under review

பாத்திமா மாலை

From Tamil Wiki
Revision as of 10:14, 22 April 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)

பாத்திமா மாலை (பதிப்பு: 1999) இஸ்லாமிய மாலை இலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை இயற்றியவர் கா. அப்துல்கபூர்

வெளியீடு

பாத்திமா மாலை நூல், கா. அப்துல்கபூர் இயற்றிய பாமாலை – 18 என்ற இஸ்லாமிய மாலை இலக்கியங்களின் தொகுப்பு நூலில், , அப்துல்கபூர் இயற்றிய பிற மாலை இலக்கிய நூல்களுடன் இணைந்து இடம்பெற்றது. இந்நூலை தக்கலையில் உள்ள பொன்மொழிப் பதிப்பகம், 1999-ல் வெளியிட்டது.

நூல் அமைப்பு

பாத்திமா மாலை, எட்டு சீர்கள் பெற்று, இரண்டடிக் கண்ணிகளாக மொத்தம் எழுபத்து மூன்று கண்ணிகளைக் கொண்டது. இப்பாடல்கள் அனைத்தும் ’பாத்திமா’ என்ற ஈற்றுச் சொல்லுடன் நிறைவடைகிறது.

பாத்திமா மாலையில் உள்ள சில பாடல்கள், நாகூர் ஹனீபாவால் பாடப்பட்டு இசைத்தட்டாக வெளிவந்தது.

உள்ளடக்கம்

பாத்திமா மாலை, நபிகள் நாயகத்தின் மகளும், நபிகள் நாயகத்தின் மறைவிற்குப் பிறகு கலீபாவாக ஆட்சி செய்த மாவீரர் அலியின் மனைவியும், மார்க்கத்திற்காகப் போராடித் தன் இன்னுயிரை இழந்த ஹஸன் - ஹூஸைன் என்ற இரு ஆண் மக்களின் தாயுமானமான பாத்திமாவின் வாழ்க்கையைக் கூறுகிறது.

பாத்திமா தன் வாழ்வில் சோதனைகளைக் கண்டு அஞ்சாமல் அவற்றை உறுதியுடன் எதிர்கொண்ட திறத்தை, அவரது உள்ள உறுதியை, போராட்ட குணத்தை, கருணை உள்ளத்தை, ஈகையை, அன்பைப் பல பாடல்களில் எடுத்துரைக்கிறது.

பாடல்

விண்ணகமும் மண்ணகமும் வியந்துரைக்க வந்துதித்த

அண்ணலான நபிமகளார் அருமையான பாத்திமா


தங்குபுகழ் அன்னையர்க்கும் தங்கமான தங்கையர்க்கும்

சங்கமான மங்கையர்க்கும் சங்கையான பாத்திமா


வறுமைநாணம் நன்றிதானம் மனவடக்கம் இறையுணர்வு

பொறுமையாதி அணிசிறக்கும் புகழொளியே பாத்திமா


கடுங்குளிரால் நடுங்குமேழை கவலைபோக்க மணவுடையைக்

கொடையளித்துப் பழையவாடை கொண்டுநின்றீர் பாத்திமா


பசிதணிக்கக் கிடைத்த ரொட்டி பரிதவிக்க வந்தவேழை

புசிப்பதற்குக் கொடுத்துவிட்டுப் புகழடைந்தீர் பாத்திமா


அருமையான ஈதுநாளில் ஆடைவேண்டும் புதல்வருக்காய்

உருகிநின்றே இறையிடத்தில் உளந்திறந்தீர் பாத்திமா


பெருநபியின் புதல்வியாகி பேரறிஞர் துணைவியாகி

பெருமை சான்றோ ரன்னையாகும் பேறுபெற்றீர் பாத்திமா


பூவுறங்க புள்ளுறங்க புவன மெல்லாம் ஆழ்ந்துறங்க

நாவுறங்கா திருந்திறையின் நாமமோதும் பாத்திமா

மதிப்பீடு

கா. அப்துல்கபூர் இயற்றிய மாலை இலக்கிய நூல்களுள் பெண்ணைப் பற்றிப் பாடப்பட்ட ஒரே மாலை நூல், பாத்திமா மாலை. நபிகள் நாயகத்தின் மகளான பாத்திமாவின் வாழ்க்கையை எளிய தமிழில், சந்த நயத்துடன் கூறுகிறது. பாத்திமாவின் பெருமைகளையும், நற்பண்புகளையும், ஈகைச்சிறப்பையும் கூறும் நூலாக அறியப்படுகிறது.

உசாத்துணை

  • இந்திய இலக்கியச் சிற்பிகள்: கா. அப்துல்கபூர், எழுத்தாக்கம்: ஹ.மு. நத்தர்சா, சாகித்ய அகாதமி நிறுவன வெளியீடு, முதல் பதிப்பு: 2005.
  • பாமாலை 18, கா. அப்துல்கபூர், பொன்மொழி பதிப்பகம், தக்கலை, முதல் பதிப்பு: 1999.

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.