first review completed

பாவை நோன்பு

From Tamil Wiki
Revision as of 14:47, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)

பாவை நோன்பு கன்னிப் பெண்கள் மழைவளம் வேண்டியும், நாடு செழிக்கவும், பீடு இல்லாத கணவரைப் பெறவும் நோற்கும் நோன்பு. சங்கப்பாடல்கள், பரிபாடல், திருப்பாவை ஆகியவற்றில் பாவை நோன்பு பற்றிய செய்திகள் உள்ளன.

வரலாறு

'நறுவி ஐம்பான் மகளிராடும் தை இத்தண் கயம் போல’ என ஐங்குறுநூற்றில் உள்ளது. ’தையில் நீராடிய தவம் தலைப்படுவாயோ’ என கலித்தொகையில் உள்ளது. பாவை நோன்பை ‘அம்பா நீராடல்’ என புலவர் நல்லத்துவனார் கூறினார். வையை பற்றிய பரிபாடலில் பாவை நோன்பு பற்றி விரிவாக உள்ளது. திருப்பாவையில் பாவை நோன்பு பற்றிய செய்திகள் உள்ளன. ”பாவை நோன்பு தொன்மையான நோன்பு மரபு. ’கொல்லிப்பாவை (தொன்மம்)’ என்ற பெண் தெய்வத்தை வழிபட்ட செய்திகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. மார்கழி மாதம் நீராடுதல் பெருவிழாவகக் கொண்டாடப்பட்டது. பாவையை வழிபட்டு ஆற்று நீரில் நீராடினர். பாவை என்பது கார்த்தியாயினியைக் குறிக்கிறது.” என பேராசிரியர் ரா. ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டார். “பாவை நோன்பு கார்த்தியாயினி நோன்பின் மறுவடிவம். வடவர் நோன்பு தமிழர் பண்பாட்டோடு இரண்டறக் கலந்தது” என திருவெம்பாவைக்கு எழுதிய உரையில் பி. ஸ்ரீநிவாசன் கூறினார்.

பாவை நோன்பு முறைகள்

திருப்பாவையில் பாவை நோன்பு கடைபிடிக்கும் முறைகள் பற்றி உள்ளது.

  • பாற்கடலில் துயிலும் பரமனைப் பாடுதல்
  • மார்கழி அதிகாலையில் எழுந்து நீராடுதல்
  • நெய், பால் உண்ணாமலிருத்தல்
  • மையிட்டு எழுதாமலிருத்தல்
  • மலர் சூடாமலிருத்தல்
  • தீய செயல்கள் செய்யாமல் இருத்தல்

பாவை நோன்பினால் வரும் பயன்கள்

  • குற்றமற்ற விரும்பிய கணவர் அமைவார்
  • திங்கள் மும்மாரி மழை பெய்யும்
  • பெரும் செந்நெல் விளையும்
  • செந்நெல்களூடே மீன்கள் துள்ளி விளையாடும்
  • குவளைமலரின் தேனை உண்டு வண்டுகள் மயங்கிக் கிடக்கும்
  • வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பசுக்கள் பெருகும்
  • நீங்காத செல்வம் நிறையும்

பாடல் நடை

  • திருப்பாவை: 3: பாவை நோன்பு கடைபிடிக்கும் முறைகள்

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையிற் துயின்ற பரமன் அடி பாடி
நெய் உண்ணோம் பால் உண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலர் இட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து-ஏலோர் எம்பாவாய்

  • திருப்பாவை: 4: பாவை நோன்பினால் வரும் பயன்கள்

ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஒங்கு பெருஞ் செந்நெலூடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து- ஏலோர் எம்பாவாய்

  • பரிபாடல்:11-74-82

கனைக்கும் அதிர்குரல் கார்வனம் நீங்கப்
பனிப்படு பைதல் விதலைப் பருவத்து
ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளித்து
மாயிருந்த் திங்கள் மறுநிரை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்
புரிநூல் அந்தணர் பொங்கலம் ஏற்ப
வெம்பா தாக வியனில் வரைப் பென
அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்
முனித்துறை முதல்ல்வியர் முறைமை காட்ட

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.