இராம. லெட்சுமணன்: Difference between revisions
Corrected typo errors; |
No edit summary |
||
| Line 41: | Line 41: | ||
* [https://marinabooks.com/category?pubid=1579-5048-0499-6471&showby=mailist&sortby=pricehigh உமா பதிப்பக நூல்கள், மெரீனா புக்ஸ் தளம்] | * [https://marinabooks.com/category?pubid=1579-5048-0499-6471&showby=mailist&sortby=pricehigh உமா பதிப்பக நூல்கள், மெரீனா புக்ஸ் தளம்] | ||
* தமிழ் வளர்த்த நகரத்தார்கள், முனைவர் கரு. முத்தய்யா, வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு: ஜூலை 2018 | * தமிழ் வளர்த்த நகரத்தார்கள், முனைவர் கரு. முத்தய்யா, வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு: ஜூலை 2018 | ||
{{ | {{Second review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 06:47, 13 July 2026

இராம. லெட்சுமணன் (ராம. லெட்சுமணன்; இராம. லட்சுமணன்; இராம. இலட்சுமணன்; இராமநாதன் செட்டியார் லெட்சுமணன்) (ஜனவரி 12, 1950 - அக்டோபர் 21, 2024) பதிப்பாளர். இதழாளர். சென்னையில் உமா பதிப்பகம் என்ற பிரசுர நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார். 'தையல் கலை' என்ற இதழை வெளியிட்டார். கம்பராமாயணம், மகாபாரதம், அஷ்டப்பிரபந்தம் போன்றவற்றை வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியாரின் உரையுடன் பதிப்பித்தார். கம்பன் கழக விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.
பிறப்பு, கல்வி
இராம. லெட்சுமணன், ஜனவரி 12, 1950 அன்று, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில், இராமநாதன் செட்டியார் - அலமேலு ஆச்சி இணையருக்குப் பிறந்தார். தேவக்கோட்டையில் பள்ளிக் கல்வி கற்றார்.
தனி வாழ்க்கை
இராம. லெட்சுமணன், மன்னார்குடிக்குச் சென்று அச்சகம் ஒன்றில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். மணமானவர். மகன்: லெ.ராமநாதன் (லேனா. ராமநாதன்); மகள்: லெ. உமையாள்.
இதழியல்
இராம. லெட்சுமணன், 1982-ல் சென்னைக்கு வந்தார். 'அனுபவ தையற்கலை' என்ற மாத இதழைத் தொடங்கி நடத்தினார். அதற்கு மிக நல்ல வரவேற்புக் கிடைத்தது.
பதிப்பு
இராம. லெட்சுமணன், 1986-ல், உமா பதிப்பகம் என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கினார். முதல் வெளியீடாகத் தனக்கு ஏற்கெனவே அறிமுகமான தையற்கலை குறித்த நூலை 'அனுபவத் தையற்கலை - சிறுவர், சிறுமியர், பெண்கள் உடை' எனும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார். அதற்கு மகளிர் இடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து சிலப்பதிகாரம், மணிமேகலை, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் போன்றவற்றைப் பதிப்பித்தார். பல்வேறு சமய, இலக்கிய நூல்களின் தொகுப்பாசிரியராகச் செயல்பட்டார்.
கம்பராமாயணம். மகாபாரதம், அஷ்ட பிரபந்தம் ஆகியவற்றை வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியாரின் உரையுடன் புதிய பதிப்பாகக் கொண்டு வந்தார். சைவத் திருமுறைகள் பன்னிரண்டையும் உரையுடன் பதிப்பித்தார். தொடர்ந்து, பாரதியாா், பாரதிதாசன், நாமக்கல் கவிஞா் வெ. இராமலிங்கம் பிள்ளை போன்றோரின் நூல்களை மலிவு விலையில் வெளியிட்டார். இலக்கியம், வரலாறு, பொது நூல்கள், மருத்துவ நூல்கள், திருமுறைகள், இதிகாசம், புராணம், சிறார் இலக்கியம் எனப் பல வகைமைகளில் 1000-க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து தமிழில் விநாயகர் முதல் அனைத்துத் தெய்வங்களுக்குமான தமிழ் அர்ச்சனை நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்துக் கல்வெட்டில் பொறிக்க பன்னிரு திருமுறை நூல்களை அனுப்பி வைத்தார்.
பொறுப்பு
- தென்னிந்தியப் புத்தக விற்பனையார் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (BAPASI) செயலாளர்
- தென்னிந்தியப் புத்தக விற்பனையார் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (BAPASI) துணைத்தலைவர்
- தென்னிந்தியப் புத்தக விற்பனையார் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (BAPASI) செயற்குழு உறுப்பினர்
விருது
இராம. லெட்சுமணன், தனது பதிப்பகத்தின் நூல் வெளியீடுகளுக்காக அழ.வள்ளியப்பா விருது, சென்னை கம்பன் கழக விருது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் விருது, பபாசி வழங்கும் சிறந்த பதிப்பாளருக்கான விருது எனப் பல்வேறு விருதுகளைப் பெற்றார். 10-க்கும் மேற்பட்ட சிறந்த நூலுக்கான தமிழக அரசின் விருதுகளைப் பெற்றார். உமா பதிப்பக நூல்கள் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பாடப் புத்தகங்களாக வைக்கப்பட்டன.
மறைவு
இராம. லெட்சுமணன், அக்டோபர் 21, 2024 அன்று, தனது 74-ம் வயதில், வயது மூப்பால் காலமானார்.
மதிப்பீடு
இராம. லெட்சுமணன் அனுபவம் வாய்ந்த பதிப்பாளர்களுள் ஒருவர். பழைய நூல்களை உரையுடனும், புதிய எழுத்தாளர்களின் திறனாய்வு நூல்களையும் பதிப்பித்தார். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தனது உமா பதிப்பகம் மூலம் முக்கியப் பங்காற்றினார். நகரத்தார் இனத்தைச் சேர்ந்த மூத்த பதிப்பாளர்களுள் ஒருவராக மதிப்பிடப்படுகிறார்.
உசாத்துணை
- இராம. லெட்சுமணன் அஞ்சலி, தினமணி இதழ் கட்டுரை
- இராம லெட்சுமணன் வாழ்க்கைக் குறிப்பு, தினமணி இதழ்
- உமா பதிப்பகம் கட்டுரை, தினமணி இதழ்
- உமா பதிப்பக நூல்கள், ரூட் மை புக் தளம்
- உமா பதிப்பக நூல்கள், மெரீனா புக்ஸ் தளம்
- தமிழ் வளர்த்த நகரத்தார்கள், முனைவர் கரு. முத்தய்யா, வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு: ஜூலை 2018
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.