மு.மேத்தா: Difference between revisions
(Corrected Internal link name [[கண்ணதாசன்| to [[கண்ணதாசன் (கவிஞர்)|;) |
(Corrected Category:கவிஞர்கள் to Category:கவிஞர்Corrected Category:நாவலாசிரியர்கள் to Category:நாவலாசிரியர்) |
||
Line 77: | Line 77: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category: | [[Category:நாவலாசிரியர்]] | ||
[[Category:Spc]] | [[Category:Spc]] | ||
[[Category: | [[Category:கவிஞர்]] |
Latest revision as of 14:13, 17 November 2024
மு.மேத்தா (பிறப்பு: செப்டெம்பர் 5, 1945) (முகமது மேத்தா) தமிழ் கவிஞர். வானம்பாடி இதழுடன் இணைந்து இயங்கியவர். வானம்பாடி கவிதை இயக்கம் உருவாக்கிய கவிஞர். திரைப்பாடலாசிரியர். நாவலாசிரியர்.
பிறப்பு கல்வி
மு.மேத்தாவின் இயற்பெயர் முகமது மேத்தா. செப்டெம்பர் 5, 1945-ல் பெரியகுளத்தில் பிறந்தார். பெரியகுளம் வி.நி.கழக உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியும் மதுரை தியாகராசர் கலைக்கல்லுரியில் பட்டப்படிப்பும் முடித்தார்.
தனிவாழ்க்கை
மு.மேத்தா சையது ராபியா என்கிற மல்லிகா மேத்தாவை மணந்தார். அவர்களுக்கு ஐந்து மகள்கள். மு.மேத்தா சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
இலக்கியவாழ்க்கை
மு.மேத்தா மதுரை தியாகராசர் கல்லூரியில் பயில்கையிலேயே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார். 1971-ல் அவர் கோவை அரசுக் கலைக்கல்லூரிக்கு பணிமாற்றம் பெற்று வந்தார். புவியரசு, சிற்பி, பாலா, தமிழ்நாடன், முல்லை ஆதவன், ஞானி, ஜனசுந்தரம், அக்னிபுத்திரன் ஆகியோருடன் அறிமுகம் ஏற்பட்டது. வானம்பாடி கவிதை இயக்கம் உருவானபோது அதில் பங்கெடுத்தார். வானம்பாடி இதழில் கவிதைகள் எழுதினார்.
மேத்தா மரபை நிராகரிக்காத புதுமை தேவை என கருதியவர். 'மரபுக்கும் புதுமைக்கும் நான் பாலமாக இருப்பேன்’ என்று முதன் முதலாக நடந்த வானம்பாடிகள் கூட்டத்தில் கூறினார். 'இந்தப் பூமி உருண்டையை புரட்டி விடக்கூடிய நெம்புகோல் கவிதையை உங்களில் யார் பாடப் போகிறீர்கள்’ என்ற கேள்வியை வானம்பாடிகளை நோக்கி முன்வைக்கிற கவிதை எழுதினார். அது வானம்பாடி முதல் இதழிலே வெளிவந்தது. வானம்பாடி இயக்கத்தின் முத்திரை வரிகளில் ஒன்று அது.
மு.மேத்தா எழுதிய 'தேசப் பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி' என்ற கவிதை புகழ்பெற்றது. தொடர்ந்து 'கண்ணீர்ப்பூக்கள்', என்னும் தொகுதி வெளிவந்து அவர் அன்று தமிழில் எழுதிய புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவராக ஆனார்.
1975-ல் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. மு.மேத்தா இந்திராகாந்தியை புகழ்ந்து ’இந்தியா இந்திரா 75' என்னும் தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டார். வானம்பாடிகளில் சிற்பி போன்றவர்கள் அவசரநிலை கெடுபிடிகளால் ஒதுங்கிக்கொண்டனர். ஆகவே வானம்பாடி இயக்கம் பிளவுபட்டு இதழ் நின்றது.
மு.மேத்தா அதன்பின்னர் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர் ஆனார். 'கலைஞருக்கும் தமிழ் என்று பேர்' என்ற பெயரில் 2010-ல் ஒரு கவிதை தொகுதி வெளியிட்டார். 1981-ல் திரைப்படப் பாடலாசிரியராக அறிமுகமானார். தொடர்ந்து திரைத்துறையிலேயே பாடலாசிரியராகப் பணியாற்றினார்.
நாயகம் ஒரு காவியம்
மு.மேத்தா தன் பெரும்படைப்பாக எழுத எண்ணியது 'நாயகம் ஒரு காவியம்'. கண்ணதாசனின் ஏசு காவியத்தை முன்னுதாரணமாகக்கொண்டு புதுக்கவிதையில் எழுத தொடங்கிய அந்நூல் பதுருப் போருடன் நின்றுவிட்டது. அதன் பிறகான நபி வரலாற்றை எழுதும் உடல்நிலை அவருக்கு அமையவில்லை என ஒரு பேட்டியில் சொல்கிறார். 2013-ல் ரஹ்மத் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
திரைப்படத்துறை
மு.மேத்தா பாடல் எழுதிய முதல் படம் சங்கர் கணேஷ் இசையமைப்பில் 1981-ல் வெளிவந்த 'அனிச்ச மலர்'. அதன் பின் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 300-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். இரண்டு படங்களுக்கு திரை உரையாடல் எழுதியுள்ளார்.
விருதுகள்
- "ஊர்வலம்" (கவிதை நூல்) தமிழக அரசின் முதற்பரிசு
- "சோழ நிலா" (நாவல்) ஆனந்த விகடன் பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு
- ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதை நூல்) சாகித்திய அகாதெமி விருது
இலக்கிய இடம்
மு.மேத்தாவின் கவிதைகள் எழுபதுகளில் ஓங்கி ஒலித்த மூன்று பொதுவெளிக் கோஷங்களின் மொழிப்பதிவுகள். எழுபதுகளில் இந்தியப் பொருளியல் சோர்வுநிலையில் இருந்தது. வேலையில்லாத இளைஞர்கள் பெருகியிருந்தனர். அரசியலில் மாற்றத்திற்கு வழியே இல்லை என்னும் இறுக்கநிலை நிலவியது. அதற்கு எதிராக இந்தியாவெங்கும் இளைஞர் நடுவே சீற்றம் உருவானது. ஜெயப்பிரகாஷ் நாராரயணன் உருவாக்கிய மாணவர் கிளர்ச்சி, வங்கத்தில் உருவாகி இந்தியாவெங்கும் பரவிய நக்ஸலைட் கிளர்ச்சி (இடதுசாரி தீவிரவாத குழுவினர்) ஆகியவை அந்த சீற்றத்தின் வெளிப்பாடுகள். மு.மேத்தாவின் கவிதைகளில் அந்தச் சீற்றம் புனைந்துரைக்கப்பட்ட வரிகளாக வெளிப்படுகிறது. அக்காலகட்டத்தில்தான் படித்த இளைஞர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையை தாங்களே தேர்வுசெய்யும் உணர்வுநிலையை பொதுவாக அடைந்தனர். காதல் என்பது அன்றைய இளைஞர்களின் உணர்ச்சிகரமான பேசுபொருள். அவ்வுணர்வுகளை மு.மேத்தா வெளிப்படுத்துகிறார். அத்துடன் அன்று பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள், வரதட்சிணை போன்ற சமூகமுறைகளுக்கு எதிராக சீற்றம் எழுந்தது. அவையும் அவர் கவிதைகளில் உள்ளன. அவை அன்றைய உணர்வுகளை வெளிப்படுத்தியமையால் இளைஞர்களால் விரும்பப்பட்டன. ஆனால் மு.மேத்தாவின் கவிதைகள் வெளிப்படையானவை, ஆர்ப்பாட்டமான சொல்லாட்சி கொண்டவை. நவீனக்கவிதைக்குரிய நுண்ணிய வெளிப்பாடோ, மறைபிரதித் தன்மையோ, சொல்லடக்கமோ இல்லாதவை என இலக்கியவிமர்சகர்கள் நிராகரித்தனர். மு.மேத்தா வானம்பாடி மரபின் முதன்மைப்புகழ் கொண்ட கவிஞராக மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
கவிதை
- கண்ணீர்பூக்கள் (1974)
- ஊர்வலம் (1977)
- மனச்சிறகு (1978)
- அவர்கள்வருகிறார்கள் (1980)
- முகத்துக்கு முகம் (1981)
- நடந்தநாடகங்கள் (1982)
- காத்திருந்த காற்று (1982)
- ஒரு வானம் இரு சிறகு (1983)
- திருவிழாவில் தெருப்பாடகன் (1984)
- நந்தவனநாட்கள் (1985)
- இதயத்தில் நாற்காலி (1985)
- என்னுடையபோதிமரங்கள் (1987)
- கனவுக்குதிரைகள் (1992)
- கம்பன் கவியரங்கில் (1993)
- என் பிள்ளைத் தமிழ் (1994)
- ஒற்றைத் தீக்குச்சி (1997)
- மனிதனைத்தேடி (1998)
- ஆகாயத்துக்கு அடுத்த வீடு (2004)
- மு.மேத்தா கவிதைகள் (2007)
- கலைஞருக்கும் தமிழ் என்று பேர் (2010)
- கனவுகளின்கையெழுத்து (2016)
- நாயகம் ஒரு காவியம்
கட்டுரை
- திறந்த புத்தகம்
நாவல்கள்
- சோழ நிலா
- மகுடநிலா
சிறுகதை
- கிழித்த கோடு
- மு.மேத்தா சிறுகதைகள்
- பக்கம் பார்த்து பேசுகிறேன் (2008)
உசாத்துணை
- http://www.satyamargam.com/articles/common/rahmath-trust/
- மு. மேத்தா கவிதைகள் (mailofislam.com)
- மு. மேத்தா கவிதைகள் - நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி (eraeravi.blogspot.com)
- Mehtha | Interview | Literature (keetru.com)
- தூறல்கள்...: கவிஞர் மு.மேத்தாவின் காதல் கவிதைகள் (thoooralkal.blogspot.com)
- கவிஞர் மு.மேத்தா | Interview Hindu Tamil Thisai - YouTube
- மு.மேத்தா உரை | ஆரூர் புதியவன் - சொற்களால் ஒரு சுந்தந்திரப்போர் - YouTube
- கவிஞர் மு.மேத்தா - Interview - YouTube
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:36:59 IST