under review

சிறுத்தொண்ட நாயனார் யட்ச கானம்

From Tamil Wiki
Revision as of 17:37, 10 July 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected errors in article)
சிறுத்தொண்ட நாயனார் யட்ச கானம் நூல்

சிறுத்தொண்ட நாயனார் யட்ச கானம் (1997), நாயன்மார்களுள் ஒருவரான சிறுத்தொண்ட நாயனார் வரலாற்றைக் கூறும் நாடக நூல். இந்நூலை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் வெளியிட்டது. டாக்டர். எஸ். செளந்தரபாண்டியன் இந்நூலின் பதிப்பாசிரியர்.

வெளியீடு

அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் பழந்தமிழ் ஓலைச்சுவடிகள் பலவற்றை நூல்களாகப் பதிப்பித்தது. அவ்வகையில் பதிப்பித்த யட்ச கான ஓலைச்சுவடிகளில் சிறுத்தொண்ட நாயனார் யட்ச கானமும் ஒன்று. 1997-ல் வெளியான இந்நூலை, அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகக் காப்பாட்சியர் டாக்டர். எஸ். செளந்தரபாண்டியன் பதிப்பித்தார். தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் நடன. காசிநாதன் இந்நூலின் பொதுப் பதிப்பாசிரியராகச் செயல்பட்டார்.

சிறுத்தொண்ட நாயனார் யட்ச கானம் நூலை இயற்றியவர் ஞானப்பிரகாசன். இதன் காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியாக அறியப்படுகிறது.

நூல் அமைப்பு

தெருக்கூத்தின் ஒரு வடிவமாக யட்சகானம் அறியப்படுகிறது. சிறுத்தொண்ட நாயனார் யட்ச கானம் நூலில் திபதை, சிந்து, வெண்பா, கலித்துறை ஆகிய யாப்பு வகைகள் இடம் பெற்றன. ஏகதாளம், திரிபுடைதாளம், சம்பை தாளம் முதலிய தாளங்களில் அமைந்த இசைப்பாக்கள் இடம்பெற்றன. இடையிடையே வசனம் இடம்பெற்றது. நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்தில் விநாயகர், முருகப்பெருமான், சிவன், பார்வதி, கலைவாணி போன்ற தெய்வங்களின் துதிகள் இடம்பெற்றன. நூலின் இறுதியில் நூற் பயன் வசன வடிவில் இடம் பெற்றது.

உள்ளடக்கம்

சிறுத்தொண்ட நாயனார் யட்ச கானம் நூல், 63 நாயன்மார்களுள் ஒருவரான சிறுத்தொண்ட நாயனாரின் வரலாற்றை இசைநாடக வடிவில் கூறுகிறது. சிவபெருமானுக்கு தனது மகனையே பிள்ளைக்கறியாகச் சமைத்தளித்த சிறுத்தொண்ட நாயனாரின் கதை விரிவாக இந்நூலில் இடம்பெற்றுள்ளது. சிறுத்தொண்ட நாயனாரின் கதையுடன், கழுக்குன்றன், அவன் மனைவி கழுக்காணி, அவர்கள் புதல்வன் கழுவாமணி ஆகியோரின் கதையும் இடம்பெற்றுள்ளது. கழுவாமணியின் கதை, பெரியபுராணத்தில் உள்ள சிறுத்தொண்ட நாயனார் புராணத்தில் இடம்பெறவில்லை.

கழுவாமணியின் கதை

கழுக்காணி எனும் வெள்ளாளப் பெண், கழுவாமணி எனும் தனது மகனை சிவபக்தி நிமித்தமாகத் தலையில் அடித்துக் கொன்றுவிடுகிறாள். இக்கதையை சிறுத்தொண்டரிடம் நேரடியாகச் சிவபெருமான் காட்டி சிறுத்தொண்டரின் ஆணவத்தைக் களைந்து அறிவுறுத்துவதாக சிறுத்தொண்ட நாயனார் யட்ச கான நூலின் பின்பகுதி அமைந்துள்ளது.

பாடல் நடை

சிவனின் கேள்வி

என்ன சொல்லினை ஏது சொல்லினை?

என்ன மென்று சொன்னாய் மனந்துணிந்து

உன்னைப்போல் பக்தி யுகந்துசெய்வா ரில்லையோ?

உனக்குனக்கே நமக்குநிக ரிந்தஉலகில் இல்லையென்று

சாலவே நீ மனதில் எண்ணிக்கொண் டிருக்கிறாய்

உனைப்போல வைய கத்தில் இல்லையே

உள்ளம் பயந்துநம் வாசல் பேருடன்

“பிள்ளை யறுத்தவன் பாவிநான்' என்று

பொல்லா வார்த்தைக ளாகவேநீ

புகன்ற தென்ன?

சிவன் கூற்று:

நீ என்ன சொல்லினும் நீசினத்திடினும் உன்சேயின்றியே

அசனம் செய்குவதில்லை பதிவிரதையே அருந்ததியே

உண்ணிட சுதனின்றிநீ இட்டசோறுண்பதில்லைநாம்

விழுப்பமேதான் பெற்ற மேய்க்குமுன் காளையை

அழைத்துவந் தாலொழிய ஆகா தென்றார்

கழுக்காணி கூற்று:

படைத்த சோற்றினை உனது சேயின்றி

பருகிலோ மென்று சொல்வதேன்? - பிச்சை

எடுத்துண்பார்களுக் கிந்தப் பாண்டித்தியம்

அடுக்கு மோதான்?

இட்டசோறும் உலர்ந்துபோகுது

ஈதேது பரியாசமோ? - சும்மா

குட்டன் பசிதீர ஒதனங்

கொள்வ தில்லையோ?

சதிரதாய்ப் பலமாடு மேய்க்கும்

சந்ததி வந்தா லுகந்துண்பான்

உதவுமதலை வராவிட்டால்

அமுது உண்ணப்படாதோ?

வசனம்:

”நான் எத்தனையாய் பிரயாசைப்பட்டுச் சமைத்துப் படைத்த சோற்றை, உன் பிள்ளை வந்தாலொழிய நாங்கள் உண்கிறதில்லை என்று ஒரு நிர்ணயமாய்ச் சொல்கிறதென்ன? ஆனால் ஒரு நாழிகைக்கு முன்னே நானில்லாத வேளையிலே இந்த வீட்டிலே நாய்வந்து புகுந்து சட்டிப்பானையிலே வாயிட்டு, நான் கண்டு, அந்த உலக்கைத் தடியாலே தலை மண்டையைப் பிளக்க அடித்து எடுத்தெறிந்து போட்டேன். அப்படி உங்களையும் அடிப்பனோ? இட்டதை உண்கிறீர்களோ இல்லையோ?” என்று கழுக்காணியம்மை உலக்கையை எடுத்துக் கொண்டு தலைமேலோங்க, பரமேசுவரன் கலீரென்று நகைத்துச் சந்தோஷப்பட்டுத் தம்முடைய திவ்விய சொரூபத்தைக் காட்டி அருளினர்.

மதிப்பீடு

சிறுத்தொண்ட நாயனார் யட்ச கானம், 63 நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டரின் வாழ்க்கையை இசை நாடக வடிவில் கூறுகிறது. பேச்சு வழக்குச் சொற்கள் மிகுந்துள்ள இந்த நூல், இசை நாடகமாகவும், கூத்தாகவும் நடிக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது. சிறுத்தொண்ட நாயனாரின் கதையுடன், பெரியபுராணம் நூலில் இடம்பெறாத கழுக்குன்றன், அவன் மனைவி கழுக்காணி, அவர்கள் புதல்வன் கழுவாமணி ஆகியோரின் கதையும் இடம்பெற்றுள்ளது.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.