second review completed

ஐயாதி சிறுவெண்தேரையார்

From Tamil Wiki
Revision as of 08:10, 3 June 2024 by Tamizhkalai (talk | contribs)

ஐயாதி சிறுவெண்தேரையார் (ஐயாதி சிறுவெண்டேரையார்) சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் எழுதிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான புறநானூற்றில் உள்ளது. நிலையாமை குறித்த பாடலாக இது அமைந்துள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

ஐயாதிச் சிறு வெண்டேரையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். தேரையார் என்பது பெயர். ஐயாதி என்ற ஊரில் பிறந்தார். ஐயாதி என்பது இடைக்காலத்தில் 'ஐயாறு' என வழங்கியிருக்கலாம் என தமிழறிஞர்கள் கருதினர். 'சிறுவெண்' என்பது குணப்பெயராக இருக்கலாம். தேரையார் என்பது சங்க காலத்தில் அதிகம் புழங்கி வந்த பெயர்களுள் ஒன்று.

இலக்கிய வாழ்க்கை

ஐயாதி சிறுவெண்தேரையார் பாடிய பாடல் புறநானூற்றில் 363-வது பாடலாக உள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • வேந்தரின் போர் வேட்கை குறித்தும், நிலையாமை கூறி அறம் வலியுறுத்தல் குறித்தும் பாடப்பட்டது.
  • கரிய கடல் சூழ்ந்த பெரிய இடத்தையுடைய உலகின் நடுவே, உடைமரத்தின் இலை அளவுகூட இடத்தையும் பிறர்க்கு இல்லாமல் தாமே ஆண்டு பாதுகாத்தவர்களின் எண்ணிக்கை, கடலின் அலைகள் கொழித்தொதுக்கும் மணலின் எண்ணிக்கையைவிட அதிகம். அத்தகைய அரசர்கள் அனைவரும் தம் நாட்டைப் பிறர் கொள்ள சுடுகாட்டைத் தங்கள் இடமாகக் கொண்டு இறந்தனர்.
  • அழியாத உடம்போடு என்றும் உயிரோடு இருந்தவர் யாரும் இல்லை. சாதல் என்பது உண்மை; அது பொய்யன்று. கள்ளி பரவிய முட்செடிகள் உள்ள சுடுகாட்டின் அகன்ற வெளியிடத்தில், உப்பில்லாமல் வேகவைத்த சோற்றை, பிணம் சுடும் புலையன் பிணத்தைத் திரும்பிப் பார்க்காமல், நிலத்தில் வைத்துப் படைத்த வேண்டாத உணவைப் பெற்றுக் கொண்டு, உண்ணும் கொடிய நாள் வருவதற்கு முன்பே, கடல் சூழ்ந்த இவ்வுலகத்தைத் துறந்து நீ கருதியதைச் செய்க.
  • பண்டைய சடங்குகள்: சுடுகாட்டில் ஈமத்தில் இடுமுன், புலையன் உப்பில்லாச் சோறிட்டு நிலத்தில் வைத்துப் படைத்தலும் அதனை அவன் கையிலேந்திப் படைக்குங்கால் பின்புறம் பாராமல் படைக்கும் முறைமையும் ஈமத்தில் பண்டையோர் செய்த சடங்குகள். என்று ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை குறிப்பிட்டார்.

பாடல் நடை

இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடுதிரை மணலினும் பலரே; சுடுபிணக்
காடுபதி யாகப் போகித் தத்தம்

நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே;
அதனால் நீயும் கேண்மதி அத்தை; வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை;
மடங்கல் உண்மை மாயமோ அன்றே;
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு

வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்
உப்பிலாஅ அவிப்புழுக்கல்
கைக்கொண்டு பிறக்கு நோக்காது
இழிபிறப்பினோன் ஈயப்பெற்று
நிலங்கல னாக விலங்குபலி மிசையும்

இன்னா வைகல் வாரா முன்னே,
செய்ந்நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே.

உசாத்துணை

  • சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 4: புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்
  • புறநானூறு 363: puram400



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.