மீ.ப.சோமு

From Tamil Wiki
Revision as of 11:30, 24 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|மீ.ப.சோமு மீ.ப.சோமு (1921 ) தமிழ் எழுத்தாளர். நாவல்களும் சிறுகதைகளும் மரபுக்கவிதைகளும் எழுதியவர். பண்ணிசை ஆராய்ச்சியாளர். இதழாளர். வானொலி நிகழ்ச்சி அமைப்பாளராகப் ப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
மீ.ப.சோமு

மீ.ப.சோமு (1921 ) தமிழ் எழுத்தாளர். நாவல்களும் சிறுகதைகளும் மரபுக்கவிதைகளும் எழுதியவர். பண்ணிசை ஆராய்ச்சியாளர். இதழாளர். வானொலி நிகழ்ச்சி அமைப்பாளராகப் பணியாற்றினார்.

பிறப்பு கல்வி

மீ.ப.சோமு (மீ.ப.சோமசுந்தரம்) திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சி புரத்தில் 1921 ல் பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், சென்னை பல்கலைக்கழகத்தில் கீழ்த்திசையியல் தமிழில் வித்வான் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

மீ.ப.சோமு திருச்சி வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி அமைப்பாளராகப் பணியில் சேர்ந்தார். திருச்சியில் ஏ.எஸ்.ராகவனுடன் இணைந்து திருச்சி எழுத்தாளர் சங்கத்தை நிறுவி மாநாடுகளை நடத்தினார். அகில இந்திய வானொலியில் 40 ஆண்டு காலம் பணியாற்றிய சோமு தென் மாநிலங் களுக்கான தலைமை அமைப்பாளர், பண் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்தார்.1981ல் பணி ஓய்வுபெற்றார்

1940ல் மணம் புரிந்துகொண்டார்.

இதழியல்

எழுத்தாளர் கல்கி மறைந்த பின் ‘கல்கி’ இதழின் ஆசிரியராக 1954 முதல் 1956 வரை இரண்டு ஆண்டுகள் பணி யாற்றினார்.

‘நண்பன்’ என்ற மாத இதழைத் தொடங்கி 1958முதல் 1960 வரை இரண்டு ஆண்டுகள் நடத்தினார்.

ஆன்மிகம்

சிக்கனம்பாறை கண்ணப்ப சுவாமிகள் என்ற சித்தரிடம் ஆன்மிகப் பயிற்சிகளைக் கற்றவர். தொடர்ந்து அவற்றைப் பயிற்சி செய்து வந்தார்.

இலக்கிய வாழ்க்கை

நெல்லையில் படிக்கும்போதே டி.கே.சிதம்பரநாத முதலியார் திருநெல்வேலியில் தன் வீட்டில் நடத்திவந்த வட்டத்தொட்டி என்னும் இலக்கியக் கூடுகையில் பங்கெடுத்தார். அங்கே கல்கி, ராஜாஜி ஆகியோர் அறிமுகமானார்கள். முதல் கதை 1937ல் இவருடைய 16 வயதில் ஆனந்த விகடன் இதழில் வெளியானது. இவர் எழுதிய கவிதைக்கு ஆனந்தவிகடன் பரிசும் பாரதி பதக்கமும் கிடைத்தது. மரபுக்கவிதைகளை எழுதத்தொடங்கினார். குடிக்காட்டு வேழமுகன் வெண்பா மாலை, திருக்குற்றாலப் பாட்டு ஆகிய மரபுஇலக்கியப் படைப்புகள் டி.கே.சிதம்பரநாத முதலியார், அ.சீனிவாசராகவன் ஆகியோரால் பாராட்டப்பட்டன. முதல் கவிதை தொகுதி இளவேனில் 1946ல் வெளிவந்தது. தமிழக அரசின் சிறந்த கவிதைநூலுக்கான பரிசை அது பெற்றது. தொடர்ந்து தாரகை, பொருநைக் கரையில், வெண்ணிலா ஆகிய தொகுதிகள் வெளிவந்தன.

திருநெல்வேலியை மையமாக்கி திகழ்ந்த ஓர் இலக்கியக் குழுவைச் சேர்ந்தவர். நீதிபதி மகாராஜன், அ.சீனிவாசராகவன், தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், மு. அருணாசலம் ஆகியோர் அதில் இருந்தனர். மீ.ப.சோமு ராஜாஜியுடன் இணைந்து திருமூலரின் திருமந்திரப் பாடல்களுக்கும் ஆழ்வார்களின் பாசுரங்களுக்கும் உரை எழுதினார். புதுமைப்பித்தனுக்கு நண்பராக விளங்கிய மீ.ப.சோமுவுக்கு புதுமைப்பித்தன் எழுதிய கடிதங்கள் நூல்வடிவம் கொண்டிருக்கின்றன. புதுமைப்பித்தனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை நேஷனல் புக் டிரஸ்ட் அமைப்புக்காக தொகுத்து நூலாக்கினார். எஸ். வையாபுரிப் பிள்ளையுடன் நெருக்கம் கொண்டிருந்த மீ.ப.சோமு கலைக்களஞ்சியப் பணிகளிலும் பங்கெடுத்தார்.

மறைவு

மீ.ப.சோமசுந்தரம் 78-வது வயதில் 1999ல் மறைந்தார்.

விருதுகள்,பட்டங்கள்

  • சாகித்ய அகாடமி விருது 1962 (அக்கரைச்சீமையிலே)
  • ராஜா சர் அண்ணாமலை செட்டியார் பரிசு
  • தமிழக அரசு விருது
  • பல்கலை வித்தகர்
  • இசைப் பேரறிஞர்

நூல்கள்

கவிதை
  • இளவேனில்
  • குடிகாட்டு வேழமுகன் வெண்பா மாலை
  • திருக்குற்றாலப் பாட்டு
  • தாரகை
  • பொருநைக் கரையில்
  • வெண்ணிலா
சிறுகதை
  • கேளாத கானம்
  • உதய குமாரி
  • மஞ்சள் ரோஜா
  • மனை மங்களம்
  • கல்லறை மோகினி
  • திருப்புகழ் சாமியார்
  • ஐம்பொன் மெட்டி
  • வீதிக்கதவு
நாவல்
  • ரவிச்சந்திரிகா
  • கடல் கண்ட கனவு
  • நந்தவனம்
  • வெண்ணிலவுப் பெண்ணரசி
  • எந்தையும் தாயும்
கட்டுரை
  • கார்த்திகேயனி
  • ஐந்தருவி
  • பிள்ளையார் சாட்சி
  • நீங்காத நினைவுகள்
  • சித்தர் இலக்கியம் ( 3 பகுதிகள் )
  • நமது செல்வம்
  • அக்கரைச் சீமையில் ஆறு மாதங்கள்

உசாத்துணை

https://www.hindutamil.in/news/blogs/195949-10-2.html