under review

வா.சு. கோமதிசங்கர ஐயர்

From Tamil Wiki
Revision as of 11:01, 17 January 2024 by Logamadevi (talk | contribs)
வா.சு. கோமதிசங்கர ஐயர் (படம் நன்றி: சிவகௌரி தளம்)

வா.சு. கோமதிசங்கர ஐயர் (வாசுதேவநல்லூர் சுப்பையா பாகவதர் கோமதிசங்கர ஐயர்; வா.சு. கோமதி சங்கர ஐயர்; வா.சு. கோமதி சங்கரைய்யர்; வா.சு. கோமதி சங்கரய்யர்) (ஆகஸ்ட் 23, 1908 – பிப்ரவரி 7, 1988) வீணை இசைக் கலைஞர்; பண்ணாராய்ச்சியாளர். தமிழிசை ஆய்வாளர். இசைப் பேரறிஞர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றினார். இசைத்துறை சார்ந்து பல ஆய்வு நூல்களை எழுதினார். வா.சு. கோமதிசங்கர ஐயர் எழுதிய, ‘இசைத்துறை இலக்கண விளக்கம்’ நூல், குறிப்பித்தகுந்த ஒன்று.

பிறப்பு, கல்வி

வா.சு. கோமதிசங்கர ஐயர், வாசுதேவநல்லூரில், இசையாசிரியர் பல்லவி சுப்பையா பாகவதர் - முத்துலட்சுமி அம்மாள் இணையருக்கு, ஆகஸ்ட் 23, 1908 அன்று மூத்த மகனாகப் பிறந்தார். பல்லவி சுப்பையா பாகவதர், இசைக் கலைஞர் மகா. வைத்தியநாத சிவனின் முதன்மைச் சீடர். கோமதிசங்கர ஐயர், ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார். சம்ஸ்கிருதம், தெலுங்கு, கிரந்தம் ஆகியனவற்றைச் சுயமாகவும், தந்தை மூலமும் கற்றார். தந்தையிடம் இசை கற்றார். காரைக்குடி வீணை சாம்பசிவம் சகோதரர்களிடம் வீணை இசை கற்றார். இசைத்துறையில் ‘பண்டிட்’ பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

வா.சு. கோமதிசங்கர ஐயர் மணமானவர். மனைவி: கோமதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள்: வா.கோ.சுப்பிரமணியன்; வா.கோ. கிருஷ்ணமூர்த்தி. இரண்டு மகள்கள்.

இசைக் கலைஞர் வா.சு. கோமதிசங்கர ஐயர் (படம் நன்றி: முனைவர் சிவகௌரி: சிவகௌரி இணையதளம்)

இசை வாழ்க்கை

வா.சு. கோமதிசங்கர ஐயர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் வீணை இசை விரிவுரையாளராகப் பணியாற்றினார். இசைப் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் உயர்ந்தார். 40 ஆண்டுகாலம் பணியாற்றி ஓய்வு பெற்றார். கோமதி சங்கர ஐயர், அகில இந்திய வானொலியில் முதல் தர வீணைக் கலைஞராகச் செயலாற்றினார்.

இசை ஆராய்ச்சிகள்

வா.சு. கோமதிசங்கர ஐயர், வீணை இசை ஆசிரியர் பணியோடு இசை குறித்த ஆய்வுகளையும் மேற்கொண்டார். இசைத்துறையில் பயன்படுத்தப்படும் சம்ஸ்கிருதச் சொற்களுக்கு இணையான பழந்தமிழ்ச் சொற்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டு, ஆய்வு முடிவுகளை இசை மலர்களில் கட்டுரைகளாக எழுதினார்.

தமிழிசை இயக்கம்

கோமதிசங்கர ஐயர் பணியில் சேர்ந்த காலகட்டத்தில் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் தமிழிசை மறுமலர்ச்சிக்கான பணிகளை மேற்கொண்டிருந்தார். கோமதிசங்கர ஐயர், அண்ணாமலைச் செட்டியாரின் தமிழிசை இயக்க வளர்ச்சிப் பணிகளுக்கு உறுணையாக இருந்தார். சென்னை அண்ணாமலை மன்றத்தில் வருடந்தோறும் நடைபெற்று வந்த பண்ணாராய்ச்சி கூட்டத்தில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகள் வாசித்தார். தமிழிசைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இதழ்களில் வெளியான கட்டுரைகளுக்கு மறுப்புக் கட்டுரைகள் எழுதினார்.

தமிழிசைப் பணிகள்

வா.சு. கோமதிசங்கர ஐயர், இசையை பதிவு செய்ய வசதியில்லாத காலத்தில் ஏராளமான பழைய தமிழிசைப்பாடல்கள் சுர தாளக்குறிப்புடன் வெளிவரக் காரணமானார். தமிழிசைப் பாடல்களைத் தேடித் தொகுத்தார். ராக, தாள அமைப்பு, இசையலகுகளுடன் அவை வெளிவரத் துணை நின்றார். அரிய இசை உருப்படியான பிரபந்த வகையினைத் தமிழில் சுர தாள முறையில் வெளியிட்டார். நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ராகம் ஆகிய கன ராகங்களில் கோமதிசங்கர ஐயர் இயற்றிய பிரபந்தங்கள் நூல்களாக வெளிவந்தன. கீதம், வர்ணம் போன்ற உருப்படிகளுடன் திருக்குறளை இயலாகக் கொண்டு 40 திருக்குறள் வர்ணங்களை இயற்றினார்.

வா.சு. கோமதிசங்கர ஐயர் நூல்கள்
நூல் வெளியீடு

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழிசைப் பாடல் 21 தொகுதிகளில், 11 தொகுதிகள், வா.சு. கோமதிசங்கர ஐயரின் மேற்பார்வையில், அவரது ஆசிரியப் பொறுப்பில் வெளியாகின. சுர தாளக் குறிப்புகளை எழுதி அந்நூல்களைச் செம்மையாக்கம் செய்து வெளியிட்டார். குணங்குடி மஸ்தான் சாஹிப்பின் பராபரக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி போன்ற கீர்த்தனைப் பாடல்களை ஸ்வரப்படுத்தினார். நீலகண்டசிவன், வையச்சேரி ராமசாமி சிவன், டி. இலக்குமண பிள்ளை, கோபாலகிருஷ்ண பாரதி, சுத்தானந்த பாரதி, அச்சுததாசர், வேதநாயகம் பிள்ளை, அருணாசலக் கவிராயர் போன்ற தமிழிசைப் புலவர்களின் அரிய பாடல்களைத் தொகுத்து, சுர தாளக் குறிப்புடன் அவை நூல்களாக வெளிவர உதவினார். சுத்தானந்த பாரதியின், பல கீர்த்தனைகளுக்கு தாமே இசையமைத்து சுர தாளக் குறிப்புடன் அவை வெளிவக் காரணமானார்.

தமிழிசைப் பாடல்கள் பலவற்றைத் தேடித் தொகுத்து அவற்றின் உண்மை மெட்டினைக் களப்பணி செய்து கண்டறிந்தார். சுர தாளக் குறிப்பு எழுதி, மதிப்பாய்வு செய்து அவற்றை வெளியிட்டார். பாடலை இயற்றியவரின் சொந்த மெட்டை இசையுலகிற்கு அளித்தார். மூல இசை கிடைக்கப்பெறாத பாடல்களின் மெட்டுக்களை தாமே முயன்று அமைத்தார். புதிய பாடல்கள் பலவற்றை இயற்றினார். தமது சொந்தப் படைப்புகளாக தமிழிசை வடிவங்களும் (வர்ணங்களும்) இசை இலக்கண இயல் நூல்களும் வெளியிட்டார். எட்டு இசையிலக்கணச் செயல் முறை நூல்களை எழுதினார்.

சிலப்பதிகார ஆய்வு

வா.சு. கோமதிசங்கர ஐயரின் தந்தை சிலப்பதிகாரத்தை ஆய்வு செய்து குறிப்புகளாக வைத்திருந்தார். அதனை அடிப்படையாகக் கொண்டு தனது ஆய்வைத் தொடர்ந்தார் கோமதிசங்கர ஐயர். சிலப்பதிகாரம் ஓர் இசை நூல் என்பதைச் சான்றாதாரங்களுடன் விளக்கினார். ‘சிலம்பு’ என்ற அணிகலன் வட்டப்பாலை அமைப்பில் உள்ளதைத் தகுந்த ஆதாரங்களுடன் மெய்ப்பித்தார். ’யாழ்’ என்பது தற்கால வழக்கிலிருக்கும் ’வீணை’யே என்பதைப் பல ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தினார். வடமொழியில் அமைந்திருக்கும் சங்கீத ரத்னாகரம் என்னும் நூல், சிலப்பதிகாரத்தின் வழிவந்த நூல் என்பதை விளக்கினார். தமிழிசைக் கலைச் சொற்களுக்கு விளக்கங்கள் அளித்தார். சிலப்பதிகாரத்தின் துணையோடு இசைத்தமிழுக்கு இலக்கணம் எழுதினார்.

விருதுகள்

  • வா.சு. கோமதிசங்கர ஐயரின் இசைப் பணியைப் பாராட்டி இளவரசனேந்தல் ஜமீன்தார் ‘வைணிக காயக' என்ற பட்டத்தை அளித்தார்.
  • இளவரசனேந்தல் ஜமீன்தார், பாரம்பரியமான, நூறு வருடப் பழைமையான வீணையைப் பரிசாக அளித்துப் பாராட்டினார்.
  • சிருங்கேரி சங்கராச்சாரியார் வழங்கிய மகா வித்வான் விருது - 1974
  • சென்னை சங்கீத நாடக அகாதெமி விருது – 1986
  • தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கிய கலைமாமணி விருது – 1986
  • சங்கீத வித்வத் சபை வழங்கிய சிறந்த சங்கீத வித்வான் விருது
  • கலாசிகாமணி பட்டம்.

மறைவு

வா.சு. கோமதிசங்கர ஐயர், பிப்ரவரி 7, 1988 அன்று, தனது 80 -ஆம் வயதில் காலமானார்.

மதிப்பீடு

வா.சு. கோமதிசங்கர ஐயர், இசைத்துறையின் செயல்முறை மற்றும் அறிமுறை எனும் இரண்டு துறைகளுக்கும் சிறந்த பங்களித்தார். பல்வேறு கச்சேரிகள் செய்தார். பல மாணவர்களுக்கு இசை பயிற்றுவித்தார். அதே சமயம் இசை பற்றிப் பலரும் அறியும் வண்ணம் பல ஆய்வுகளை மேற்கொண்டு, இசை மற்றும் இசை சார்ந்த நூல்களை எழுதினார்.

வா.சு. கோமதிசங்கர ஐயரின் தமிழிசை ஆய்வுகள் படைப்புகள் அனைத்தும் சிறந்த இசைக் கருவூலங்களாக இசை ஆர்வலர்களால் மதிப்பிடப்படுகின்றன. தமிழிசை வளர்ச்சிக்கு அடிப்படையான இசை இலக்கண நூற்கள், செயல் முறை நூற்கள், ஆய்வுக்கட்டுரைகள் பல படைத்த இசைப் பேரறிஞராக வா.சு. கோமதிசங்கர ஐயர் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

அச்சில் வந்த நூல்கள்
  • வர்ணக்கடல் – நான்கு பாகங்கள்
  • யாழ் முரிப்பண்
  • மிருதங்கப் பாடமுறை
  • தமிழ்க் கீத வர்ணங்கள்
  • கானல் வரி - இந்திர விழாவில் இசைத்த யாழ், யாழின் மாண்பு
  • இசைத்தமிழ் இலக்கண விளக்கம்
  • இசையுலகில் மகா வைத்தியாநாத சிவன் – இரண்டு பாகங்கள்
  • இசைக்கலை வல்லுனர்கள்
அச்சில் வராத படைப்புகள்
  • தான வர்ணக்கடல் - ஏழு தொகுதிகள் (420 வர்ணங்கள் அடங்கியது)
  • ஸ்வரஜதிகள் (50)
  • மூவர் தேவாரம் (தேவாரப் பாடல்கள் அவற்றின் பண்கள் மற்றும் ஸ்வரதாளக் குறிப்புகளுடன்)
  • மாணிக்கப்பாட்டு (மாணிக்கவாசகரின் இசை வரலாற்று நாடக நூல்)
  • துரைசாமிக் கவிராயர் (இரண்டு தொகுதிகள்)
  • ராமசாமி சிவன் விடுதிக் கீர்த்தனைகள்
  • ஆனை ஐயாவின் பாடல்கள்
  • நீலகண்ட சிவன் பாடல்கள் – 2 தொகுதிகள்
  • அருணாச்சலக் கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனைகள்
  • வெவ்வேறு வாக்கேயக் காரர்களின் பாடல்கள்
  • தேவாரம், திருப்புகழ், இராமலிங்க வள்ளலார் பாடல்கள் - சுவர தாளக் குறிப்புகள்
  • 103 பண்கள் ஒரு திறனாய்வு
  • சிலம்பு காட்டும் பண்டைத் தமிழிசை
  • இசை உலகில் மகா வைத்திய நாத சிவன் பாகம் 3
  • இசைவானில் பல்லவி சுப்பையா பாகவதர்
  • பெரிய புராணப் பாடல்கள், கீர்த்தனைகள் -சுவர தாளக் குறிப்பு

உசாத்துணை


✅Finalised Page