first review completed

டி.செல்வராஜ்

From Tamil Wiki
Revision as of 11:08, 19 April 2022 by Logamadevi (talk | contribs)
டி.செல்வராஜ்
டி.செல்வராஜ் சாகித்ய அக்காதமி விருது பெறுகிறார்

டி.செல்வராஜ் (ஜனவரி 14 - 1938 - டிசம்பர் 20, 2019) தமிழ் எழுத்தாளர். இடதுசாரிப் பார்வையுடன் எழுதியவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர். மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

டி.செல்வராஜ் திருநெல்வேலி மாவட்டம் தென்கலம் கிராமத்தில் டேனியல் - ஞானம்மாள் தம்பதியினருக்கு ஜனவரி 14, 1938-ல் பிறந்தார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த டி.செல்வராஜின் தந்தை தேவிகுளம், மூணாறு தேயிலைத் தோட்டங்களில் கங்காணியாகப் பணியாற்றினார். மூணாறு, தேவிகுளம் தேயிலைத்தோட்டங்களில் அமைந்த திருவிதாங்கூர் கொச்சி அரசுபள்ளிகளில் ஆரம்பக் கல்வி பயின்றார். நெல்லை ம.தி.தா.இந்துக் கல்லூரியில் (1959) பி.ஏ. பொருளாதாரத்தில் பட்டம் பெற்றபின் சென்னைச் சட்டக்கல்லூரியில் (1962) இளநிலை சட்டம் பயின்று பட்டம் பெற்றார்.

டி.செல்வராஜ்

தனிவாழ்க்கை

டி.செல்வராஜின் மனைவி பெயர் பாரதபுத்ரி. சித்தாத்தன் பிரபு, சார்வாகன் பிரபு, வேதஞானலட்சுமி ஆகியோர் பிள்ளைகள். டி.செல்வராஜ் திண்டுக்கல்லில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை

டி.செல்வராஜ் திருநெல்வேலி இந்துக்கல்லூரியில் பயிலும்போது தி. க. சிவசங்கரன்,தொ.மு.சி. ரகுநாதன், பேராசிரியர் நா. வானமாமலை போன்ற இலக்கியவாதிகளுடன் தொடர்பில் இருந்தார். அரசியல்நடவடிக்கைகளில் பங்கு கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் வார இதழான ‘ஜனசக்தி’யிலும் இலக்கிய இதழான ‘தாமரை’யிலும் பகுதி நேர ஊழியராகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

நெல்லை மாவட்டத்தில் நடந்த முதல் ஆசிரியர்சங்க போராட்டத்தை கருவாகக் கொண்டு எழுதப்பட்ட டி.செல்வராஜின் முதல் கதை ஜனசக்தி இதழில் 1959-ல் வெளியாகியது. தொ.மு.சி. ரகுநாதன் வெளியிட்டு வந்த ‘சாந்தி’ இலக்கிய இதழில் அவருடைய தொடக்ககாலப் படைப்புகள் வெளியாகின.‘ஜனசக்தி’ வார மலர்களிலும் அவரது கதைகள் வெளியாகின.செல்வராஜின் முதல் சிறுகதைத் தொகுப்பு நோன்பு 1966-ஆம் ஆண்டு வெளியானது.

டி.செல்வராஜ் 1964-ல் தன் 26-வது வயதில் தன் முதல் நாவலான ’மலரும் சருகும்’ ஐ எழுதினார். நெல்லை வட்டாரத்தின் தாழ்த்தப்பட்ட மக்களின் விவசாய வாழ்க்கையையும்,அன்று அம்மக்கள் நெல்லை கூலியாக பெறுவதற்காக நடத்திய ‘முத்திரை மரக்கால்’ போராட்டத்தையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வையும் போராட்டங்களையும் மையமாகக் கொண்ட தேநீர் நாவல், திண்டுக்கல் வட்டார தோல் தொழிலாளர்கள் பற்றிய தோல் ஆகியவை குறிப்பிடத்தக்க நாவல்கள்.

சாமி.சிதம்பரனார், ப.ஜீவானந்தம் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை நூல்களாக எழுதியுள்ளார். இவை சாகித்திய அகாதெமியின் வெளியீடுகளாக வெளிவந்துள்ளன. பாட்டு முடியும் முன்னே, யுக சங்கமம் போன்ற நாடகங்களை எழுதினார்.‘பாட்டு முடியுமுன்னே..’ நாடகத்துக்குப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் எழுதினார்.திரைப்பட நடிகர் டி.கே.பாலச்சந்திரன் தன்னுடைய மக்கள் நாடக மன்றத்தின் மூலம் அந்நாடகத்தை பல ஊர்களில் நடித்தார்.

அமைப்புப்பணிகள்

டி.செல்வராஜ் ப.ஜீவானந்தம் தொடங்கிய தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றம் அமைப்பில் தீவிரமாகப் பணியாற்றினார். 1975-ல் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்) ஆதரவாளர்களான எழுத்தாளர்கள் 32 பேர்கூடி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்னும் அமைப்பைத் தொடங்கியபோது அதில் கே.முத்தையா , கு.சின்னப்ப பாரதி ஆகியோருடன் முதன்மைப் பங்கு வகித்தார்.

விருதுகள்

  • தோல் நாவலுக்காக 2012-ஆம் ஆண்டு தமிழக அரசு விருது

மறைவு

டி.செல்வராஜ் டிசம்பர் 20, 2019-ல் திண்டுக்கலில் மறைந்தார்.

இலக்கிய இடம்

பாட்டாளி மக்களின், குறிப்பாக, பள்ளர் சமூகத்தைச் சார்ந்த விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கையினைத் திறம்படத் தமது கதைகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார்’ என்று செக் நாட்டுத் தமிழறிஞர் கமில்சுவலபில் தனது ‘தமிழிலக்கிய வரலாறு’ நூலில் குறிப்பிட்டுள்ளார் (1973). தமிழில் சோஷலிச யதார்த்தவாத அழகியலின் படி எழுதப்பட்ட முதல் நாவல் ரகுநாதனின் பஞ்சும் பசியும். அடுத்த நாவல் அதேபாணியில் அமைந்த டி.செல்வராஜின் மலரும் சருகும் கட்சியின் அரசியல்செயல்திட்டத்தின் அடிப்படையில் சமூகயதார்த்தத்தை மாற்றிப்புனைந்து, மாதிரிக் கதாபாத்திரங்கள் வழியாக ஆசிரியர் எண்ணும் அரசியலை முன்வைக்கும் எழுத்துக்கள் டி.செல்வராஜ் எழுதியவை.

நூல்கள்

சிறுகதை
  • நோன்பு (1960)
  • டி.செல்வராஜ் கதைகள் (1994)
  • நிழல் யுத்தம் (1995)
நாடகங்கள்
  • யுகசங்கமம் (1968)
  • பாட்டு முடியும் முன்பே (1969)
நாவல்கள்
  • மலரும் சருகும் (1967)
  • தேநீர் (1976)
  • அக்கினிகுண்டம் (1980)
  • மூலதனம் (1982)
  • தோல்(2010)
  • பொய்க்கால் குதிரை (2011)
வாழ்க்கை வரலாறு
  • சாமி சிதம்பரனார்
  • ப.ஜீவானந்தம்

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.