நகுலன்

From Tamil Wiki
Revision as of 13:46, 2 May 2022 by Navingssv (talk | contribs)
Nagulan3.jpg

நகுலன் (21 ஆகஸ்ட் 1921 - 17 மே 2007) நவீன தமிழிலக்கிய எழுத்தாளர். ஆங்கிலத்திலும், தமிழிலும் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் எழுதினார். ஆங்கில படைப்புகளை டி. கே. துரைசாமி என்ற இயற்பெயரிலும், தமிழ் படைப்புகளை நகுலன் என்ற புனைப்பெயரிலும் எழுதினார். மரபு தமிழ் இலக்கியத்திலும், ஆங்கில இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் தொகுத்த 'குருஷேத்திரம்' இலக்கியத் தொகுப்பு, தமிழில் முக்கியமான முயற்சியாகும்.

பிறப்பு, கல்வி

Nagulan2.jpg

நகுலன் (டி.கே. துரைசாமி) 21 ஆகஸ்ட் 1921 அன்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் இருந்து தன் பதினான்கு வயதில் திருவனந்தபுரத்திற்கு குடிபெயர்ந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் முதுகலைப் பட்டம் பயின்றார். கேரளா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பயின்றார். ஆங்கில எழுத்தாளரான வெர்ஜீனியா வூல்ப் பற்றி ஆய்வு செய்து முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

Nagulan1.jpg

நகுலனின் வீடு திருவனந்தபுரத்தில் உள்ள கோல்ஃப் லிங்க் கௌடியர் என்னும் இடத்தில் உள்ளது. திருவனந்தபுரம் மார் இவனீயோஸ் கல்லூரியில் நாற்பது வருடம் ஆங்கில பேராசியராகப் பணியாற்றினார். ஓய்வு பெற்ற பின் திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டிலேயே எழுதும் பணியை முழுநேரமாக தொடர்ந்தார். நகுலன் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. நகுலன் புகைப்படம் வரைவதில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

Guruchethram.jpg
புனைவிலக்கியங்கள்

1960 இல் இருந்து தீவிரமாக எழுதத் தொடங்கிய நகுலன் சி.சு. செல்லப்பா நடத்தி வந்த “எழுத்து” இதழில் தனது நாற்பது வயதில் எழுதத் தொடங்கினார். எஸ். நாயர் என்ற புனைப் பெயரிலும் சில கதைகள் மற்றும் கவிதைகள் எழுதினார். அவரது நண்பர் க. நா. சுப்ரமணியம் நகுலனுக்கு இலக்கிய பரிட்சியம் ஏற்படக் காராணமாக அமைந்தார்.

1973 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் “வெட்ஸ் பார் தி விண்ட்” என்னும் நாவலை எழுதினார். இவரது இராஜா வெம்பலா என்னும் ஆங்கில கவிதை நீள்கவிதை வடிவைச் சார்ந்தது. “பிதேஸ் நந்தி” என்னும் வார இதழில் இவரது சிறுகதைகள் பல வெளிவந்துள்ளன. 1968-ல் நகுலன் ஆசிரியராக இருந்து கொண்டுவந்த ‘குருக்ஷேத்திரம் இலக்கியத் தொகுப்பு’ தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில் முக்கியமான முயற்சியாகும்.

ஆங்கிலத்தில் ஆறு கவிதைத் தொகுப்பு, ஒரு நாவலும் எழுதியவர், தமிழில் ஒன்பது நாவல்களும் ஐந்து கவிதைத் தொகுப்பு எழுதியுள்ளார்.

மொழிபெயர்ப்பு

ஜேம்ஸ் ஜாய்சி, டி. எஸ். எலியட், கே. ஐயப்பன் பனிகர் ஆகியோரது படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்தார். சுப்பிரமணிய பாரதி பற்றி இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த “லிட்டில் ஸ்பேரோ” என்ற புத்தகம் இவரது மொழிபெயர்ப்பில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

இலக்கிய இடம்

Nagulan5.jpg
Vaaku.jpg

எழுத்தாளர் ஜெயமோகன் நகுலனின் எழுத்தை இலக்கியத்தின் அடிக்குறிப்பு எனக் குறிப்பிடுகிறார். நகுலன் தன் புனைவில் மூலபுனைவுகளை உருவாக்கவில்லை. ஆனால் அந்த மைய இலக்கிய ஓட்டத்தின் விமர்சனக்குறிப்பாக அமைவது நகுலனின் படைப்புகள். ”அதற்கு காரணம் நகுலனுக்கு அமைந்த வாழ்க்கை அனுபவம் என்பது வாசிப்பனுபவமே. நகுலன் தன் எழுத்தின் மூலம் அந்த வாசிப்பனுபவத்திற்கு எதிர்வினையாற்றுகிறார்” என்கிறார் ஜெயமோகன்.

தன் இலக்கிய முன்னோடிகள் விமர்சன நூலில் ஜெயமோகன் நகுலனின் படைப்புலகம் பற்றி, “நகுலனின் மிகச்சிறந்த பங்களிப்பு அவர் தமிழிலக்கிய மரபுக்கு நவீனத்துவம் சார்ந்த அடிக்குறிப்பாக அமைந்தமையில் தான் உள்ளது. நகுலனின் பங்களிப்பு என்பது அவரது தனிமையும் பிறழ்வும் மரபின் ஒரு நுனியில் தன்னைப் பிணைத்துக் கொண்டு நிகழ்த்தப்படுகின்றன. அதனூடாக அவரது மொழிப் பதிவுகள் எல்லாமே மரபுக்கான அடிக்குறிப்புகளாக அமைகின்றன. அந்த அடிக்குறிப்புத் தன்மையே அவரது முதல் பங்களிப்பாகும்” எனக் குறிப்பிடுகிறார்.

நகுலனின் வாசிப்பனுபவம் அவர் புனைவெழுத்தை அமைத்ததுப் பற்றிச் சொல்லும் ஜெயமோகன், “நாம் சாதாரணமாகப் படித்தறிந்தது, அனுபவித்தறிந்தது என்று பிரித்துக் கொள்ளும் கோடு நகுலனின் படைப்புகளில் இல்லை. அதாவது அவரது வாழ்வனுபவங்கள் பல புத்தகங்கள் மூலம் அடையப் பெற்றவையே. உண்மையான அனுபவங்களைக்கூட அவரது மனம் புத்தக வாசிப்புடன் கலந்துகொள்கிறது. நகுலனின் எல்லாப் படைப்புகளிலும் மேற்கோள்கள் வருகின்றன. சில சமயம் பெயர்கள் மட்டும். சில சமயம் ஒரு நினைவு ‘பாத்லேர் கூறியது அவனுக்கு நினைவு வந்தது’ (என்ன என்று கூறப்படுவதில்லை) நகுலன் நூல்களைப் படிக்கும் போது ஏற்படும் இடர்களில் இது முக்கியமானது. அப்படைப்பு எந்த மூல நூல்களுக்கு அடிக்குறிப்பாக அமைகிறது என்ற புரிதல் இல்லாமல் அவற்றை நாம் முழுக்க உள்வாங்க முடியாது.” என்கிறார்.

மரணம்

மே 17, 2007 அன்று திருவணந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் 86 வயதில் இயற்கை எய்தினார்.

விருதுகள்

  • 1983 ஆம் ஆண்டு கவிதைகளுக்காக ஆசான் விருது
  • விளக்கு விருது

நூல்கள்

புனைவு நூல்கள்
  • நீலக்கல்(1965)
  • நினைவுப்பாதை(1972)
  • நாய்கள்(1976)
  • நவீன டைரீ(1978)
  • ஐந்து கவிதைகள்(1981)
  • கோட் ஸ்டான்ட் கவிதைகள்(1981)
  • இவர்கள்(1983)
  • குறுதி(1987)
  • கிராமம்(1991)
  • இரு நீண்ட கவிதைகள்(1991)
  • வாக்குமூலம்(1992)
  • நகுலன் கதைகள்(1998)
  • கண்ணாடியாகும் கண்கள்(2006).
கவிதைத் தொகுப்பு
  • கோட் ஸ்டான்ட் கவிதைகள் (1981)
  • சுருதி (1987)
  • மூன்று,ஐந்து (1987)
  • இரு நீண்ட கவிதைகள் (1991)
  • நகுலன் கவிதைகள் (2001)
ஆங்கில நூல்கள்
  • Words to the listening air (1968)
  • Poems by nakulan (1981)
  • Non being (1986)
கட்டுரை நூல்கள்
  • நகுலன் கட்டுரைகள்(2002)
பிற படைப்புகள்
  • குருஷேத்திரம்(1968)

புகைப்படத் தொகுப்பு

புகைப்படக் கலைஞர் ஆர்.ஆர்.சீனிவாசன் நகுலனின் இறுதிக் காலத்தில் கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களை எடுத்து அவரது கவிதைகளோடு ‘கண்ணாடியாகும் கண்கள்’ என்ற தொகுப்பை வெளியிட்டார்.

வெளி இணைப்புகள்