first review completed

மாயூரம் வேதநாயகம் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 01:06, 2 May 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Reverted edits by Tambot1 (talk) to last revision by Tambot2)

மாயூரம் வேதநாயகம் பிள்ளை (சாமுவேல் வேதநாயகம் பிள்ளை) (அக்டோபர் 11, 1826 - ஜூலை 21, 1889) தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவர். 1879-ல் இவர் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் தமிழில் வெளியான முதல் நாவல். இது தவிர பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தமிழ் உரைநடையை வளம்பெறச் செய்த முன்னோடிகளில் ஒருவராக வேதநாயகம் பிள்ளை கருதப்படுகிறார்.

வாழ்க்கைக்குறிப்பு

இவர் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள வேளாண் குளத்தூர் என்னும் சிற்றூரில் அக்டோபர் 11, 1826 அன்று பிறந்தார். தந்தையார் சவரிமுத்துப் பிள்ளை, தாயார் ஆரோக்கிய மரி அம்மாள். வேதநாயகம் பிள்ளையின் தந்தைக்கு நிலபுலன்கள் இருந்தன. தாயாரின் தந்தை மரிய சவரியா பிள்ளை கிழக்கிந்திய கம்பெனியில் மருத்துவராக இருந்தவர். இவருடைய முப்பாட்டனார் மிராசுதார் மதுரநாயகம் பிள்ளை சைவத்தில் இருந்து கிறித்தவ மதத்தை தழுவினார்.

தொடக்கக் கல்வியைத் தனது கிராமத்திலேயே தந்தையிடம் கற்ற வேதநாயகம், தமிழ் மொழிக்கல்வியை புலவர் தியாகராச பிள்ளை என்பவரிடம் பயின்றார். வேதநாயகம் வீணை இசைப்பதிலும் வல்லமை பெற்றிருந்தார்.

தமது 25-ஆம் வயதில் 1851-ல் காரைக்காலைச் சேர்ந்த பாப்பம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். அவர் சிலகாலத்திலேயே இறந்துவிடவே பாப்பாம்மாளின் அக்கா மகளாகிய லாசர் என்பவரை மணந்து கொண்டார். அவரும் சில ஆண்டுகளில் இயற்கை எய்தவே மூன்றாவதாக புதுச்சேரியைச் சேர்ந்த மாணிக்கத்தம்மையாரை மணம் செய்தார். அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. அவரும் சில வருடங்களில் காலமாகி விடவே குழந்தைகளை வளர்க்கவென புதுவை அன்னக் கண்ணம்மாளை மணந்து கொண்டார்.

இவரது கொள்ளுப்பேரன் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி.

நீதித்துறை வாழ்க்கை

முதலில் தென்மாநில நீதிமன்றத்தில் (ஸதர்ன் கோர்ட்) ஆவணக் காப்பாளராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளர் பதவிக்கு விண்ணப்பித்து அந்தப் பதவியில் நியமனமானார். இவரது பணிவாழ்வில் பலவிதமான இன்னல்களை சந்தித்திருக்கிறார்.

இஸ்லாமிய ஆட்சிக் காலத்தில் காசியார்கள் குற்றங்களை விசாரித்து நீதி வழங்கும் முறை இருந்தது. அதன் தொடர்ச்சியாக ஆங்கிலேயர் காலத்தில் மாவட்ட நீதி மன்றத்தில் குற்ற வழக்குகள் விசாரணை நடக்கும்போது ’காசியார் பத்வாக்’ என்றழைக்கப்பட்ட வழக்கு தொடர்பான காசியார் தீர்ப்பு ஆங்கிலேய நீதிபதியின் கருத்தில் இருந்து மாறுபட்டால் அவற்றை மொழிபெயர்த்து தென்மாநில நீதிமன்ற முடிவுக்கு அனுப்பிவிடுவார்கள். அந்த வேலையில் வேதநாயகம் பிள்ளை இருந்தார். அப்போது அங்கு நீதிபதியாக இருந்த மேஸ்தர் டேவிட்சன் என்பவர் மாற்றலாகிப் போகும்போது அவருடைய ஒப்புதலுக்காக வேதநாயகம் பிள்ளை வைத்த மொழிபெயர்ப்புகளை அவரால் பார்வையிட இயலவில்லை. அவற்றை பார்வையிடத் தன்னுடன் எடுத்துச் சென்ற டேவிட்சன் சென்ற இடத்தில் நோய்வாய்ப்பட்டுக் காலமானார். அத்தகைய வழக்குகளின் மொழிபெயர்ப்புகளை உரிய நேரத்தில் அனுப்பவில்லை என தென்மாநில நீதிமன்றத்தில் இருந்து விசாரணை வந்தது.

அப்போதிருந்த மாவட்ட நீதிபதி மேஸ்தர் கிரீன்வே சரியாக விசாரணை செய்யாமல் மொழிபெயர்ப்புகளை அனுப்பாதது வேதநாயகம் பிள்ளையின் தவறு என்றும் அவரை வேலை நீக்கம் செய்துவிட்டதாகவும் பதில் எழுதிவிட்டார். நடந்த விவரங்களைத் தென்மாநில நீதிமன்றத்திற்கு விரிவாக எழுதியனுப்பி தண்டனையை ரத்து செய்யுமாறு வேதநாயகம் பிள்ளை கோரிக்க வைத்தார். பல மாதங்களாகியும் அது விசாரிக்கப்படாமல் அவர் வேலை நீக்கத்தில் இருந்ததால் கவலையில் நோய்வாய்ப்பட்டிருந்தார். பிறகு மறைந்த மேஸ்தர் டேவிட்சன் பெட்டியில் அந்த மொழிபெயர்ப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர் வேலையில் சேர உத்தரவு வந்தது. இடைக்காலத்தில் அவரது பணியை பார்த்து வந்தவர் வேதநாயகம் நோய்வாய்ப்பட்டு விட்டதால் வேலை செய்யும் நிலையில் இல்லை என்று எழுதி அனுப்பிவிட்டார். அதை மறுத்து எழுதி மீண்டும் நீதித்துறைப் பணியில் சேர்ந்தார்.

பின்னர் 1857-ஆம் ஆண்டு தரங்கம்பாடி நீதிமன்றத்தில் முன்சீஃப் பதவியில் சேர்ந்தார். அதன் பின்பு 1860-ல் மாயூரம் மாவட்ட முன்சீஃபாக சேர்ந்து 13 ஆண்டுகள் தொடர்ந்து அங்கு பணிபுரிந்ததால், இவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார் (தற்போது மாயூரம்/மாயவரம் மயிலாடுதுறை என்றழைக்கப்படுகிறது). 1872-ஆம் ஆண்டு பணியிடத்தில் மேலும் சில இன்னல்களுக்குப் பிறகு ஓய்வுபெற்றார். நீதிமன்றப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் மாயவரம் நகர்மன்றத் தலைவராக பதவியேற்றார்.

நீதிமன்றத்தில் அப்போது நிலவிய பல சீர்கேடுகளையும் அநீதிகளையும் தனது படைப்புகளில் சித்தரித்திருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

தன் சொந்த கிராமத்தில் தொடக்க கல்வி கற்ற பிறகு, இவரது தாய்வழி பாட்டனார் ஆங்கிலேயப் பணியில் இருந்தமையால் வேதநாயகம் பிள்ளைக்கு ஆங்கிலக் கல்வி அளிக்க பெற்றோர் முடிவெடுத்து அவரைத் திருச்சிராப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். அங்கே ஆங்கில இலக்கியப் படைப்புகளுக்கும் கட்டுரைகளுக்கும் அவருக்கு அறிமுகம் உண்டானதால், அது போன்ற படைப்புகளைத் தமிழில் எழுதவேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது. அதுவே பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நாவலை எழுத அவருக்குத் தூண்டுகோலாயிற்று.

பிரதாப முதலியார் சரித்திரத்துக்கு அவர் எழுதிய முன்னுரையில் “தமிழில் உரைநடை நூல்கள் இல்லையென்பதை ஒப்புக்கொள்கிறார்கள். இந்தக் குறைபாட்டைப் பற்றி எல்லோரும் வருந்துகின்றனர். இந்தக் குறையை நீக்கும் நோக்கத்துடன்தான் இந்தக் கற்பனை நூலை எழுத முன்வந்தேன். மேலும் நீதிநூல், பெண்மதி மாலை, சர்வ சமய சமரசக் கீர்த்தனம் முதலிய முன்பே வெளிவந்த என் நூல்களில் குறிப்பிட்டுள்ள அறநெறிக் கொள்கைகளுக்கு உதாரணம் காட்டவும் இந்த நாவலை எழுதலானேன்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பிரதாப முதலியார் சரித்திரம் வெளியானதும் அதன் புதுமை காரணமாக தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆங்கிலக் கல்வி பெற்றவர்கள் தமிழுக்கு இது மிகப் பெரிய தொண்டு என்று பாராட்டினார்கள். இதனால் ஊக்கம் கொண்டு சுகுணசுந்தரி என்ற பெயரில் அடுத்த நாவலை எழுதினார். இது பக்க அளவில் பிரதாப முதலியார் சரித்திரத்தில் மூன்றில் ஒரு பங்கு அளவுதான் இருந்தது. அந்நாவலின் முன்னுரையில் இந்நாவலின் மூலம் மனித இயல்பின் பல்வேறு கோணங்களையும் பல்வேறு தர்ம நீதிக் கொள்கைகளையும், இளவயதில் திருமணம் செய்வது போன்ற சமூகப் பழக்கங்களின் தீமைகளையும் எடுத்துக்காட்டியுள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

வேதநாயகம் பிள்ளை இளமை முதலே தமிழில் செய்யுள் இயற்றும் திறம் பெற்றிருந்தார். நீதிநூல் என்ற செய்யுள் வடிவில் அமைந்த நூல் ஒன்றையும் சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் என்னும் இசைப்பாடல் தொகுப்பையும் இவர் எழுதியிருக்கிறார். பல தனிப்பாடல்களும் இயற்றியிருக்கிறார்.

திருச்சிராப்பள்ளி மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம்பிள்ளை, இராமலிங்க வள்ளலார், கோபாலகிருஷ்ண பாரதியார் மற்றும் தமிழ்ப் புலமை மிக்க திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவர் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் ஆகியோருடன் இவருக்கு நெருங்கிய நட்பு இருந்தது. திருவாவடுதுறை மகாசன்னிதானம் அவர்களுடன் தாங்கள் இயற்றும் வெண்பாக்கள் வழியாக உரையாடிக் கொள்ளும் நட்பு கொண்டிருந்தார்.

பிற ஆக்கங்கள்

திருச்சி நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய போது 1805 முதல் 1861 வரையிலான ஐம்பத்தாறு வருடங்கள் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து "சித்தாந்த சங்கிரகம்" என்ற நூலை வெளியிட்டார். 1862, 1863-ஆம் ஆண்டு வெளிவந்த தீர்ப்புகளையும் அதே போல தொகுத்து 1864-ஆம் ஆண்டு வெளியிட்டார். நீதிமன்றத் தீர்ப்புகளை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்ப்பு செய்த பெருமைக்குரியவரும் இவரே. அதற்கு முன்னர் இத்தகைய சட்ட நுணுக்க நூல்கள் தமிழில் இல்லை.

இவர் பெருமளவில் கர்நாடக இசைப்பாடல்களையும் எழுதியுள்ளார். இவரது பாடல்கள் கச்சேரிகளில் கர்நாடக இசைப்பாடகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமான தேர்வாக உள்ளன. கர்நாடக இசைப் பாடகரான சஞ்சய் சுப்பிரமணியம் வேதநாயகம் பிள்ளையின் பாடல்களை மட்டும் பாடி ஒரு கச்சேரி நிகழ்த்தியிருக்கிறார்.

வேதநாயகம் பிள்ளையின் தமிழ்ப் பாடல்களில் வடமொழிச் சொற்கள் மிகுதியாக உள்ளன. தியாகராஜரின் "நிதிசால சுகமா" வைப் போல தமிழில் "மானம் பெரிதா, வருமானம் பெரிதா?" என்னும் பாடலை இயற்றியிருக்கிறார். ”நாளே நல்ல நல்ல நாள்”, ”நீ மலைக்காதே நெஞ்சே”, “தருணம், தருணம்...” போன்றவை இவர் இயற்றிய பிரபலமான பாடல்கள். அவரது இசைப்பாடல்களில் ஒன்றான நாயகர் பக்ஷமடி (ராகமாலிகா - சாமா / சண்முகப்ரியா / கேதார கவுளை), 1955-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமான டாக்டர் சாவித்திரியில் ஒரு நடனக் காட்சிக்காக சேர்க்கப்பட்டது.

அந்தக் காலத்தில் கிறிஸ்தவ வழிபாட்டுப் பாடல்கள், கிரேக்கம், லத்தீன் மற்றும் ஆங்கில மொழிகளிலேயே இருந்தன. தமிழிலேயே அத்தகைய பாடல்கள் இருந்தால் தமிழ் கிறிஸ்தவர்கள் அனைவரும் புரிந்துகொண்டு பாட முடியும் என்றெண்ணி, திருவருள்மாலை, திருவருள் அந்தாதி, தேவமாதா அந்தாதி, தேவ தோத்திர மாலை, பெரியநாயகி அம்மைப் பதிகம் போன்ற படைப்புகளை எழுதினார்.

சமூகப் பணிகள்

தாது வருடத்துப் பெரும் பஞ்சத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் உதவிகளைச் செய்தார். கஞ்சித்தொட்டிகள் அமைத்து தினமும் ஏழைகள் உண்ண உதவினார். இவரது உதவிகளைப் பாராட்டி கோபால கிருஷ்ண பாரதியார் ‘நீயே புருஷமேரு’ என்று தொடங்கும் கீர்த்தனையை இயற்றி இருக்கிறார்.

விவாதங்கள்

வேதநாயகம் பிள்ளையால் அந்தக் கால இயல்புக்கேற்ற தமிழ்நடையில் எழுதப்பட்டிருந்த பிரதாப முதலியார் சரித்திரம் நாவலை 1948-ல் தென்னிந்திய சைவ சித்தாந்தக் கழகம் வெளியிட்ட பதிப்பில் வடமொழி சொற்கள் அனைத்தும் தமிழாக்கம் செய்யப்பட்டு முற்றிலும் மாற்றி வெளியிட்டது. இச்செயல் பின்னர் தமிழ் எழுத்தாளர்களின் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. க.நா.சு இதனை ‘வன்முறைச் செயல்’ என்று குறிப்பிட்டுக் கண்டிதிருக்கிறார். இவ்விதம் ஆசிரியருக்கு இழைக்கப்பட்ட அநீதியை சீர்செய்யும் விதமாக சக்தி காரியாலயம் 1957-ல் மீண்டும் மாற்றமில்லாத முழுப் பிரதியை வெளியிட்டது.

மறைவு

வேதநாயகம் பிள்ளை ஜூலை 21, 1889 அன்று தன் 62-வது அகவையில் இறந்தார்.

வாழ்க்கைப் பதிவு

’தமிழ் நாவல் உலகின் தந்தை - மாயூரம் வேதநாயகம் பிள்ளை’ என்ற அவரது வாழ்க்கை வரலாற்று நூல் 2001-ஆம் ஆண்டு புலவர் என்.வி. கலைமணி என்பவரால் எழுதப்பட்டது.

படைப்புகள்

நாவல்கள்
  • 1879-ல் பிரதாப முதலியார் சரித்திரம் புகழ் பெற்ற கற்பனைக்கதை, தமிழ் புதினங்களின் முன்னோடி. இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • 1887-ல் சுகுண சுந்தரி புதினம்
பிற படைப்புகள்

வேதநாயகம் பிள்ளை ஆக்கிய நூல்கள் பல. அவற்றுள் சில:

  • 1860 - நீதி நூல்
  • 1862-ல் சித்தாந்த சங்கிரகம் - உயர்நிலை ஆங்கிலத்தில் இருந்த சட்டத் தீர்புகளைத் தமிழில் மொழியாக்கம் செய்த நூல்
  • 1869-ல் பெண்மதி மாலை - பெண்களுக்கு ஏற்ற அற முறைகளைப் பாட்டுகளாலும் கட்டுரைகளாகவும் கூறும் நூல்.
  • 1873-ல் மூன்று நூல்கள் திருவருள் அந்தாதி, திருவருள் மாலை, தேவமாதர் அந்தாதி இவை செய்யுள் நூல்கள். கிறித்துவ மதம் பற்றியது. மத வரலாறு, மற்றும் கடவுள்பால் அவருக்கிருந்த ஈடுபாட்டைப் புலப்படுத்துவது.
  • 1878-ல் சர்வ சமய சமரசக் கீர்த்தனை ஏறத்தாழ 200 இசைப்பாடலகள்.
  • 1889-ல் சத்திய வேத கீர்த்தனை

பொம்மைக் கலியாணம், பெரியநாயகியம்மன் என்னும் நூல்களும் மற்றும் பல தனிப்பாடல்களும் இயற்றியுள்ளார்.

உசாத்துணைகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.