first review completed

கந்தர்வன்

From Tamil Wiki

கந்தர்வன் (க.நாகலிங்கம்)( பெப்ரவரி 3,1944-ஏப்ரல் 22,2004) தமிழ் எழுத்தாளர், முற்போக்கு இலக்கிய அழகியலை சார்ந்து எழுதியவர். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்)யுடன் தொடர்புகொண்டிருந்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப் பொறுப்பை வகித்தார். தொழிற்சங்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

பிறப்பு,கல்வி

கந்தர்வனின் இயற்பெயர் நாகலிங்கம். இராமநாதபுரம் மாவட்டம், சிக்கலில் கணேசன்-கனகம்மாள் இணையருக்கு பெப்ரவரி 3, 1944 அன்று பிறந்தார். தனது சிறுவயதிலேயே மளிகைக் கடை விற்பனை ஊழியர்,  ஜவுளிக் கடை உதவியாளர், ஓட்டல் தொழிலாளி, பால்பண்ணை மேற்பார்வையாளர் என்று பல வேலைகளையும் பார்த்து, படித்தார்.

தனி வாழ்க்கை

கந்தர்வனின் மனைவி பெயர் சந்திராதேவி. மகள்கள் மைதிலி, சாருமதி. ஒரு மகன் தன் 11-ஆவது வயதில் தவறுதலாக குளத்தில் மூழ்கி இறந்தார். கந்தர்வன் தன் 29-ஆம் வயதில் தமிழக அரசின் கருவூலக் கணக்குத்துறையில் பணிக்குச் சேர்ந்தார். மாவட்டக் கருவூல அதிகாரியாக (Treasury Officer) பணியாற்றி ஓய்வு பெற்றார்.

அரசியல்

கந்தர்வன் தமிழ்நாடு கருவூல ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவராகவும் செயலாற்றினார். இந்தியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டபோது 19 மாதகாலப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். போராட்டங்களில் கலந்துகொண்டமையால் ஆறு ஆண்டு ஊதிய உயர்வு ரத்து, பல பணியிட மாறுதல்கள் தண்டனையாக வழங்கப்பட்டன.

இலக்கிய வாழ்க்கை    

commonfolks.in

கந்தர்வன் எழுதிய 'லா.ச.ராவுடன் ஓர் அழுத்தமான உரையாடல்', 'வரலாறு சொல்லும் தமிழ் எழுத்தாளர் மாநாடு' என்ற இரண்டு கட்டுரைகளும். கண்ணதாசன் இதழில் வெளிவந்து பரவலாக பேசப்பட்டன.கண்ணதாசன் இதழின் ஆசிரியர் இராம. கண்ணப்பனின் ஆலோசனையினால், திருலோக சீதாராமின் கந்தர்வ கானம் நூலில் வந்த கந்தர்வன் என்ற பெயரைத் தனது புனைபெயராக வைத்துக்கொண்டார்.

சிறுகதைகள்

கந்தர்வனின் முதல் சிறுகதை 'சனிப்பிணம்' 1970 -ல் தாமரையில் வெளிவந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்ப காலத்திலிருந்து அதில் பணியாற்றினார்.  கண்ணதாசன் இதழில் இலக்கிய விமரிசனங்கள், சிறுகதைகள், கவிதைகள் எழுதினார். தாமரை, சுபமங்களா , சிகரம், செம்மலர், ஆனந்த விகடன் என்று பல இதழ்களில் அவரது கதைகள் வெளிவந்தன.

இலக்கிய விமர்சனம்

கந்தர்வன் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இலக்கியப்பார்வையை முன்வைத்து விமர்சனங்களும் நூல் மதிப்புரைகளும் எழுதினார். தீக்கதிரின் வண்ணக்கதிர் இலக்கியப்பகுதியிலும், புதிய புத்தகம் பேசுது இதழிலும் நூல்விமரிசனங்கள் எழுதினார்.

கவிதைகள்

கந்தர்வன் எளிய புழங்குமொழியில், நேரடி சொல்லாடலில் கவிதைகள் எழுதினார். அவரது கவிதைகள் எளிய, அலங்காரமற்ற மொழியில், பிரச்சாரத் தொனியில் அமைந்தவை. எளியவர்களின், பெண்களின் அல்லல்களைப் பேசுபவை. கந்தர்வனின் கயிறு என்ற கவிதை பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. "என் கவிதைகள் மிகுந்த இலக்கியத் தரம் வாய்ந்தவை என்றோ, அவை இலக்கியமாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றோ நான் கவலைப்படுவதில்லை. எளிய மொழியில், மக்களுக்குக் கருத்துகளை எடுத்துச் செல்கின்ற கருவியாகத்தான் நான் கவிதையைப் பயன்படுத்துகிறேன்". என்று ஓர் நேர்காணலில் குறிப்பிட்டார்.[1]

நாளும் பொழுதும் நலிந்தோர்க்கில்லை
ஞாயிற்றுக் கிழமை பெண்களுக்கில்லை
                                                        என்ற வரிகள் புகழ்பெற்றவை.

நாவல்

கந்தர்வன் இறுதியாக எழுதிய குறுநாவல் காவடி. அதன் தொடர்ச்சியாக அவர் எழுதிக்கொண்டிருந்த நாவல் முடிவுபெறுவதற்குள் இறந்து விட்டார்.

இலக்கிய அங்கீகாரம்

கந்தர்வனின் கயிறு என்ற கவிதை பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. மைதானத்து மரங்கள்[2] எனும் சிறுகதையை எழுத்தாளர் ஜெயந்தன் அவர்கள் 'இலக்கியச் சிந்தனை’யில் மாதத்தின் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுத்தார், தண்ணீர் [3]சிறுகதை ஒன்பதாம் வகுப்பு தமிழ்பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.எழுத்தாளர் இதயகீதன் கந்தர்வன் படைப்புகளை ஆய்வு செய்து, பழைய சோறும் பாதாம் கீரும் என்ற புத்தகமாக வெளியிட்டார்.

திரைப்படம்

சாசனம் [4]சிறுகதை இந்திய தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின்((NFDC) நிதி உதவியோடு இயக்குநர் மகேந்திரனால் படமாக்கப்பட்டு ஜூலை 28, 2006 அன்று வெளியிடப்பட்டது.

நாடகம்

commonfolks.in

கேள்விகள், விசாரணை போன்ற வீதி நாடகங்களை எழுதி, வீதிகளில் நடிக்கச் செய்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பாகவும், பொதுவுடைமை சங்கத்தின் சார்பாகவும் பல எழுச்சிமிக்க பிரச்சார நாடகங்களை எழுதி, இயக்கினார்.

இலக்கிய இடம்

கந்தர்வனின் இலக்கிய இடம் அவரது சிறுகதைகளைக்கொண்டே மதிப்பிடப்படுகிறது. வணிக இதழ்களில் எழுதப்பட்டதால் இலக்கிய உலகின் கவனத்தை அவை வெளிவந்தபோது கவரவில்லை. மார்க்ஸியக் கோட்பாட்டின் மேல் இருந்த உறுதியான நம்பிக்கையால் போராளியாகவே வாழ்ந்தும், உழைக்கும் மக்களின் துன்பங்களைப் பிரச்சார நோக்கில் எழுதப்பட்ட கதைகளாக இல்லாமல் கந்தர்வனின் கதைகள் அன்றாடத்தில் நிகழும் அசாதாரணங்களின் கதைகளாகத் திகழ்ந்தன. சிறுகதை என்ற வடிவத்தின் நோக்கத்தை , அது செல்லவேண்டிய உச்சத்தை அடைய முனைந்தவை அவை. சாசனம், காளிப்புள்ளே, கதைதேசம், பத்தினி ஓலம், உயிர், மங்களநாதர் ஆகிய சிறுகதைகள் ஜெயமோகனின் சிறந்த தமிழ் சிறுகதைகள்- திறனாய்வாளன் பட்டியலில்[5] இடம்பெறுகின்றன.

கந்தர்வனின் கடைசிக்கதைகள் ஐம்பதுகளில் துவங்கி புதுக்கோட்டைப் பகுதி மெல்லமெல்ல புஞ்சை விவசாயம் இல்லாமலாகி பாலையாக ஆவதன், நிலத்தை நம்பி வாழ்ந்த சிறுநிலக்கிழார் குடும்பங்களின் அழிவின் சித்திரங்கள். அது அவரது சொந்தக்குடும்பத்தின், கிராமத்தின், அதன் மக்களின் கதை.செழிப்பான ஒரு வாழ்க்கையில் இருந்தும் பண்பாட்டில் இருந்தும் சரிந்து பட்டினி நோக்கிச் சென்று அந்நிலையிலும் தங்கள் பண்பாட்டைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடி அவமானமடையும் மக்களின் உக்கிரமான மானுடப்பிரச்சினை பதிவாகியிருக்கிறது.

நாட்டுடைமை

கந்தர்வனின் படைப்புகளை தமிழக அரசால் டிசம்பர் 2022 அன்று நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

இறப்பு

சிறிதுகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த கந்தர்வன் ஏப்ரல் 22,2004 அன்று சென்னையில் மகள் வீட்டில் காலமானார்.

படைப்புகள்

கவிதைகள்
  • கிழிசல்கள்
  • மீசைகள்
  • சிறைகள் (இவை மூன்றும் சிவகங்கை அன்னம் வெளியீடுகள்)
  • கந்தர்வன் கவிதைகள் (தொகுப்பு நூல்)
சிறுகதைகள்
  • சாசனம்
  • பூவுக்கு கீழே
  • கொம்பன்
  • ஒவ்வொரு கல்லாய்
  • அப்பாவும் அம்மாவும் (இவை அனைத்தும் சிவகங்கை அன்னம் பதிப்பகம்)
  • கந்தர்வன் கதைகள் (தொகுப்பு நூல்)
குறுநாவல்

காவடி

உசாத்துணை+

கந்தர்வன் கல் தடம்-எஸ்.ராமகிருஷ்ணன்

கந்தர்வன் -ஜெயமோகன்

கந்தர்வன் பவா செல்லதுரை

கந்தர்வன் சிறுகதைகள்-சிறுகதைகள்.காம்

அடிக்குறிப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.