under review

நோன்பு

From Tamil Wiki

நோன்பு : தன்னை தூய்மை செய்து கொள்ளவோ, வழிபாட்டின் பொருட்டோ செய்யப்படும் தற்கட்டுப்பாடுகள் நோன்பு எனப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக செய்யப்படும் தற்கட்டுப்பாடும் நோன்பு எனப்படுகிறது. உண்ணாமை, பேசாமை உட்பட பலவகையான தற்கட்டுப்பாடுகள் நோன்பு நெறிகளாக உள்ளன.

சொல் வளர்ச்சி

நோய்

நோன்பு என்னும் சொல்லின் வேர் நோய். நோய் என்னும் வேர்ச்சொல்லுக்கு எஸ். வையாபுரிப்பிள்ளை பேரகராதி அளிக்கும் பொருள்களாவன. வியாதி,துன்பம், அச்சம், வலி. சங்ககாலத்தில் நோய் என்ற சொல் வருந்துதல், மெலிதல் என்னும் பொருளில் அகத்துறை பாடல்களில் பயன்படுத்தப்படுகிறது. (...நாடன் நோய் தந்தனனே தோழி.பசலை ஆர்த்தன குவளை அம் கண்ணே - கபிலர். குறுந்தொகை 13) நோதல் என்னும் சொல் வருந்துதல் என்று பொருளில் பயன்படுகிறது. (நோதலும் தணிதலும் அவற்றோரன்ன.- கணியன் பூங்குன்றன், புறநாநூறு 192) . வையாபுரிப்பிள்ளை பேரகராதி நோய்த்தல் என்னும் சொல்லுக்கு மெலிதல், வாடுதல் என்னும் பொருள்களை அளிக்கிறது. கருவுற்ற பெண் அடையும் மெலிவும் தளர்வும் நோய்த்தல் எனப்படுகிறது.

நோற்றல்

நோற்றல் என்பது காத்திருத்தல் என்னும் பொருளில், குறிப்பாக பசித்துக் காத்திருத்தல் என்னும் பொருளில் மலையாளத்தில் புழக்கத்தில் உள்ளது.(ஈற்றப்புலி நோற்றுகிடக்கும் ஈரன் கண்ணு துறந்நும் - கடம்மனிட்ட ராமகிருஷ்ணன். காட்டாளன் கவிதை) நோற்றல் என்பது தவத்தை குறிக்கிறது. (இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல்- திருக்குறள் 70 ) நோற்பு என்னும் சொல்லுக்கு பேரகராதி பொறுத்துக்கொள்ளுதல்,தவம் என்னும் பொருட்களை அளிக்கிறது.

நோன்றல்

நோன்றல், நோன்றுதல் ஆகிய சொற்கள் சங்க காலம் முதல் பொறுத்துக்கொள்ளுதலை குறிக்க பயன்பட்டன. (பட்டென கண்டது நோனான் ஆகி. அகநாநூறு.44) திவாகர நிகண்டு நோன்றல் என்பதற்கு தள்ளுதல், துறத்தல் என்று பொருள் அளிக்கிறது.பிங்கல நிகண்டு நோன்றல் என்ற சொல்லுக்கு நிலை நிறுத்துதல், உறுதி கொள்ளுதல் என பொருள் விளக்கம் அளிக்கிறது. அதில் இருந்து நோன்மை எனும் சொல் உருவானது. அது வருந்தி காத்திருத்தலைக் குறிக்கிறது. (வயல் மிகு சிறப்பின் வருத்தமும் நோன்மையும் வியல் மனைக் கிழவனைப் பகட்டொடு பொரீஇயன்று.- முல்லை பொதுயியல்) பெருமை (துவன்றிலேன் மனிதனோன்மை- கம்பராமாயணம் 288) சிறப்பு (நுந்த மாமக ணோன்மை- பிரபுலிங்கலீலை) ஆகிய பொருள்களும் அதற்குள்ளன. கலித்தொகை நோன்றல் என்னும் சொல்லை சகித்தல் என்னும் பொருளில் பயன்படுத்துகிறது. (பேதையர் சொன்னோன்றல் -கலித்தொகை 133) நோனாமை என்றால் தாங்கிக்கொள்ளாமல் இருத்தல். நோனார் என்றால் பகைவர்.நோற்பாள் என்றால் தவம் செய்பவள். (சூடாமணி நிகண்டு)

நோன்பு

இச்சொற்களில் இருந்து நோன்பு என்னும் சொல் உருவானது. (ஆயிடைப் படிந்தனர் அரனை உன்னியே மாயிரு நோன்பினை இயற்றி வைகினார். கந்தபுராணம், தக்கன் மகப்பெறு படலம்) மத வழிபாட்டுக்காக தன்னை வருத்திக் கொள்ளுதல் நோன்பு எனப்பட்டது. (நோற்பாரின் நோன்மையுடைத்து. திருக்குறள் 48)

சொற்பொருள்

நோன்பு என்னும் சொல் பெரும்பாலும் Penance என்று மொழியாக்கம் செய்யப்படுகிறது. கழிவிரக்கம் என்னும் பொருள்கொண்ட paenitentia என்னும் லத்தீன் சொல்லில் இருந்து வந்ததாகக் கருதப்படும் அச்சொல்லின் மூலம் தண்டனை எனப் பொருள்படும் penal என்னும் சொல்லில் உள்ளது. அதில் இருந்து நோன்பு என்னும் சொல் அடிப்படையான வேறுபாட்டைக் கொண்டுள்ளது. நோன்பில் குற்றவுணர்வு, கழிவிரக்கம், தன்னைத்தானே தண்டித்துக்கொள்ளுதல் ஆகிய அம்சங்கள் இல்லை. தன்னை தண்டித்தல் சார்ந்த நோன்புகளுக்கு கழுவாய், பிராயச்சித்தம் போன்ற சொற்கள் தனியாக உள்ளன. கழுவுதல் என்னும் வேரில் இருந்து உருவான கழுவாய் என்னும் சொல் சங்ககாலம் முதலே புழக்கத்தில் உள்ளது. (வழுவாய் மருங்கிற் கழுவாயுமுளவென -புறநாநூறு 34)

நோன்புச்செயல்பாடு

நோன்பு என்பது நான்கு தளங்களில் நிகழ்வது

குவிதல்

ஒருவர் தன்னை ஒரு செயலின் பொருட்டு குவித்துக் கொள்வது. தன் உள்ளத்தையும் உடலையும் அதன் பொருட்டு கட்டுப்படுத்தி பயிற்றுவிப்பது. அதற்காக அவர் தன் அகத்தை கலைக்கும் செயல்களை விலக்குகிறார். தன் அன்றாடச் செயல்பாடுகளில் கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறார். உணவு, உடை, பேச்சு, செயல்பாடுகள் அனைத்திலும் சில நெறிகளை கடைப்பிடிக்கிறார். போருக்குச் செல்வதற்கு முன்னரும், பெருஞ்செயல்களைச் செய்வதற்கு முன்னரும், தெய்வங்களை பூசை செய்வதற்கு முன்னரும், இறை வழிபாட்டுக்காக பயணங்கள் செய்வதற்கு முன்னரும் நோன்புகள் நோற்கப்படுகின்றன.

தூய்மையாதல்

அன்றாட வாழ்க்கையின் பல்வேறு செயல்களாலும், காமம் வன்முறை ஆசை போன்ற மானுட உணர்வுகளாலும் மானுடரின் உள்ளம் உருவாகியிருக்கிறது. அதில் தெய்வம் குடியேறுவதற்கு அதை தூய்மை செய்ய வேண்டியிருக்கிறது. தெய்வங்களை தன்மேல் சன்னதம் கொண்டு வரச்செய்யும் பொருட்டோ, தெய்வவேடம் தாங்கி நடிக்கும் பொருட்டோ, தெய்வமாக நின்று குறிசொல்லும் பொருட்டோ நோன்பிருந்து தன்னை தூய்மை செய்து கொள்ளுவது வழக்கம். (உதாரணம்: அம்மன் அருள் கொள்ளும் பூசாரிகள் காப்பு கட்டிக்கொண்டபின் நோன்பிருப்பது)

வேண்டுதல்

தெய்வங்களிடம் ஒன்றை வேண்டிக் கொள்ளும் பொருட்டு நோன்பிருப்பது வழக்கம். அது தங்கள் வேண்டுதலை தீவிரமாக முன்வைப்பதற்கும், தெய்வங்களுக்கு தங்கள் விருப்புறுதியை தெரிவிக்கும் பொருட்டும் நோன்புகள் நோற்கப்படுகின்றன. குழந்தைப்பேறு உட்பட பல காரணங்களுக்காக இத்தகைய நோன்புகள் இந்து, சமண, பௌத்த வாழ்க்கையின் பிரிக்கமுடியாத பகுதியாக உள்ளன. (உதாரணம். கணவனின் ஆயுளுக்காக பெண்கள் நோற்கும் திங்கள்கிழமை நோன்பு)

நீத்தார்

நீத்தாரின் பொருட்டு நோன்பு நோற்றல் தொன்றுதொட்டே தமிழ் மரபில் உள்ளது. வேண்டியவர் மறைந்த பின்னர் குறிப்பிட்ட காலம் சில நோன்புகளை கடைப்பிடிப்பதுண்டு. ஓராண்டுக்காலம் நீடிக்கும் நோன்புகளும் உண்டு. பின்னர் நினைவுநாட்களின்போது சில நோன்புகள் கடைப்பிடிக்கப்படுவதுண்டு. கைம்மை நோன்பு அவ்வகைப்பட்டது. அது கணவனை இழந்த பெண் எஞ்சிய வாழ்நாள் முழுக்க கணவனின் நிறைவுக்காக கடைப்பிடிக்கும் நோன்பு. அதில் முடிகளைதல், அணிசூடாமை, ஒருபொழுது உண்ணுதல், மன்றுக்கு வராமை என பல நெறிகள் சங்க காலம் முதலே உள்ளன. ( நடுகல் ஆகியவென்வேல் விடலை இன்மையின் புலம்பிக் கொய்ம்மழித் தலையடு கைம்மையுறக் கலங்கிய கழிகலம் மகடூஉ - ஆவூர் மூலங்கிழார் புறநாநூறு 261)

(பார்க்க கைம்மை )

மருத்துவம்

மரபார்ந்த இந்திய மருத்துவத்தில் நோயை வெல்லும் பொருட்டு நோன்புகளை மருத்துவர் அளிப்பதுண்டு. இவை பத்தியம் என்றும் சொல்லப்படுகின்றன. சிலவகை உணவுகளை தவிர்ப்பது, சிலவகை உணவுகளை மட்டும் உண்பது, தனிமையில் இருப்பது, இருளில் இருப்பது, நீர் அருந்தாமலிருப்பது என பல நோன்புகள் உண்டு.

வீடுபேறு

இந்திய வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக இருப்பது வாழ்க்கை நிறைவுற்றதென கருதும் ஒருவர் நோன்பிருந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளுதல். இது வீடுபேறு அடைவதற்கான வழி என தொல்தமிழ் மரபு கருதியது. சமண மதத்தில் இந்த வழக்கம் உள்ளது. இந்து மதத்திலும் அரிதாக உள்ளது. இது வடக்கிருத்தல் எனப்படுகிறது. (உதாரணம் கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் உண்ணாநோன்பிருந்து உயிர்துறந்தது)

(பார்க்க வீடுபேறு)

தவம்

நோன்பும் தவமும் சில நூல்களில் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் தவம் என்பது நோன்பும், ஊழ்கமும் இணைந்த ஒன்று. வீடுபேறு அல்லது பெருங்கொடை ஒன்றை அடையும்பொருட்டு ஆற்றுவது.

( பார்க்க தவம் )

துறவு

துறவியர் கொள்ளும் தற்கட்டுப்பாடுகளை நோன்பு என சொல்வதுண்டு. ஆனால் துறவியரின் வாழ்க்கைநெறி அது. பிறர் கொள்ளும் தற்கட்டுப்பாடுகள் அவர்களின் இயல்புவாழ்க்கை சார்ந்தவை அல்ல. அவையே நோன்பு எனப்படும்.

(பார்க்க துறவு)

நோன்பு- இஸ்லாமிய மதத்தில்

நோன்பு என்னும் சொல் இஸ்லாமிய மதத்தினரால் இன்று அதிகமும் பயன்படுத்தப்படுகிறது. ரமலான் மாதத்தில் உடலும் உள்ளமும் தூய்மை அடையும்பொருட்டு இஸ்லாமியர் பொழுது விடிந்தபின் அந்தியில் பிறை தெரியும் வரை உணவோ நீரோ அருந்தாமல் இருக்கும் நோன்பு எல்லா பொருளிலும் நோன்பு என்னும் சொல்லுக்கு பொருந்துவதே.

நோன்பு கிறிஸ்தவ மதத்தில்

கிறிஸ்தவ மதத்தில் கிறிஸ்து சிலுவையில் மாண்ட துக்கவெள்ளியை ஒட்டி உண்ணாமை கடைப்பிடிக்கப்படுகிறது. ஞானவாத ( Gnostic) மரபுகளின் சாயல் கொண்ட கிறிஸ்தவ நம்பிக்கை முறைகளில் உண்ணாமலிருத்தல், உறங்காமலிருத்தல் போன்ற தற்கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப் படுகின்றன. இவை நோன்பு என்னும் சொல்லால் சுட்டப் படுகின்றன. இவற்றில் தங்கள் பாவங்களை எண்ணி வருந்துதல், அவற்றுக்கு கழுவாய் தேடுதல் ஆகிய அம்சங்கள் இருப்பதனால் நோன்பு என்னும் சொல் சரியாகப் பொருந்தாது. penance என்னும் சொல்லே ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நடைமுறையில் நோன்பு என்னும் சொல் புழக்கத்திலுள்ளமையால் அதுவே ஏற்கப்படுகிறது.

நோன்புகளின் வகைகள்

உண்ணாநோன்பு

உண்ணாநோன்பு என்பது முழுமையாக உணவை தவிர்த்து விடுதல் என்னும் உச்சத்தில் தொடங்கி குறிப்பிட்ட உணவுகளை குறிப்பிட்ட காலகட்டங்களில் தவிர்த்துவிடுதல் வரை பல நிலைகளில் உள்ளது (உதாரணம், புரட்டாசி மாதங்களில் புலால் உணவை வைணவர்கள் தவிர்ப்பது) (உண்ணாது நோற்பார் பெரியர் -திருக்குறள் 160)

பேசாநோன்பு

பேசாநோன்பு சமண மதத்தில் பரவலாக ஆற்றப்படுகிறது

தனிமை நோன்பு

தனிமைநோன்பு மதவழிபாட்டின் பகுதியாக இயற்றப்படுகிறது. ஆலயங்களில் சென்று தங்குவது, இல்லத்துக்கு வெளியே தனி கொட்டகைகளில் தங்குவது போன்றவை தமிழகத்தில் வழக்கமாக உள்ளன

பாலுறவு மறுப்பு நோன்பு

சில வழிபாடுகளின் பகுதியாக பாலுறவை தவிர்ப்பது நோன்பாக கடைப்பிடிக்கப்படுகிறது (சபரிமலை பயணத்துக்கான நோன்பு)

கொல்லா நோன்பு

எவ்வுயிரையும் கொல்லாமலிருத்தல் ஒரு நோன்பாக கடைப்பிடிக்கப்படுகிறது. சமணர்கள் அதை வாழ்நாள் நோன்பாக வலியுறுத்தினாலும் குறிப்பிட்ட நாட்களில் அந்நோன்பை கடைப்பிடிப்பது வழிபாட்டுமுறைகளில் வழக்கமாக உள்ளது. (கொல்லா நலத்தது நோன்மை- திருக்குறள் 984)

உடை நோன்பு

உடைகளில் குறிப்பிட்ட சிலவற்றை விலக்குதலும் நோன்பென கொள்ளப்படுகிறது. எளிய ஆடை அணிதல். துறவியருக்குள்ள ஆடை அணிதல். தாடி தலைமுடி மழிக்காமலிருத்தல். காலணி அணியாமலிருத்தல். முடிகளைதலும் இதில் அடங்கும். (உதாரணம் பழனி பாதயாத்திரை போன்ற சடங்குகள்)

வடக்கிருத்தல்

வடக்கிருத்தல் சல்லேகனை என சமணர்களால் சொல்லப்படுகிறது. சமணத்திற்கு முன்னரே இது தமிழ்ப் பண்பாட்டில் இருந்திருப்பதை புறநாநூற்றில் காணமுடிகிறது. புறப்புண் நாணி வடக்கிருந்து உயிர்விடும் வழக்கம் இருந்தது. (வெண்ணிப் பறந்தலை மிகப் புகழ் உலகம் எய்தி புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே- வெண்ணிக்குயத்தியார் புறநாநூறு 66 )

(பார்க்க வடக்கிருத்தல்)

சமணத் துறவியர் தங்களுக்குரிய இடத்தை அஞ்சினான் புகலிடம் என அறிவிப்பார்கள். அதற்கு தங்கள் பீலி, முக்குடை அடையாளத்துடன் கல்நாட்டி அடையாளப்படுத்துவார்கள். அந்த எல்லைக்குள் எவரும் எவரையும் கொல்லலாகாது. கொன்றால் கொன்றவன் இல்லத்தின்முன் சமணத் துறவிகள் உண்ணாநோன்பிருந்து உயிர்விடுவார்கள்.

(பார்க்க அஞ்சினான் புகலிடம்)

அரசியலில் நோன்பு

சமணமும் வைணவமும் துறவிகளுக்கும் இல்லறத்தோருக்கும் வகுத்தளித்த நோன்புகளை அரசியல் போராட்டத்தின் வழிமுறைகளாக மாற்றியவர் காந்தி. சமணர்களின் அஞ்சினான் புகலிடம் போன்ற முறைமைகளில் இருந்து அவர் இந்த போராட்ட முறையைப் பெற்றுக்கொண்டார்

பொறுத்துக் கொள்ளுதல், எதிர்வினை ஆற்றாமலிருத்தல், மௌனமாக இருத்தல், காத்திருத்தல், உண்ணாமலிருத்தல் ஆகியவற்றை அவர் போராட்ட முறைகளாக அறிமுகம் செய்தார். முதலில் சஹனசமரம் (சகிப்புப் போராட்டம்) என்று கூறப்பட்ட இது பின்னர் சத்யாக்ரகம் என அவரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. காந்திக்குப் பின் உலகமெங்கும் ஜனநாயக கட்டமைப்புக்குள் குடிமக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தவும், எதிர்ப்பை பதிவுசெய்யவும் பலவகையான நோன்புகளை போராட்ட முறைகளாக கொண்டிருக்கின்றனர். அவை பல்வேறு வடிவங்களில் உலகமெங்கும் நிகழ்கின்றன.

உசாத்துணை

  • எஸ்.வையாபுரிப் பிள்ளை பேரகராதி. சென்னை பல்கலைகழகம்


✅Finalised Page