under review

சைவ சித்தாந்த சாத்திரங்கள்

From Tamil Wiki
Revision as of 23:56, 29 November 2023 by ASN (talk | contribs) (Link Created: Proof Checked:)

சைவத்தின் அடிப்படை உண்மைகளையும் கொள்கைகளையும் விளக்கும் நூல்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன. சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு. இவை மெய்கண்ட சாத்திரங்கள் என்றும், சித்தாந்த சாத்திரங்கள் என்றும் அழைக்கப்படும்.

சைவ சித்தாந்த சாத்திர விளக்கம்

அருளாளர்கள், இறைவனை வாழ்த்தி வணங்கிய பாடல்கள் தோத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன. தோத்திரங்களின் அடியொற்றி எழுந்தவை சாத்திரங்கள்.

சித்தம் + அந்தம் என்பதே சித்தாந்தம். சித்தம் என்பது சிந்தனை அல்லது மனம். அந்தம் என்பது முடிவைக் குறிக்கும். மனதால் சிந்தித்து, பல விதங்களிலும் ஆராய்ந்து கண்டறிந்த உண்மைகளின் முடிவுகளே சித்தாந்தம் எனப்படுகிறது.

சைவ சமயத்தின் தத்துவநூல் சைவ சித்தாந்தம் எனப்படும். தத்துவ நூல்கள் சாத்திரங்கள் எனப் பெயர் பெறும். சைவ சித்தாந்தத்தின் அடிப்படையான பதி, பசு, பாசத்தைச் சித்தாந்த நூல்கள் மிக விரிவாக விளக்குகின்றன.  

சைவ சித்தாந்த சாத்திர நூல்கள்

சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு. அவற்றைக் குறிப்பிடும் வெண்பா:

உந்தி களிறு உயர்போதம் சித்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம் - வந்தவருட்
பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மைநெறி சங்கற்பம் முற்று

இந்தப் பதினான்கு சாத்திரங்களில், மெய்கண்டார் இயற்றிய சிவஞானபோதம் தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது. அதனால், இப்பதினான்கு நூல்களும் பல்வேறு ஆசிரியர்களால் இயற்றப்பட்டிருப்பினும், இவற்றுள் தலைசிறந்த நூலை எழுதிய மெய்கண்டார் பெயரிலேயே முழுச் சாத்திர நூல்களும் மெய்கண்ட சாத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன. உண்மைநெறி விளக்கம் நூலை உமாபதி சிவாசாரியார் எழுதவில்லை என்றும், அதனை எழுதியது சீர்காழிச் சிற்றம்பல நாடிகளின் மாணவரான சீர்காழித் தத்துவநாதர் என்றும், ஒரு கருத்து சில ஆய்வாளர்களால் முன் வைக்கப்படுகிறது)

சைவ சித்தாந்த சாத்திர நூல்களும் ஆசிரியர்களும்

எண் சாத்திரங்கள் எழுதியவர் காலம்
1 திருவுந்தியார் திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் பொ.யு. 13 ஆம் நூற்றாண்டுக்கு முன்
2 திருக்களிற்றுப்படியார் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் பொ.யு. 13 ஆம் நூற்றாண்டுக்கு முன்
3 சிவஞானபோதம் மெய்கண்ட தேவநாயனார் பொ.யு. 13 ஆம் நூற்றாண்டு
4 இருபா இருபஃது அருணந்தி சிவாச்சாரியார் பொ.யு. 13 ஆம் நூற்றாண்டு
5 சிவஞானசித்தியார் அருணந்தி சிவாச்சாரியார் பொ.யு. 13 ஆம் நூற்றாண்டு
6 உண்மைவிளக்கம் திருவதிகை  மனவாசகம் கடந்தார் பொ.யு. 13 ஆம் நூற்றாண்டு
7 சங்கற்பநிராகரணம் உமாபதி சிவாச்சாரியார் பொ.யு. 14 ஆம் நூற்றாண்டு
8 சிவப்பிரகாசம் உமாபதி சிவாச்சாரியார் பொ.யு. 14 ஆம் நூற்றாண்டு
9 திருவருட்பயன் உமாபதி சிவாச்சாரியார் பொ.யு. 14 ஆம் நூற்றாண்டு
10 வினாவெண்பா உமாபதி சிவாச்சாரியார் பொ.யு. 14 ஆம் நூற்றாண்டு
11 போற்றிப் பஃறொடை வெண்பா உமாபதி சிவாச்சாரியார் பொ.யு. 14 ஆம் நூற்றாண்டு
12 கொடிக்கவி உமாபதி சிவாச்சாரியார் பொ.யு. 14 ஆம் நூற்றாண்டு
13 நெஞ்சுவிடுதூது உமாபதி சிவாச்சாரியார் பொ.யு. 14 ஆம் நூற்றாண்டு
14 உண்மைநெறி விளக்கம் உமாபதி சிவாச்சாரியார் பொ.யு. 14 ஆம் நூற்றாண்டு

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.