under review

நல்வெள்ளியார்

From Tamil Wiki

நல்வெள்ளியார் என்றும் நல்லொளியார் என்றும் அழைக்கப்பட்ட இவர் சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது நான்கு பாடல்கள் சங்கத் தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன.

ஆசிரியர் குறிப்பு

நல்வெள்ளியார் என்ற இப்புலவரின் பெயர் வெள்ளிவீதியார் என்னும் பெண்பாற் புலவரின் பெயரை ஒத்துள்ளது. மேலும் நல்வெள்ளியார் இயற்றிய பாடல்களில் பெண்களின் நுண்ணுணர்வுகள் நுட்பமாக வெளிப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு இவர் பெண்பாற் புலவர் எனக் கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

நல்வெள்ளியார் இயற்றிய நான்கு பாடல்கள் அகநானூறு (32), குறுந்தொகை (365), நற்றிணை - (7, 47) ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • அணுகுதற்கரிய நெடிய மலைப்பக்கத்திலே ஒலித்த அருவியானது தண்ணென்று முரசைப்போல ஒலிக்கின்ற ஆரவாரத்தை வெளிப்படுத்தும் பக்கத்திற் கொண்ட பெரிய மலையையுடைய நாடன்.
  • சங்குகளை அறுத்துச் செய்த ஒளிர்வளைகள் அணிந்த தலைவி
  • மூங்கிலின் நெல்லைத் தின்ற வரி பொருந்திய நெற்றியையுடைய யானை; தண்ணிதாகிய நறுமணங் கமழும் மலைப்பக்கத்திலே உறங்காமல் நிற்கும்; சிறிய இலையுடைய சந்தன மரத்தினையுடைய வாடிய பெரிய காட்டினில் அகன்ற சுனையில் நீர் நிறையவும்; பெரிய மூங்கில்களையுடைய மலைப்பக்கத்தில் அருவிகள் ஆரவாரிப்பவும்; கற்களைப் புரட்டிக்கொண்டு ஓடிவருகின்ற மிக்க விசையினையுடைய காற்றாற்றில் மூங்கிலும் முழுகுமாறு பெருகிய வெள்ளத்தின் அலை காட்டில் சென்று மோதவும் ஒலிக்கின்ற இடியேற்றொடு முழக்கஞ் செய்து முகில்கள் இப்பொழுதே மழை பெய்யவேண்டி மின்னி நிற்கும் காலம்.
  • புலியானது பெரிய களிற்றியானையைக் கொன்றதேயென்று அதன் கரிய பிடி யானை வாடிய துன்பத்தோடும் வருத்தத்தோடும் இயங்க மாட்டாமே; நெய்தலின் பசிய இலையை ஒக்கின்ற அழகிய செவியையுடைய துன்புற்ற தன் கன்றினை அணைத்துக்கொண்டு; விரைவாகத் தீர்த்தற்கரிய புண்ணுற்றாரைப் போல வருத்தமுற்றிருக்கும் கானக நாடன்.

பாடல் நடை

அகநானூறு 32

நெருநல் எல்லை ஏனல் தோன்றி,
திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து,
புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள,
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி,
சிறு தினைப் படு கிளி கடீஇயர், பல் மாண்
குளிர் கொள் தட்டை மதன் இல புடையா,
'சூரரமகளிரின் நின்ற நீ மற்று
யாரையோ? எம் அணங்கியோய்! உண்கு' எனச்
சிறுபுறம் கவையினனாக, அதற்கொண்டு
இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு, அஞர் உற்ற என்
உள் அவன் அறிதல் அஞ்சி, உள் இல்
கடிய கூறி, கை பிணி விடாஅ,
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, நின்ற
என் உரத் தகைமையின் பெயர்த்து, பிறிது என்வயின்
சொல்ல வல்லிற்றும்இலனே; அல்லாந்து,
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்
தோலாவாறு இல்லை தோழி! நாம் சென்மோ.
சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே
மாசு இன்றாதலும் அறியான், ஏசற்று,
என் குறைப் புறனிலை முயலும்
அண்கணாளனை நகுகம், யாமே.

குறுந்தொகை 365

கோடீர் இலங்குவளை நெகிழ நாளும்
பாடில கலிழ்ந்து பனியா னாவே
துன்னரும் நெடுவரைத் ததும்பிய அருவி
தன்ணென் முரசின் இமிழிசை காட்டும்
மருங்கிற் கொண்ட பலவிற்
பெருங்கல் நாடநீ நயந்தோள் கண்ணே.

நற்றிணை 7

சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப,
கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக்
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப,
தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம்
இன்னே பெய்ய மின்னுமால்- தோழி!
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை
தண் நறுஞ் சிலம்பில் துஞ்சும்
சிறியிலைச் சந்தின வாடு பெருங் காட்டே.

நற்றிணை 47

பெருங் களிறு உழுவை அட்டென, இரும் பிடி
உயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது,
நெய்தற் பாசடை புரையும் அம் செவிப்
பைதல்அம் குழவி தழீஇ, ஒய்யென
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும்
கானக நாடற்கு, 'இது என' யான் அது
கூறின் எவனோ- தோழி! வேறு உணர்ந்து,
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி,
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து,
அன்னை அயரும் முருகு நின்
பொன் நேர் பசலைக்கு உதவாமாறே?

உசாத்துணை



✅Finalised Page