iyengar (ஜூன் 6, 1891 – ஜூன் 6, 1986) ஞானபீட விருதுபெற்ற கன்னட எழுத்தாளர், நாடக ஆசிரியர், கவிஞர், இதழாளர்.

பிறப்பு, கல்வி

மாஸ்தி கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் தாலுக்கா ஹொசஹல்லி என்ற கிராமத்தில் தமிழ் ஐயங்கார் குடும்பத்தில் ராமஸ்வாமி ஐயங்கார், திருமலாம்மா இணையருக்கு ஜூன் 6,1891-ல் பிறந்தார். அவர் பிறக்கும் போது குடும்பம் மிகவும் வறுமையில் இருந்தது. அவருடைய முன்னோர்கள் ஒரு காலத்தில் செல்வச் செழிப்புடன் இருந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.இளமைப் பருவத்தை மாஸ்தி என்ற கிராமத்தில் கழித்தார். 1914-ல் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் தேர்வாகி, கர்நாடகத்தின் பல இடங்களில் அதிகாரியாகப் பணியாற்றினார். மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றினார். 1914 முதல் 1943 வரை பல்வேறு உயர் பதவிகளை வகித்தார். 1943-ல் அரசுப் பணியைத் துறந்தார்.

தனி வாழ்க்கை

மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் மனைவி பங்கஜம்மா. இவர்களுக்கு ஆறு மகள்கள்.

இலக்கிய வாழ்க்கை

மாஸ்தி பி. ஏ. ஶ்ரீகாந்தையாவைத் தன் இலக்கிய ஆதர்சமாகக் கொண்டார்.

மாஸ்தியின் முதல் படைப்பு 'ரங்கனா மதுவே' 1910-ல் வெளிவந்தது. அது தொடங்கி அவர் இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன் வெளியான 'மதுகர ராமண்ணா' வரை உருவாக்கிய படைப்புகளின் எண்ணிக்கை 123. இதில் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், விமர்சனங்கள், கட்டுரைகள், சமயப் படைப்புகள், மொழிபெயர்ப்புகள், அவரது சொந்த நாளிதழான 'ஜீவனா' -வில் எழுதிய தலையங்கக் கட்டுரைகள், கவிதைத் தொகுப்பு, கவிதைகள் ஆகியவை அடங்கும்.' 'பவ' அவரது தன் ரலாற்று நூல்.

மாஸ்தி கன்னட சாகித்ய பரிஷத்தின் மாநாட்டிற்குத் தலைமை தாங்கியவர்களில் மிக இளையவர் (பெல்காம், 1929).

சிறுகதைகள்

கெலவு சன்ன கதேகலு' (சில சிறுகதைகள், 1920) நவீன கன்னட இலக்கியத்தில் அவரது முதல் குறிப்பிடத்தக்க படைப்பு. ஸ்ரீநிவாசா என்ற புனைப்பெயரில் மாஸ்தி நூற்றுக்கணக்கான சிறுகதைகளை எழுதினார். பல சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டார். இவரது சிறுகதை ஒன்று ராஜாஜியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

நாவல்

மாஸ்தி எழுதிய நாவல்கள் 'சிக்க வீர ராஜேந்திரா', 'சென்னபசவ நாயக', 'சுப்பண்ணா', 'சேஷம்மா'.

சிக்கவீர ராஜேந்திரன் குடகு அரசின் கடைசி அரசன் சிக்கவீர ராஜேந்திரனின் வரலாற்றைக் கூறுவது. மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் இந்த நாவலுக்காக ஞானபீட விருது பெற்றார்.

'சென்னபசவ நாயக' ஷிமோகா அருகிலுள்ள பீடானூர் அரசின் இளவரசனான சென்னபசவ நாயகனின் வாழ்வைப் பின்னணியாகக் கொண்ட வரலாற்று நாவல். பீடானூர் அரசு ஹைதர் அலியாலும், பின்னர் ஆங்கில அரசாலும் கைப்பற்றப்பட்ட காலகட்டத்தின் சித்திரத்தை அளிக்கிறது. சென்னபசவ நாயக்கனின் பாத்திரப் படைப்பில் ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட்டின் சாயல் உள்ளதாகக் கருதப்படுகிறது.

சுப்பண்ணா இசைக்கலைஞர் ஒருவரைப் பற்றிய நாவல். ஜெயலக்ஷ்மி ஶ்ரீநிவாசன் இந்நாவலை தமிழில் மொழியாக்கம் செய்தார்.

கவிதை

மாஸ்தியின் கவிதைகள் பல்வேறு தத்துவ, அழகியல் மற்றும் சமூக கருப்பொருள்களில் அமைந்தன.

நாடகம்

மாஸ்தி 16 நாடகங்கள் எழுதினார். 'காகன கோட்டே' அதே பெயரில் திரை வடிவமாக்கப்பட்டது. 'மஞ்சுளே', 'யசோதரா', 'பட்டரெ மகளு' போன்றவை சில குறிப்பிடத்தக்க நாடகங்கள். திருப்பாணாழ்வாரின் வரலற்றை நாடகமாக எழுதினார்.

மொழியாக்கம்

மாஸ்தி பசவண்ணாவின் வசனங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார்.

இதழியல்

மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் 25 வருடங்கள்(1944-1965). 'ஜீவனா' இதழின் ஆசிரியராக இருந்து இதழை நடத்தினார்.

பரிசுகள், விருதுகள்

  • மைசூர் அரசர் அளித்த் 'ராஜகேசவ ப்ரசக்தா' விருது
  • கன்னட, மைசூர் பல்கலைக்கழகங்களின் டி.லிட் பட்டம்
  • பத்ம பூஷண்(1963)
  • கர்நாடக சாகித்ய அகாதெமியின் ஆய்வுநல்கை(1974)
  • ஞானபீட விருது(1983)

இலக்கிய இடம்

மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் கன்னட இலக்கியத்தின் இன்றியமையாத ஆளுமைகளில் ஒருவர். தன் தொலைநோக்குப் பார்வை, நுண்ணறிவுமிக்க கதைசொல்லல், வரலாற்று செழுமை மற்றும் தத்துவ பிரதிபலிப்புகள் மூலம் கன்னட இலக்கியத்தின் மறுமலர்ச்சியில் பங்காற்றினார். மாஸ்தி கன்னட மொழியின் ஆஸ்தி(சொத்து) என்று அழைக்கப்படுகிறார்.

பிரபஞ்சன் பேட்டியொன்றில் வரலாற்று நாவல் குறித்த பிரக்ஞையை தன்னிடம் உருவாக்கிய இரண்டு நாவல்களில் ஒன்றாக ‘சிக்கவீர ராஜேந்திரன்’ நாவலைக் குறிப்பிடுகிறார்.

"குடகின் நிர்வாகஅமைப்பை உருவாக்கி நிலை நிறுத்தும் அதிகாரங்கள், உணர்வுகள், குறியீடுகள், மரபுகள் அனைத்தும் இந்நாவலில் பலவகையில் காட்டப்படுகின்றன. தேர்ந்த வாசகன் கற்பனை வழியாக இந்திய மன்னராட்சி முறையின் பல்வேறு இயல்புகளை இந்நாவல் வழியாக அடைய முடியும். வரலாறு குறித்த நமது உருவகங்களை பல்வேறு கோணங்களில் உடைத்து ஆராயமுடியும். அதுவே இந்நாவலை இந்திய மொழிகளில் எழுதப்பட்ட முக்கியமான நாவல்களில் ஒன்றாக ஆக்குகிறது" என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

மறைவு

மாஸ்தி ஜூன் 6, 1986 அன்று தன் 95-ம் வயதில் காலமானார்.

நினைவேந்தல்

1993 முதல் அவரது பெயரில் 'மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் விருது' என்ற விருது கன்னட இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்புக்கு அளிக்கப்படுகிறது. மாலூர் மாவட்டத்தில் (கோலார மாவட்டம்) மாஸ்தி கிராமத்தில் உள்ள அவர் இல்லம் நூலகமாக மாற்றப்பட்டது. மாஸ்தி உண்டுறை பள்ளி அவரது நினைவாக அருகில் உள்ள இடத்தில் தொடங்கப்பட்டது.

நூல்கள்

நாவல்
  • சிக்கவீர ராஜேந்திரா
  • சென்ன பசவ நாயக
  • சுப்பண்ணா
  • ஷேஷம்மா
சிறுகதைத் தொகுப்பு
  • கெலவு சன்ன கதேகலு
  • மாஸ்தி கதகளு
நாடகம்(சில)
  • புரந்தரதாசா
  • மஞ்சுளே
  • யசோதரா
  • பட்டரெ மகளு
  • காலனகோட்டே
  • ஷாந்தா
  • திருப்பாணி
  • வெங்கடபதி ராயரு
தன் வரலாறு
  • பவ
அபுனைவு
  • கன்னட ஜனதையுடெ சம்ஸ்கிருதி
  • கன்னட சாஹித்யா
  • மஹாபாரதத்திடெ ப்ரஷ்ணகளு
  • சாஹித்ய சம்வாதா
  • அவஸ்தே
காப்பியம்
  • சன்க்ஷிப்த வால்மீகி ராமாயணம்
  • லக்ஷ்மணா

உசாத்துணை




✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.