first review completed

திருவுந்தியார்

From Tamil Wiki
Revision as of 04:06, 19 September 2023 by Tamizhkalai (talk | contribs)

திருவுந்தியார், பதினான்கு சைவ சித்தாந்த நூல்களுள் முதல் நூல். இந்நூலை இயற்றியவர் திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்.

ஆசிரியர் குறிப்பு

திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் 1147- ஆம் ஆண்டு இந்நூலை இயற்றினார் என்பதைத் தவிர ஆசிரியரைப் பற்றிய பிற விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை.

சைவசித்தாந்த நூல்கள்

சைவ சமய சித்தாந்த நூல்கள் மொத்தம் பதினான்கு ஆகும்.

அவை;

  • திருவுந்தியார்
  • திருக்களிற்றுப்பாடியார்
  • சிவஞான போதம்
  • சிவஞான சித்தியார்
  • இருபா இருபது
  • உண்மை விளக்கம்
  • சிவப்பிரகாசம்
  • உண்மை நெறி விளக்கம்
  • திருவருட்பயன்
  • வினா வெண்பா
  • போற்றிப் பஃறொடை
  • கொடிக்கவி
  • நெஞ்சுவிடு தூது
  • சங்கர்ப நிராகரணம்

இவற்றின் வரிசையை கீழ்க்காணும் வெண்பா மூலம் அறியலாம்.

உந்திகளிறு வுயர்போதம் சித்தியார்
பிந்திருபா உண்மைபிரகாசம் - வந்த அருட்
பண்புவினா போற்றி கொடிபாசமிலா நெஞ்சுவிடு
உண்மைநெறி சங்கற்பமுற்று"

இதன் மூலம் திருவுந்தியாரே இந்நூல்களில் முதலானது என்பதை அறியலாம்.

நூல் அமைப்பு

திருவுந்தியார் நூல் சைவ சமயத்தில் குறிப்பிடப்படும் பதி(இறைவன்), பசு(உயிர்), பாசம்(மலங்கள்) என்பவற்றின் இயல்புகளைப் பற்றியும், உயிர்கள் இறைவனுடன் சேருவதற்கான வழிகளைப் பற்றியும் விவரிக்கிறது. இந்நூலில் 45 பாடல்கள் அமைந்துள்ளன.

திருவுந்தியார் = திரு + உந்தி + ஆர் என மூன்றாகப் பகுக்கலாம். திரு = அருட்சத்தி , உந்தி = பறத்தல், ஆர் = மரியாதை பன்மை விகுதி.

உந்திப் பறத்தல் என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. விளையாடும் பருவத்து இளம் மகளிர் பாட்டுடைத் தலைவனது வெற்றிச் செயல்களை வாயாரப் புகழ்ந்து கொண்டு உயர எழுந்து குதித்தலாகும். மகளிர் இருவர் சிவபெருமானின் வெற்றிச் செய்திகளைக் கூறியவாறு துள்ளிக் குதித்து விளையாடும் வகையில் மாணிக்கவாசகர் என அழைக்கப்படும் திருவாதவூரார் இயற்றிய திருவாசகத்தில் திருவுந்தியார் எனும் தலைப்பில் 2 0 பாடல்கள் அமைந்துள்ளன. கலித்தாழிசை எனும் யாப்பில் அமைந்துள்ள அப்பாடல்களை அடியொற்றியே திருவியலூர் உய்யவந்த தேவநாயனார், சைவ சாத்திரங்களை விவரிக்கும் திருவுந்தியார் நூலை இயற்றியுள்ளார்.

உரை

திருவுந்தியார் நூலுக்கு 16-ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரை ஒன்று உள்ளதென மா. இராசமாணிக்கனார் குறிப்பிட்டுள்ளார்.

பாடல் நடை

தானாகத் தந்தது

அகளமா யாரு மறிவரி தப்பொருள்
சகளமாய் வந்ததென் றுந்தீபற
தானாகத் தந்ததென் றுந்தீபற.

சொற்பிரிப்பு:

அகளமாய் ஆரும் அறிவு அரிது
அப்பொருள்சகளமாய் வந்தது
என்று உந்தீ பறதானாகத் தந்தது
என்று உந்தீ பற.

(தோற்றமில் காலமாக அறிய முடியாததாக உள்ள அம்முழுமுதல் பொருளே நம் பொருட்டு குருவுருக் கொண்டு வந்ததென உந்திப் பற. அம்முதற்பொருள் தானே வந்து மெய்யுணர்வைத் தந்ததென்று உந்திப் பற.)

2

பெற்ற சிற்றின்பமே பேரின்பமாம்
ஆங்கேமுற்ற வரும் பரிசு உந்தீ பற
முளையாது மாயை என்று உந்தீ பற

(இறைவனை நினைத்துப் பெறும் சிற்றின்பமே பேரின்பம். இதுவே முற்றிய பரிசு. - என்று எண்ணிக்கொண்டு உந்தீ பற - .இப்படி நினைத்தால் மனத்தில் மாயை பிறக்காது - இதனைப் புரிந்துகொண்டு உந்தீ பற .)

உசாத்துணை

  • திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் விளக்கவுரை, திருப்பனந்தாள் சைவமடம் வெளியீடு, 1982.
  • இராசமாணிக்கனார். மா,சைவசமய வளர்ச்சி, பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)
  • சைவ சித்தாந்த நூல்கள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.