பின்தொடரும் நிழலின் குரல் (நாவல்)
பின்தொடரும் நிழலின் குரல் (1999) அரசியல் நாவல். இதனை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். கம்யூனிச லட்சியவாதம் புரட்சி என்ற பெயரில் கண்மூடித்தனமாகச் செயல்பட்டு எண்ணிலடங்கா உயிர்களைப் பலிவாங்கியது. கம்யூனிச அரசு உருவாக்கப்பட்டது. தன் சித்தாந்தத்தின் அடிப்படை வலுவின்மையால் அந்த அரசு நிலைபேறு அடையாமல் தோற்றது. சோவியத் யூனியன் சிதறியது. மக்கள் கம்யூனிசத்தின் மீது நம்பிக்கையிழந்தனர். கம்யூனிச சித்தாந்தத்தின் பின்னால் அணிவகுத்து உயிரிழந்த, படுகொலைசெய்யப்பட்ட எண்ணற்றோரின் சார்பாக நின்று நியாயம் கேட்கும் வகையில் இந்த நாவல் அமைந்துள்ளது. இது 12 அத்யாயங்களையும் அவற்றுக்குள் 56 உட்பிரிவு அத்தியாயங்களையும் கொண்டு மொத்தம் 723 பக்கங்களை உடையது. இந்த நாவலின் கட்டமைப்பு உரையாடல்களின் தொகுப்பாகவும் கட்டுரைகள், கதைகள், கடிதங்கள், நாடகங்கள், குறிப்புகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகவும் உள்ளது. தமிழில் எழுதப்பட்ட முக்கியமான அரசியல் நாவலாக இது கருதப்படுகிறது.
பதிப்பு
அச்சுப் பதிப்பு
தமிழினி பதிப்பகம் பின்தொடரும் நிழலின் குரல் நாவலை நவம்பர் 1999-ல் அச்சுப்பதிப்பாக வெளியிட்டது. பின்னர் மறுபதிப்பாக 2015-ல் வெளியிட்டது. விஷ்ணுபுரம் பதிப்பகம் இந்த நாவலை 2022 -ல் மீண்டும் பதிப்பித்தது.
இணையப் பதிப்பு
பின்தொடரும் நிழலின் குரல் நாவல் ஆகஸ்ட் 8, 2021-ல் இணையப் பதிப்பாக வெளிவந்தது.
ஆசிரியர்
பின்தொடரும் நிழலின் குரல் நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர். உலகின் மிகப் பெரிய நாவலான வெண்முரசினை எழுதியவர்.. நவீனத் தமிழ் இலக்கியத்தில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி ஆகியோரின் வரிசையில் வைத்துச் சிறப்பிக்கப்படுபவர். இவரின் எழுத்துக்களத்தின் முதன்மைக் கருக்களாக ஆன்மிகத் தேடலும் அற உசாவலும் உள்ளன.
கதைச்சுருக்கம்
அருணாச்சலம் ரப்பர் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் துணைத்தலைவர். கே.கே. மாதவன் நாயர் அந்தச் சங்கத்தின் தலைவர். கட்சி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதால் மாதவன் நாயரைப் புறக்கணிக்கிறது. அருணாச்சலம் சங்கத்தின் தலைவராகிறார். அருணாச்சலத்துக்கு வீரபத்ரபிள்ளை எழுதிய கதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குறிப்புகள், கவிதைகள் போன்றன கிடைக்கின்றன. அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் என்பது மட்டுமின்றி அவர் கட்சி வரலாற்றிலிருந்தே அழிக்கப்பட்டவர் என்பது அருணாச்சலத்துக்குத் தெரியவருகிறது.
ஏன் கட்சி அவரை நீக்கியது எனக் காரணம் தேடுகிறார் அருணாச்சலம். அப்போது கம்யூனிஸ வரலாற்றில் புகாரின் என்பவரும் இதுபோலவே கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் கட்சி வரலாற்றிலிருந்தே அழிக்கப்பட்டதும் குறித்து அறிகிறார். அவரைப் பற்றிய மிகுதியாகச் சிந்தித்தமையும் அவரை மீண்டும் கட்சி வரலாற்றின் மேடைக்குக் கொண்டுவர வீரபத்ரபிள்ளை முயன்றமையுமே வீரபத்ரபிள்ளையைக் கட்சி நீக்கியது என்றும் கட்சி வரலாற்றிலிருந்து அழித்தது என்பதையும் புரிந்துகொள்கிறார்.
அருணாச்சலம் வீரபத்ரபிள்ளையைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கிறார். அவரைப் பற்றிக் கட்டுரையை எழுதிய அவரை மீண்டும் கட்சி வரலாற்றின் மேடைக்குக் கொண்டுவர நினைக்கிறார். அதனால் அவரையும் கட்சி புறக்கணிக்கிறது. கதிர் சங்கத் தலைவராகிறார். அருணாச்சலத்துக்கு மனநிலை பிறழ்கிறது. ஒருமாதகாலம் மருத்துவ சிகிச்சை பெற்று, திரும்புகிறார். தான் பாதுகாத்துவந்த வீரபத்ரபிள்ளையின் கையெழுத்துப் பிரதிகளையும் புத்தகங்களையும் எழுத்தாளர் ஜெயமோகனிடம் ஒப்படைத்து பின்தொடரும் நிழலின் குரல் என்ற தலைப்பில் நாவலாக எழுதுமாறு கூறுகிறார். புகாரின், வீரபத்ரபிள்ளை வரிசையில் அருணாச்சலமும் இணைந்துகொள்கிறார்.
புகாரினின் நிழல் வீரபத்ரபிள்ளையும் வீரபத்ரபிள்ளையின் நிழல் அருணாச்சலத்தையும் அருணாச்சலத்தின் நிழல் ஜெயமோகனையும் தொடர்கின்றன. மூன்றும் வெவ்வேறு காலக்கட்டங்கள். ஆனால், நிழலின் தொடர்ச்சி அறுபடவேயில்லை. தீவிர இடதுசாரியாகவும் களப்பணியாளராகவும் செயல்பட்டு சங்கத்தை வளர்த்தெடுத்த கே.கே. மாதவன் நாயர் இறுதியில் வைணவத்தை ஏற்பதும் அவருக்கு வலதுகையாக இருந்த அருணாச்சலம் இறுதியில் சைவத்தில் சரணடைவதும் இந்த நாவலின் உச்சங்கள். மனிதனின் நிரந்தர மகிழ்ச்சி அகவிடுதலையில் உள்ளது என்பதைக் குறிப்புணர்த்துகிறது.
கதைமாந்தர்கள்
முதன்மைக் கதைமாந்தர்கள்
- அருணாச்சலம் - ரப்பர் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர்.
- வீரபத்ரபிள்ளை - சிந்தனையாளர், பாஸ்கரனின் தந்தை.
துணைமைக் கதைமாந்தர்கள்
- நாகம்மை - அருணாச்சலத்தின் மனைவி
- கௌரி - அருணாச்சலத்தின் மகள்
- கெ.கெ. மாதவன் நாயர் - ரப்பர் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர்.
- நாராயணன் - அருணாச்சலத்துக்கு வலதுகரமாக இருந்தவர்
- கோலப்பன் - சங்க உறுப்பினர்
- பாஸ்கரன் - வீரபத்ரபிள்ளையின் மகன்
- இசக்கியம்மை - வீரபத்ரபிள்ளையின் மனைவி
- மாசிலாமணி - காலத்துக்கு ஏற்ப கட்சியின் நிலைப்பாட்டை மாற்றிய கட்சியின் முக்கியமான தலைவர்
- தீர்த்தமலை - கட்சியின் மூத்த உறுப்பினர்
- கதிர் - ரப்பர் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் புதிய தலைவர்.
- ரவீந்திரன் - தேர்ந்த அறிவாளி
- அய்யப்பன் பிள்ளை - சமையற்காரர், கெ.கெ. மாதவன் நாயரோடு இருந்தவர்.
- ஆறுமுகப்பிள்ளை
- எஸ்.எம். ராமசாமி - கட்சியின் மீது நம்பிக்கை இழந்தவர், மூத்த எழுத்தாளர்.
- ஜெயமோகன் - எழுத்தாளர்
- கே. என். ஜோணி - நக்சல் சார்பாளர், கட்டுரையாளர்.
- ஆர். நீலகண்ட பிள்ளை
- நம்பிராஜன்
- எசிலி - கெ.கே. மாதவன் நாயரின் துணைவி
- ஆஸ்டின் - கெ.கே. மாதவன் நாயரின் மகன்
- ராமசுந்தரம்
- கெ. ஆர். எஸ்.
- சாமிக்கண்ணு - உதவியாளர்
- பாலன் - உதவியாளர்
- தோழர் கந்தசாமி (ரிஷி) - கட்சியின் முக்கியமான பொறுப்பில் இருப்பவர், மூத்தவர்
- கரியமால் - மூன்றாந்தரக் கவிஞர்
- செம்புலன் - மூன்றாந்தர எழுத்தாளர்
நிழற்கதைமாந்தர்கள்
- நிகலாய் இவானோவிச் புகாரின்
- அன்னா மிகாய்லோவ்னா லாறினா
- ஜோசப் விசாரி யோவிச் ஸ்டாலின்
- லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாய்
- இயேசு கிறிஸ்து
பின்புலம்
பின்தொடரும் நிழலின் குரல் நாவல் சோவித் யூனியனின் சிதைவுக்குக்குரிய அடிப்படைக் காரணத்தையும் கம்யூனிச சித்தாந்தம் கருத்தியல் அடிப்படையில் கொண்டுள்ள பலவீனத்தையும் அதனை நடைமுறைப்படுத்தியதில் அதன் முன்னோடிகள் மேற்கொண்ட பிழையான பாதைகளையும் தொழிற்புரட்சியின் பின்விளைவுகளையும் விரிவாக ஆய்வுசெய்கிறது.
இலக்கிய மதிப்பீடு
தமிழில் எழுதப்பட்ட தீவிர அரசியல் சார்ந்த படைப்பு என்பதால் மிகமுக்கியமான படைப்பாகிறது. ஓர் அரசியல் சித்தாந்தம் உலகின் ஒரு பகுதியை ஆட்டிப்படைத்து, எண்ணற்ற உயிர்ப்பலியையும் பேரிழப்பையும் ஏற்படுத்தியதை எதிர்த்துக் கேள்வி கேட்கும் படைப்பு என்ற வகையில் இந்த நாவல் சமுதாய முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஒரு சித்தாந்தத்தின் பலத்தையும் பலவீனத்தையும் அப்பட்டமாக வெளிப்படுத்தும் படைப்பு என்ற முறையில் இந்த நாவல் ஓர் ஆவணமாகும் தகுதியைப் பெறுகிறது. அறிவியக்கம் தோற்கும் இடத்தையும் ஆன்மத் தேடல் தொடங்கும் இடத்தையும் மிகச் சரியாக வகுத்த படைப்பு என்ற வகையில் இந்த நாவல் அறிவார்ந்த தேடலாக நிலைகொள்கிறது.
இலக்கியமும் அரசியலும் சமுதாயத்துக்காகத்தான். இவை இரண்டும் சமுதாயத்தையே தன்னுள் பிரதிபலிக்கின்றன. தனிமனிதனையும் சமுதாயத்தையும் மேம்படுத்தவே இவை போராடுகின்றன. இந்த நாவல் இலக்கியத்துக்கும் அரசியலுக்குமான பாலமாக அமைந்துள்ளது. இலக்கியமும் அரசியலும் முயங்கும் படைப்பாக இந்த நாவல் உள்ளது.
தமிழில் ‘ஜே. ஜே. சில குறிப்புகள்’ நாவலுக்குப் பின்னர் கட்டமைப்பு சார்ந்த பெரும் பாய்ச்சல் இந்த நாவலில் நிகழ்ந்துள்ளது. உரையாடல்களின் தொகுப்பாகவும் கட்டுரைகள், கதைகள், கடிதங்கள், நாடகங்கள், குறிப்புகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகவும் இந்த நாவல் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த நாவல் தமிழ் இலக்கியத்துக்குப் புதியதொரு வகைமாதிரியாக அமைந்துள்ளது.
உசாத்துணை
இணைப்புகள்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.