அனுராதா ரமணன்: Difference between revisions
Logamadevi (talk | contribs) |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
Line 145: | Line 145: | ||
* [https://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-oct18/35945-metoo அனுராதா ரமணன் - ஜெயேந்திரர் சர்ச்சை] | * [https://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-oct18/35945-metoo அனுராதா ரமணன் - ஜெயேந்திரர் சர்ச்சை] | ||
* [http://old.thinnai.com/?p=20412025 அனுராதா ரமணன் ஜெயேந்திரர் சர்ச்சைகள்] | * [http://old.thinnai.com/?p=20412025 அனுராதா ரமணன் ஜெயேந்திரர் சர்ச்சைகள்] | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 05:41, 30 January 2023
அனுராதா ரமணன் (அனுராதா, அனு, வசந்தி ராஜன்) (ஜூன் 29, 1947-மே 16, 2010) எழுத்தாளர். ஓவியர். பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளை எழுதினார். இதழாசிரியராகச் செயல்பட்டார். இவரது படைப்புகளில் சில திரைப்படங்களாக, தொலைக்காட்சித் தொடர்களாக வெளியாகின. குடும்ப நல ஆலோசகராகச் செயல்பட்டார்.
பிறப்பு, கல்வி
அனுராதா ரமணன் தஞ்சாவூரில், ஜூன் 29, 1947-ல், நடராஜன் - சாரதா இணையருக்குப் பிறந்தார். தந்தை மேட்டுர் கெமிகல்ஸில் பொறியாளராகப் பணியாற்றினார். அனுராதா ரமணன் சென்னையில் தாத்தாவின் வீட்டில் வளர்ந்தார். ராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளியில் படித்தார். சென்னை எழும்பூரில் உள்ள ஓவியக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
அனுராதாவுக்கு பதினெட்டு வயதில் ரமணனுடன் திருமணம் நிகழ்ந்தது. பத்தே ஆண்டுகளில் கணவனை இழந்தார். ‘ஸ்பெஷாலிடி பப்ளிகேஷன்ஸ்’ நிறுவனத்தில் பணியாற்றினார். மகள்கள்: சுதா, சுபா.
இதழியல் வாழ்க்கை
அனுராதா ரமணன், Indian Housewife, Grahani aur Grahasti, மங்கையர் மலர் ஆகிய இதழ்களில் பக்க வடிவமைப்பாளராகப் பணியாற்றினார். ‘மங்கை’ இதழின் ஆசிரியர் குழுவில் சில காலம் பணியாற்றினார். ’சுபமங்களா’ இதழில் கோமல் சுவாமிநாதனுக்கு முன் ஆசிரியராகப் பணிபுரிந்தார். ‘வளையோசை’ என்ற இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
அனுராதா ரமணன், கல்கி, தேவன், ஜெயகாந்தன், தி. ஜானகிராமன் ஆகியோரது படைப்புகளால் ஈர்க்கப்பட்டார். மங்கை இதழின் ஆசிரியர் சாரதி, அனுராதா ரமணனை எழுத ஊக்குவித்தார்.
’கனவுமலர்கள் கருகும்போது’ என்னும் முதல் சிறுகதை, நவம்பர் 15, 1977-ல் மங்கை இதழில் வெளியானது. ‘சாம்பவி’ என்ற பெயரில் அக்கதையை எழுதியிருந்தார். அந்தக் கதைக்கான ஓவியத்தை ’அனு’ என்ற பெயரில் வரைந்திருந்தார். அந்தச் சிறுகதைக்குக் கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து ஆனந்த விகடன், இதயம் பேசுகிறது, சாவி, தினமணி கதிர், குங்குமம் போன்ற பல இதழ்களுக்கு எழுதினார். முதல் நாவல் ’மூடிக் கிடக்கிறது நெஞ்சம்'. என்ற தலைப்பில் வெளிவந்தது.
அனுராதா ரமணன் எழுதிய, ‘சிறை’ சிறுகதை, ஆனந்த விகடன் பொன்விழா சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு பெற்றது. தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள், தொடர்கள், கட்டுரைகள் என்று எழுதினார். முன்னணிப் பெண் எழுத்தாளர்களுள் ஒருவரானார். ’வசந்தி ராஜன்’ என்ற புனைபெயரிலும் சில தொடர்களை எழுதினார். இவரது படைப்புகளில் சில கன்னடம் மற்றும் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டன. தினமலர்- வாரமலர் இதழில், இவர் எழுதிய 'அன்புடன் அந்தரங்கம்' பகுதி பலராலும் வரவேற்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கட்டுரைத் தொடர் வெளிவந்தது. குங்குமம் இதழில் டிசம்பர் சீஸன் இசை விமர்சனத்தை எழுதினார்.
சத்தியசாயி பகவானின் பக்தராக இருந்த அனுராதா ரமணன், பாபா மீது ‘பகவான் சத்திய சாயி அந்தாதி’ என்ற நூலை எழுதினார்.
இடையில் சிலகாலம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின் அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் எழுத்துலகில் செயல்பட்டார். குடும்பப் பிரச்சனைகள் பலவற்றுக்குத் தீர்வு காண உதவும் ஆலோசகராகப் பணிபுரிந்தார். தன் வாழ்க்கை அனுபவங்களை, தன் உணர்வுகளை, எண்ணங்களை "மீண்டும் மீண்டும் உயிர்த் தெழலாம்!' என்ற தலைப்பில், மங்கையர் மலரில் தொடராக எழுதினார். இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு மூன்று தொகுதிகளாக வெளியானது.
திரைப்படம் - தொடர்கள்
அனுராதா ரமணனின் ’சிறை’, சிறுகதை அதே பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. ‘கூட்டுப் புழுக்கள்’, ‘ஒரு வீடு இரு வாசல்’, ‘மலரின் பயணம்’ போன்றவை தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் வெளிவந்தன. ’ஆசைக்கிளியே அழகிய ராணி’ என்ற நாவல், ’ஒரு மலரின் பயணம்’ என்ற தலைப்பில் திரைப்படமானது. ‘அர்ச்சனைப் பூக்கள்’, ‘பாசம்’, ‘கனாக்கண்டேன் தோழி’ போன்ற இவரது கதைகள் தொலைகாட்சித் தொடர்களாக வெளியாகின.
ஒலிப் பேழை
பாண்டிச்சேரி அன்னையின் பக்தரான அனுராதா ரமணன், அன்னை மீது ‘அன்பான அன்னைக்கு’ என்ற தலைப்பில் பல பாடல்களை எழுதினார். அவற்றை எம். பாலமுரளி கிருஷ்ணா பாட அது ஆல்பமாக வெளிவந்தது.
பொறுப்புகள்
அனுராதா ரமணன், மத்திய திரைப்படச் சான்றிதழ் குழுவின் ஆலோசனைக் குழு உறுப்பினராகப் பணியாற்றினார்.
ANURADHA CONSULTANCIES என்ற ஆலோசனை மையத்தை நடத்தினார். அதன் மூலம் தம்மை நாடி வரும் பெண்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
விருதுகள்
- இதயம் பேசுகிறது சிறுகதைப் போட்டியில் தங்கப்பதக்கப் பரிசு
- ஆனந்த விகடனில் வெளியான ‘சிறை’ படைப்பிற்காக எம்.ஜி.ஆரிடம் இருந்து தங்கப்பதக்கம்
- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வழங்கிய சிறந்த தேசிய சமூகநல எழுத்தாளருக்கான ராஜீவ் காந்தி விருது
- கமல்ஹாசன் வழங்கிய அன்னை ராஜலட்சுமி இலக்கியப் பரிசு
- எம்.ஜி.ஆர். விருது
- சிறந்த எழுத்தாளர் விருது
- சிறந்த சிறுகதை எழுத்தாளர் விருது
- சிறந்த நாவலாசிரியர் பட்டம்
- முத்தமிழ் கலைமாமணி பட்டம்
- நாவல் ராணி பட்டம்
- கலைவாணி பட்டம்
- நாவல் பேரரசி பட்டம்
சர்ச்சை
காஞ்சி மடப் பீடாதிபதியான ஜெயேந்திரர், தன்னிடம் பாலியல் ரீதியாகப் பேசி, ஆபாசமாக நடந்துகொண்டதாக அனுராதா ரமணன் தெரிவித்த குற்றச்சாட்டுக்கள், மிகுந்த சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தின.
ஆவணம்
’அனுராதாவின் படைப்புகளில் மகளிர் நிலை’ என்ற தலைப்பில் ஆய்வு நூல் ஒன்றை க. கௌரி எழுதியுள்ளார். காவ்யா பதிப்பகம் அதனை வெளியிட்டுள்ளது. இவரது படைப்புகளை ஆராய்ந்து சில மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றனர்.
மறைவு
மே 16, 2010 அன்று அனுராதா ரமணன் காலமானார்.
இலக்கிய இடம்
அனுராதா ரமணன், சமூகத்தின் வாழ்க்கைச் சிக்கல்களை, குறிப்பாக, பெண்களுக்கு சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தனது படைப்புகளில் அதிகம் எழுதினார். இவரது கதைகள் பலவும் குடும்பத்தையும், அதன் அன்றாட நிகழ்வுகளையும் மையமாகக் கொண்டவை. நடுத்தரக் குடும்பத்து மனிதர்களின் எண்ணங்களை, நெருக்கடிகளைப் பிரதிபலிப்பவை. பல படைப்புகள் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை. நிஜ மனிதர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வுகளையே தனது கற்பனை கலந்து படைப்பாக முன் வைத்தார். இவரது பல படைப்புகள் பெண்களுக்கு ஒரு பிடிப்பையும் தன்னம்பிக்கையையும் தருபவையாக அமைந்தன.
சி.ஆர். ராஜம்மா, கோமதி சுப்ரமண்யம், குயிலி ராஜேஸ்வரி, லக்ஷ்மி வரிசையில் நடுத்தர வர்க்கத்துப் பெண்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்திய எழுத்தாளராக அனுராதா ரமணன் மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
- நாளை வருவான் நாயகன்
- நிழல் வாழ்க்கை
- நான் இந்த வாழ்க்கையை வெறுக்கவில்லை
- நீயும் நானும் நினைத்தால்
- நெஞ்சுக்குள் நெருஞ்சி முள்
- நேற்று வரை நந்தவனம்
- ஊமை மனிதர்கள்
- ஒரு கோடி இன்பங்கள்
- ஒரு முற்றுப்புள்ளி கமாவாகிறது
- பேசி ஜெயிக்கலாம் வாங்க
- ரகசிய ராகங்கள்
- அருகில் மிக அருகில்
- தேவதைகள்
- என் இனிய காதலியே
- என்றும் உன் ராணி
- ஏதோ அறியேன் எனது ஆருயிரே
- கனவு கண்டேன்
- காதலிக்க காத்திரு
- கிடைத்ததை விரும்பு
- கோடி பூக்கள்
- கூட்டுக்குள்ளே சில காலம்
- மன்மத வேஷங்கள்
- மறுபடியும் படிக்கலாம்
- மீண்டும் மீண்டும் உயிர்
- மீராவின் காதல்
- மௌனக் கனவு
- முதல் காதல்
- முள்ளோடு ஒரு ரோஜா
- முந்தானை தொட்டில்
- இன்று நீ நாளை நீ என்றும் நீ
- கங்கையில் இருப்பதும் கண்ணீரே
- இதழோரம் வரலாமா?
- இவர் தான் கொஞ்சம் கவனி
- கூட்டுப் புழுக்கள்
- மலரின் பயணம்
- ஒரு வீடு இரு வாசல்
- அர்ச்சனைப் பூக்கள்
- பாசம்
- கனாக் கண்டேன் தோழி
- சிறை
- வாசல் வரை வந்தவள்
- அந்தரத்தில் ஒரு ஊஞ்சல்
- காதோடு ஒரு காதல் கதை
- காணாமல் போன கனவுகள்
- கடைசி வரை காதலி
- காதலால் வளர்ந்தேன்
- காதல் வங்கி
- கதவுகள் மறுபடி திறக்கலாம்
- கனா காணும் கண்கள்
- கண்ணான கண்மணி
- கண்ணா உன்னை மறப்பேனா
- கண்ணே காத்திரு
- கண்ணே காதலி
- கற்கால கனவு
- கற்பூரக் காற்று
- முத்தமிட நேரம் இல்லை
- முத்தமிட்ட சொப்பனங்கள்
- சொந்தமென நீ இருந்தால்
- ஸ்த்ரீ இரத்தினங்கள்
- தேவை ஒரு சிநேகிதி
- உன்னைப் போல் ஒருத்தி
- உறவைத் தேடும் பறவை
- வராலாமா உன்னோடு
- வருவான் நாயகன்
- வேட்டைக்கு மான் இருக்கா?
- நாளைக்கு நேரமில்லை
உசாத்துணை
- அனுராதா ரமணன்: தினமலர் இதழ் கட்டுரை
- அனுராதா ரமணன் நேர்காணல்: இவள் பாரதி
- அனுராதா ரமணன்: தென்றல் இதழ் நேர்காணல்
- அனுராதா ரமணன் பற்றி ஆர்.வி.: சிலிகான் ஷெல்ஃப் தளம்
- அனுராதா ரமணன் நினைவுகள்: ஜெயந்தி சுரேஷ்: குங்குமம் தோழி
- அனுராதா ரமணன்:ரவி பிரகாஷ் நினைவுக் குறிப்புகள்
- அனுராதா ரமணன் - ஜெயேந்திரர் சர்ச்சை
- அனுராதா ரமணன் ஜெயேந்திரர் சர்ச்சைகள்
✅Finalised Page