under review

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

From Tamil Wiki
Revision as of 00:54, 21 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சுவாமிகள் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுவாமிகள் (பெயர் பட்டியல்)
தண்டபாணி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தண்டபாணி (பெயர் பட்டியல்)
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (தண்டபாணி சுவாமிகள்; திருப்புகழ் அடிகள்; முருகதாசர்; சங்கரலிங்கம்; முருகதாசன், திருப்புகழ்க்காரன், தண்டபாணிப் பரதேசி, தண்டபாணி அடிகளார், வண்ணச்சரபம், ஓயாமாரி) ( நவம்பர் 28, 1839-ஜூலை 5, 1898), தமிழ்ப் புலவர். முருக பக்தர்களுள் ஒருவர். லட்சம் பாடல்களுக்கு மேல் எழுதியதாக அறியப்படுபவர். 'புலவர் புராணம்' என்ற நூலின் ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

சங்கரலிங்கம் என்னும் இயற்பெயரை உடைய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், நவம்பர் 28, 1839-ல், திருநெல்வேலியில், செந்தினாயகம் - பேச்சிமுத்து அம்மைக்கு மகனாகப் பிறந்தார். இளம் வயது முதலே பாடல்கள் இயற்றும் திறனும், தெய்வ பக்தியும் கொண்டிருந்தார். அடிப்படைக் கல்வியைத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். ஆரம்பக் கல்வியை சுரண்டையில் உள்ள பள்ளியில் பயின்றார். ஒன்பதாம் வயதோடு படிப்பு தடைப்பட்டது. தமிழ் இலக்கண, இலக்கியங்களை ஆசிரியர் சீதாராம நாயுடுவிடம் தனியாகக் கற்றார். இளம் வயதுமுதலே பல்வேறு விதமான பாடல்களை இயற்றிப் பாடும் ஆற்றல் இருந்ததால் ஆசிரியர் சீதாராம நாயுடு இவரை 'ஓயாமாரி' என்று அழைத்தார்.

திருமணம்

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கு, மயிலம் முருகன் கோயிலில் திருமணம் நடந்தது. மனைவி: சுந்தரத்தம்மை. மகன்: செந்தினாயகம். மகள்: ஈசுவர வடிவம்மாள்.

ஆன்மிகம்

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் தனது ஆசிரியர் சீதாராம நாயுடுவிடமிருந்து சடாக்ஷர மந்திரம் (ஆறெழுத்து), விநாயக மந்திரம், இலக்குமி மந்திரம் ஆகிய மந்திர உபதேசங்களைப் பெற்றார். தலங்கள் தோறும் சென்று இறைவனைப் பாடினார். தனது பாடல்களை முருகன் கேட்கவேண்டும் என்று, அதற்கு இசைவு கொடுக்க வேண்டும் என்றும் விரும்பினார். அவ்வாறு இசைவு கிடைக்காத பாடல்களாகத் தான் கருதியவற்றை நீரிலும், நெருப்பிலும் இட்டு அழித்தார்.

தீவிர முருக பக்தராக இருந்தாலும் சைவ, வைணவ சமரசவாதியாக இருந்தார். அறு சமயம் காட்டும் கடவுள் ஒருவரே என்பது சுவாமிகளின் முடிவு. கௌபீனம் மட்டுமே அணிந்த திருமேனி, அந்த மேனி முழுவதும் திருநீறு, நெற்றியில் குங்குமம், இடது தோளில் வடகலைத் திருநாமம், வலது தோளில் தென்கலைத் திருநாமம், விரிந்த சடை, கழுத்தில் துளசி, ருத்திராட்ச மாலை, பாதக்குறடு இவற்றுடன் தண்டம் ஒன்றைக் கையிலேந்தியவராய் எப்போதும் காட்சி தந்தார். அதனாலேயே 'தண்டபாணி சுவாமிகள்' என்று அழைக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் பயணம் செய்து ஆன்மிகத் திருத்தலங்களைத் தரிசித்தார். இலங்கைக்குச் சென்றும் ஆலய தரிசனம் செய்தார்.

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகனைக் கண்டவர் என்றும் முருகனின் அருளால் பலரது நோய்களைக் குணமாக்கி, பலரது வாழ்வில் பல்வேறு அற்புதங்களைச் செய்தார் என்று தொன்மம் கூறுகிறது. சமயவாதிகள் பலருடன் பல வாதங்களை நிகழ்த்தி வென்றார். 'முருகதாசன்', 'திருப்புகழ்க்காரன்', 'தண்டபாணிப் பரதேசி', 'தண்டபாணி அடிகளார்', 'வண்ணச்சரபம்', 'திருப்புகழ் அடிகளார்', 'ஓயாமாரி', 'தண்டபாணி சுவாமிகள்' எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டார்.

பழநியிலும், விழுப்புரத்தை அடுத்த திருவாமாத்தூரிலும் கௌமார மடத்தை நிறுவி முருக வழிபாட்டு நெறியை வளர்த்தார்.

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் நூல்

இலக்கியம்

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் வருவாய் தரும் பணிகளில் எதிலும் ஈடுபடவில்லை. சதா முருகனையே நினைத்துப் பாடல்களை இயற்றினார். ஆசுகவியாகப் பல்வேறு பாடல்களை உடனடியாக இயற்றும் ஆற்றல் கொண்டிருந்ததால் 'ஓயாமாரி' என்றும், அகப்பொருளின் துறைகளை அமைத்து சந்த யாப்பில் 'வண்ணம்' என்னும் வகைமைப் பாடல்களைப் பாடியதால் 'வண்ணச்சரபம்' என்றும் அழைக்கப்பட்டார். தம்மை நாடி வந்த மாணவர்களுக்கு தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்பித்தார்.

தமிழ், ஹிந்தியில் புலமை மிக்க சுவாமிகள், இசை மற்றும் மருத்துவத்திலும் புலமை பெற்றிருந்தார். இலக்கியம், இலக்கணம், நாடகம், தத்துவம், உரை விளக்கம், உரைநடை, இசைப்பாடல், மருத்துவம் சார்ந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றினார். அவற்றில் 50000 பாடல்களே கிடைத்தன. அவற்றில் சில மட்டுமே அச்சு வடிவில் வந்தன. பல நூற்றுக்கணக்கான நூல்கள் சுவடி வடிவில் கௌமார மடாலயத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்தல், பறவை, விலங்கு பலி வழிபாட்டைத் தடுத்தல், சாதிக் கொடுமையை எதிர்த்தல், கைம்பெண்களின் திருமணத்தை ஆதரித்தல், ஆலயங்களில் தமிழ் அர்ச்சனையை ஊக்குவித்தல் ஆகியவற்றை வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் தனது கொள்கைகளாக வைத்திருந்தார். தான் எழுதிய நூல்களில் அக்கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

சுவாமிகள் எழுதிய நூல்களில் புலவர் புராணம், குருபர தத்துவம், பழனித் திருவாயிரம், திருவரங்கத் திருவாயிரம், வண்ணத்தியல்பு, அறுவகை இலக்கணம், அரசாட்சி, அருளாட்சி, திருமகள் அந்தாதி, திருமால் ஆயிரம், தில்லை ஆயிரம், சடகோபர் சதக்கந்தாதி, அருணகிரிநாதர் புராணம் போன்ற நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை. புலவர் புராணத்தில் 72-க்கும் மேற்பட்ட புலவர்களின் வாழ்க்கை வரலாறு கூறப்பட்டுள்ளது. தமிழின் சிறப்பைக் கூறும் முத்தமிழ் பாமாலை, தமிழ்த் துதிப் பதிகம், தமிழ் அலங்காரம் உள்ளிட்ட நூல்களைப் படைத்தார். திருக்குறளை அடியொட்டி, 1300 குறள் வெண்பாக்களில் மறுநெறித் திருநூல் என்ற நூலை இயற்றினார். நூற்றுக்கணக்கில் கீர்த்தனைகளையும், தனிப்பாடல்களையும் பாடினார். ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்த சுவாமிகள், அவர்கள் மீது 'ஆங்கிலேய அந்தாதி' பாடினார். 'முகுந்த நாடகம்' என்ற நாடக நூலை இயற்றினார். 'அண்ணாமலை ஏழிளையனார் திருப்புகழ்' நூல், திருவண்ணாமலையில் உள்ள ஏழு முருகக்கடவுள் ஆலயத்தைப் பற்றிப் பாடியதாகும்.

மறைவு

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், ஜூலை 5, 1898-ல், தனது 59-ம் வயதில் காலமானார்.

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் வாழ்க்கை வரலாறு

நினைவு

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை தி.செ. முருகதாச சுவாமிகள் இயற்றினார். தமிழ் இணைய கல்விக்கழக நூலகத்தில் இந்நூல் சேகரிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் சமயம், இலக்கியம், இலக்கணம், இசை என அனைத்திலும் புலமை மிக்கவராக இருந்தார். தமிழ்ப் பணியும், இறை வழிபாடும் தவிர்த்து பொருளீட்டும் பணிகளில் எடுவும் ஈடுபடாமல் வாழ்ந்தார். "இறைவனைப் போற்றுதல், தமிழைப் பேணிக் காத்தல், மனத்தை நெறிப்படுத்துதல், இயற்கையின் எழிலை எடுத்தியம்புதல், புதுமைகள் படைத்தல் ஆகிய ஐவகை நோக்கங்களை தன் குறிக்கோளாகக் கொண்டு அவற்றைப் பாடல்கள் மூலமாக வெளிப்படுத்தி வாழ்ந்து மறைந்தவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்" என்று டாக்டர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் மதிப்பிட்டார்.

நூல்கள்

  • புலவர் புராணம்
  • முத்தமிழ் பாமாலை
  • தமிழ்த் துதிப் பதிகம்
  • தமிழ் அலங்காரம்
  • திருவரங்கத் திருவாயிரம்
  • சடகோபார் சதகத்தந்தாதி
  • அறுசமயக் கடவுள்கட்கு ஆறாயிரம் தோத்திரப்பாடல்கள்
  • பழனித் திருவாயிரம்
  • தில்லை திருவாயிரம்
  • ஞாயிறு ஆயிரம்
  • ஏழாயிரம் பிரபந்தம்
  • திருவாமாத்தூர் பதிக சதகம்
  • விகட பிள்ளைத் தமிழ்
  • வருக்கக்குறள்
  • ஆங்கிலேய அந்தாதி
  • மறுநெறித் திருநூல்
  • முகுந்த நாடகம்
  • குருபர தத்துவம்
  • வண்ணத்தியல்பு
  • அறுவகை இலக்கணம்
  • அரசாட்சி
  • அருளாட்சி
  • திருமகள் அந்தாதி
  • திருமால் ஆயிரம்
  • அருணகிரிநாதர் புராணம்
  • புதுவை பிள்ளைத்தமிழ்
  • ஸ்ரீ முருகன் பாராயணத் திரட்டு
  • செந்தூர் முருகன் பாடல்கள்
  • கந்த மாலை
  • சத்தியக்கண்ணி
  • கழுகுமலைப் பாடல்கள்
  • அபிராமேசுவரப் பெருமாள் நவரத்தினத் திருப்புகழ்
  • அரிகர புத்திரர் பதிகம்
  • அரியநகர் சதுர்வேத விநாயகப் பெருமான் பதிகம்
  • அளகாபுரி குபேரன் பதிகம்
  • திருச்செந்திற் பிரபந்தம்
  • எழுபா எழுபஃது
  • ஏகன் எழுபது
  • ஏழாம் இலக்கணம்
  • ஒளவையார் பதிகம்
  • கணபதி ஆயிரம்
  • பழனித் திருவாயிரம்

மற்றும் பல.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Oct-2024, 15:42:03 IST