under review

சினிமா உலகம் (இதழ்)

From Tamil Wiki
Revision as of 23:45, 12 October 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added: Image Added; Link Created: Proof Checked.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சினிமா உலகம் ஆண்டு மடல் (படம் நன்றி: செட்டிநாடு ஹெரிடேஜ், வள்ளியப்பன் ராமநாதன்)

சினிமா உலகம் (1935, திரைப்படத் துறை சார்ந்து தமிழில் வெளியான முதல் மாத இதழ். இதன் ஆசிரியர், பி.எஸ். செட்டியார் என்னும் பக்கிரிசுவாமி செட்டியார். சென்னையிலிருந்து வெளிவந்த இவ்விதழ், சில ஆண்டுகளுக்குப் பின் யுத்த கால நெருக்கடி காரணமாகக் கோயம்புத்தூரிலிருந்து வெளிவந்தது. வல்லிக்கண்ணன் இவ்விதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

பிரசுரம், வெளியீடு

எம் டி. ராசன், சி.பி. சாரதி ஆகியோரால், 1935, ஏப்ரல் மாதத் தமிழ் வருடப் பிறப்பன்று சென்னையில் தொடங்கப்பட்ட இதழ் சினிமா உலகம். பி.எஸ். செட்டியார் என்னும் பக்கிரிசுவாமி செட்டியார், இதன் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் அவரே சினிமா உலகம் இதழை விலைக்கு வாங்கி அதன் நிர்வாகியானார். இரண்டாம் உலகப் போரின் காரணமாக சினிமா உலகம் இதழ் சில காலம் கோயம்புத்தூரிலிருந்து வெளிவந்தது. அக்காலகட்டத்தில் வல்லிக்கண்ணன் இவ்விதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

உள்ளடக்கம்

சாதாரணத் தாளில், இளஞ்சிவப்பு நிற அட்டையுடன், 16 பக்கங்களில் சினிமா உலகம் இதழ் வெளிவந்தது. இதன் விலை அரையணா. கோயம்புத்தூலிருந்து வெளிவந்த போது இரண்டனா விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இவ்விதழ் 500 படிகள் மட்டுமே அச்சிடப்பட்டது.

சினிமா, நாடகம், இசை பற்றிய செய்திகள், செய்திக்கட்டுரைகள், நேர்காணல்கள், விமர்சனங்கள் ஆகியன இவ்விதழில் வெளிவந்தன. திரை உலகச் செய்திகள், தமிழ், இந்தி, ஆங்கிலத் திரைப் படங்கள் பற்றிய தகவல்கள், விமர்சனங்கள், கேள்வி பதில்கள், ஸ்டூடியோச் செய்திகள் இவ்விதழில் இடம் பெற்றன. கதை, கட்டுரை, கவிதைகளும் சினிமா உலகம் இதழில் வெளியாகின.

ஆண்டுதோறும் தீபாவளிமலர், புதுவருட மலர், சித்திரை மலர் போன்ற மலர்கள், வண்ணப் படங்களுடன் வெளிவந்தன.

பங்களிப்பாளர்கள்

சினிமா உலகம் இதழ், சென்னையிலிருந்து வெளிவதபோது சுவாமி விபுலானந்தர், திரு.வி.கலியாணசுந்தர முதலியார், பாரதிதாசன், இளங்கோவன், ச.து.சு. யோகியார், சாமி சிதம்பரனார், மணி. திருநாவுக்கரசு, வல்லிக்கண்ணன் உள்ளிட்ட பலர் இதழுக்குப் பங்களித்தனர்.

இதழ் நிறுத்தம்

சினிமா உலகம் இதழ் 1947 வரை வெளிவந்து பின் நின்று போனது.

மதிப்பீடு

திரைத்துறை சார்ந்து, தமிழில், முதன் முதலில் வெளிவந்த இதழ் சினிமா உலகம். இவ்விதழைப் பின்பற்றி, இதனை முன்னோடியாகக் கொண்டு ஆடல் பாடல், சந்திரோதயம், மூவி ஹெரால்ட், இந்தியன் மூவி நியூஸ், இந்தியன் ஸ்டார்  எனப் பல இதழ்கள் வெளிவந்தன. திரைத்துறைப் பத்திரிகைகளின் முன்னோடி இதழாக சினிமா உலகம் இதழ் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.